பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

May 9, 2010

சாம்ராஜின் ரயில் - சாம்ராஜ்

எனது முதல் ரயில் பயணம் முப்பது நாள் கைக்குழந்தையாக( அம்மாச்சி சொல்லிக் கேட்டதுதான்).என்னைப் பிரசவிக்க மதுரை வந்த என் அம்மா ஹோட்டல் சாப்பாடு பிடிக்கவில்லை என்று என் அப்பாவின் எரிச்சலின் பொருட்டு 30 நாள் குழந்தையான என்னோடு சென்னைக்குப் புறப்பட்டு விட்டார்கள். துணைக்கு என் சின்ன அம்மாச்சி. சென்னையில் என் அண்ணனும் அக்காவும் சின்ன குழந்தைகளாக் இருக்க ”இவன் கொஞ்ச நாள் மதுரையில் இருக்கட்டும்” என்று என்னைத் தூக்கிக் கொண்டு கிளம்ப பிறந்த முப்பத்தைந்து நாட்களுக்குள் ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து விட்டேன். வாழ்வில் முதல் பயணமே ரயிலில்…... நிச்சயமாக தல்லாகுளத்திலிருந்து ரயில் நிலையத்திற்கு  மாரியப்பன் கை ரிக்ஷாவில்தான் போயிருப்பார்கள். தற்குறிப்பேற்ற அணியில் சொன்னால் முப்பது நாள் குழந்தையாகவே நான் சென்னையை புறக்கணித்தேன். என் பிரியத்திற்குரிய தூசிக்கும் சப்தத்திற்குமான நகரத்திற்குத் திரும்பினேன்.

நான் மதுரையில் வளர…. பெற்றோர்கள் சென்னையில் இருக்க  சென்னை-மதுரை பயணங்கள் என் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாயிற்று.

பாண்டியன் எக்ஸ்பிரசில் பெரும்பாலும் டிக்கட் எடுத்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். சீட்டுக்குக் கீழே துண்டை விரித்து என்னைப் படுக்க வைப்பாரகள். இரவு முழுக்க தடதடக்கும் சத்தமும் இயந்திர உறுமல்களும் லேசான கணகணப்புமாய் உறங்கிப் போவேன். எனது கனவுகள் அந்த தண்டவாளங்களில் சிறுநீரோடு சேர்ந்தே சிதறியிருக்கும்.
        
ஞாபகத்தில் இருக்கும் அடுத்த ரயில் பயணம் என் பாட்டி தாத்தாவிடம் கோபித்துக் கொண்டு சென்னை புறப்பட கூட நான் துணைக்கு..அங்கு என் அப்பா பாட்டியை (சொந்த அக்காதான்) கேவலமாக ஏதோ சொல்ல போன வேகத்தில் திரும்பினோம். திரும்பும் பொழுது ரயிலில் ஏறியவுடன் உறங்கிவிட்டேன். சாப்பிட என் பாட்டி எழுப்பிய போது பாட்டியின் முந்தானை கண்ணீரால் நனைந்திருந்தது. அதன் பிறகு  பாட்டி சென்னைக்கு வரவேயில்லை.

அரைப் பரிட்சை லீவில் பத்து வயதில் வைகை எக்ஸ்பிரசில் தனியாக ஏற்றி விட்டார்கள். மறுபடி மறுபடி என் பாட்டி “சாமையா வழியில எங்கயும் எறங்கிடக் கூடாது மெட்ராசில ஒங்கப்பே வந்திருவான் அவன் ஒரு குணங்கெட்டவன் பாத்து பத்திரமா இருந்திட்டு வா” என்றார்கள். என் எதிரே. பக்கத்திலிருப்பவர் என எல்லோரிடமும் என்னைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்கள். சடாரென வண்டி புறப்பட்டது. பாட்டிக்கு சரியாக டாட்டா கூட காட்ட முடியவில்லை. ஜன்னல் கம்பியில் முகம் அழுத்தி பாட்டியைப் பார்க்க முயற்சிப்பதற்குள் வைகை ஆறு வந்து விட்டது. என்னையறியாமல் அழுகை வந்தது. பாட்டியை என்றென்றைக்குமாக பாட்டியை பிரிவது போலிருந்தது. யாரோ கேட்டார்கள் “ஆஸ்டலுக்குப் போறியா…..?”
”இல்ல அம்மா வீட்டுக்குப் போறேன்”
“அப்புறம் ஏன் அழுகிற?”
எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. டிடிஇ ”கூட யாரும் வரலயா” என்றார். ஒரு பத்து வயது சிறுவன் டிக்கட் எடுத்துக் காட்டுவது அவருக்கு என்னவோ போல் இருந்திருக்க வேண்டும். யாரோ காப்பி வாங்கித் தந்தார்கள். பாட்டி ஞாபகமாகவே இருந்தது. காலை வெயிலும், கடந்து போகும் ஸ்டேஷன்களின் பெயர்களைப் படிக்கும் வசீகரமும் அதை தற்காலிகமாய் மறக்கச் செய்தது.

அப்பொழுது வைகை எக்ஸ்பிரஸில் வாடகை நூல் நிலையம் இருந்தது. நான் திருச்சி போவதற்குள்  சுஜாதாவின் நைலான் கயிறு முடித்து விட்டேன். மறுபடி ஒடிப்போய் மேற்கே ஒரு  குற்றம், நில் கவனி தாக்கு என சுஜாதாவின் நாவல்களையே எடுத்தேன்..லைப்ரரி வைத்திருப்பவர்க்கு சந்தேகம். நிதான் படிக்கிறா.யா என்றார்.இந்த புத்தகத்திலிருந்து எதாவது கேளுங்கள் சொல்கிறேன் என்றேன். சரி போ என்றார்.  அவசர அவசரமாக படித்து முடித்தேன். திருப்பி கொடுப்பதற்கு காசை எண்ணி பார்த்தால் குறைவாக இருந்தது. யோசித்து முதலில் ஒரு புத்தகத்தை கொண்டு போய் கொடுத்தேன். இரண்டாவது புத்தகத்தை கொடுக்காமல் வைத்துக் கொண்டேன். ரொம்ப நாளைக்கு என் குற்றத்தின் சாட்சியமாய் அது என்னுடன் இருந்தது.

எக்மோர் ஸ்டேசன் மதுரை மாதிரி இலலை நிறைய கூட்டமாய் இருந்தது.  நாலைந்து பேர்  பாட்டி சொன்னதற்காக  பத்திரமாக அப்பாவிடம் ஒப்படைப்பதற்காக என்னோடு இறங்கி நின்றார்கள். என் தம்பி எங்கிருந்தோ ஓடி வந்தான் ”இந்தாருக்கான் சாமு” என்றபடி.. அந்த நால்வரில்  ஒருவர்  அப்பாவிடம் பேச முற்பட என் அப்பா அதைப் பொருட்படுத்தாமல் கிளம்பினார். சாலையில் கறுப்பு டாக்சிகளும், சிகப்பு பேருந்துகளும் ஓடிக் கொண்டிருந்தன. 17 டி யில் ஏறினோம். எனக்குப் பயமாக இருந்தது. சத்தமில்லாமல் அழுதேன். என் பக்கத்திலிருந்த அப்பா கோபமாக “எதுக்குடா அழுகிற” என்றார். “பாட்டி……” என்று சொல்ல வந்து பேசாமல் அழுதேன்.

          அந்த பயணத்தில் திரும்பி வரும் பொழுது இரவு 8.30 க்கு மதுரை வர வேண்டிய வண்டி 11மணிக்கு காலதாமதமாய் வந்து சேர, என்னை கூப்பிட ஸ்டேசன் வந்த பாட்டி என்னையும் என் ரயிலையும் காணாமல் சாமையா……சாமையா…..என்று கூப்பிட்டுக் கொண்டே அழுதபடி  நான் தொலைந்து போயே விட்டேன் என்று வீட்டிற்கு போய் யாரிடமும் என்ன சொல்ல ஏது சொல்ல என்று உட்கார்ந்திருக்க,  12 மணிக்கு சாத்தாத வீட்டுக் கதவை தள்ளினேன். சாமையா என்று என்னைக் கட்டி அழுத  பாட்டியை நான் எப்படி மறப்பேன். அன்றைய எனது பாட்டியின் பல சாமி வேண்டுதல்களை ரெம்ப வருடமாய்  தீர்த்தேன்.

       சித்தி வேலை பார்க்கும் பள்ளிக் கூடத்தில் எல்லோரும் ராமேஷ்வரம் டூர் போக மொத்த ரயில் ரயில் நிலையமும் ஜோதி ஸ்கூல் மாணவ மாணவியரால் நிரம்பியிருந்தது. என்னை சித்தி கூட்டிப் போகிறேன் என்று சொல்லியிருந்தது. சித்தியிடம் சித்தப்பா ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். வண்டி புறப்படும் வரை சித்தப்பா போவோம் போவோம் என்று சொன்னவர் புறப்படும் பொழுது என் கையை இருகப் பற்றியபடி பிளாட்பாரத்திலேயே இருத்தி விட்டார். சித்தி கை காட்டியபடி போக, மொத்த ஃப்ளாட்பாரமும் காலியாக நான் சித்தப்பா கையை உதறி தினத்தந்தி பாலம் வரை ரயிலை துரத்திக் கொண்டு ஒடினேன். யாரோ என்னை பிடித்து நிறுத்தினார்கள். மெதுவாய் அந்த கடைசி பெட்டியின் x மறைந்து போனது.

        அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி என எல்லோரும் சென்னையிலிருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான சுற்றுலா திட்டத்தில் திருவனந்தபுரம் போவதாய் திட்டம். கொல்லம் மெயிலில் புறப்பாடு.. நான் மதுரையில் ஏற வேண்டுமென்று அப்பா சொல்லியிருந்தார்.காலையில் 4.30 அல்லது 5 மணிக்கு அது மதுரையைக் கடக்கும். என்னை அந்த வண்டியில் ஏற்றி விடுவது சித்தப்பா மற்றும் மாமாவின் பொறுப்பு. சித்தப்பாவின் மீது ராமேஷ்வரம் சம்பவத்திற்குப் பிறகு அவநம்பிக்கை வந்திருந்தது. சித்தப்பா, மாமா இருவரும் தல்லாகுளத்திலிருந்து சைக்கிளை ஓட்டினார்கள். ட்ரெயின் வந்து விடுமே என்று எந்த பதட்டமும் இல்லை. இடை இடையே ”சித்தப்பா சீக்கிரம் போகலாம்” என்றேன். அவருக்கே உரிய கரகரப்பான குரலில் (மிக்ஸியில் தேங்காய் அரைக்கும் பொழுது வரும் சத்தம் போலவே இருக்கும்.) ”போவோம்டா……….” என்றார். கோரிப்பாளையத்தில் இருவரும் டீக் குடித்தார்கள். எனக்கு பால் வாங்கிக் கொடுத்தார்கள். இருவரும் புகைத்தார்கள். இருவரும் பேசிக் கொண்டார்கள். “வண்டீல எங்க போய் தேடுறதுனு தெரியல…..பார்ப்போம்……இல்லன இவன திருப்பிக் கூட்டீட்டு வந்திர் வேண்டியதுதான்.” எனக்கு அழுகை வந்தது. மெதுவாக சைக்கிளை ஓட்ட ஆரம்பித்தார்கள். கீழ்ப்பாலம் தூங்கிக் கொண்டிருந்தது. பாலம் ஓரமாக நின்றிருந்த குதிரை மாத்திரமே என் கண்ணீரைப் பார்த்தது. பாலத்தின் ஓரத்தில் வாழைப்பழ இலைகளின் காம்புகள் குவிந்து கிடந்தன. லாலா சத்திர ஏற்றத்தில் இருவரும் ஓட்டாமல் இறங்கி உருட்ட ஆரம்பித்தார்கள். ’என்னை வைத்து அந்த ஏற்றத்தில் ஓட்ட முடியாதா…..’ யானைக்கல் திரும்பும் வரை உருட்டினார்கள். மாடல் லாட்ஜ் தாண்டி, சேதுபதி ஸ்கூல் கடந்து வண்டியை சைக்கிள் ஸ்டாண்டில் ஸ்டாண்டில் போடும் பொழுது சித்தப்பா யாரையோ பார்த்தார். பேச ஆரம்பித்தார். ரயில்வே ஸ்டேசனில் ஆட்கள் வருவதும் போவதுமாக அந்த அதிகாலையிலேயெ கூட்டம் இருந்தது. சித்தப்பா பேசி விடை பெற்று ஸ்டேசனுக்குள் நுழைய கொல்லம் பாசஞ்சர் முதல் பிளாட்பாரத்திற்குள் வந்து கொண்டிருந்தது. நான் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு டிரெயினை நோக்கிப் போனேன். பெட்டிகள் வேக வேகமாக போக எந்தப் பெட்டி என் பெட்டி என் பெட்டி…..சடார் சடாரென பெட்டிகள் போனது. ஒரு பெட்டியின் வாசலில் நின்று என் அண்ணனும் தம்பியும் “இந்தா சாமு….” என்று  கூப்பிட்டார்கள். வழக்கம் போல  சித்தப்பா சத்தம் போட டிரெயினை துரத்தி ஓட ஆரம்பித்தேன்.

           பெட்டியிலிருந்து மற்றொரு சாம்ராஜை என் அப்பா இறக்கி விட்டுக் கொண்டிருந்தார் (வேறு ஒன்றும் இல்லை. மொத்த குடும்ப உறுப்பினர்களுக்குமான பயணமென்பதால் எனக்கும் சென்னையிலிருந்தே பயணச்சீட்டு.ஆனால் மதுரை வரை அந்த இருக்கை காலியாகத்தான் வரும். அது வரை பயணத்திற்கான ஒரு சாம்ராஜை  அப்பா உருவாக்கியிருந்தார்.) அந்த சாம்ராஜ்  அப்பாவைப் பார்த்து கும்பிட்டான். ”இவந்தான் சாம்ராஜ்” என்றார்  அப்பா அவனிடம். என் தம்பி பெர்த்துக்கு ஏறிவரச் சொன்னான். அந்தக் காலையிலேயே காரச் சேவு தின்னக் கொடுத்தான். இருவரும் அப்படியே உறங்கிப் போனோம்.

எழுந்து பார்த்தால் எங்கும் பச்சை பசேலென மலைகள். எஞ்சின் தெரியும் அளவிற்கு வளைவான பாதைகள். லேசான மழை வேறு.(அப்போது கொல்லம் பாசஞ்சர் புனலூர் வழியாகவே கொல்லம் போகும்.) ஏற்கனவே  அண்ணன் கதவருகே நின்று கொண்டிருந்தான். நானும் என் தம்பியும் ஊத்தை வாயுடன் அவனருகே போனோம். அது நிகழ்ந்து எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு அது போல ஒரு காலைப் பொழுது மறுபடி எனக்கு வரவேயில்லை.

        மீண்டும் ஒரு முறை அப்பா குடும்ப சுற்றுலாவாக ஹைதராபாத் கூட்டிப் போனார். இந்த முறை first class கூபே. அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி நால்வருக்கும் ஒரு கூபே. எனக்கும் என் அண்ணணுக்கு அந்நியர் இருவரோடு வேறொரு கூபே. எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டு(வீட்டிலிருந்து அசைவம் சமைத்து அதுவும் இது போன்ற ஒரு கூபேயில் மொத்த குடும்பமும் தனித்து வீடு போல் பின்னகரும் காட்சிகள் கூடவே உணவருந்தும் பொழுதுகள் இருக்கிறதே அது ஆன்மீகம்.) எங்கள் அப்பா எங்கும் இடையில் எங்கும் இறங்கக் கூடாது என்று எச்சரித்துவிட்டுப் போக நாங்கள் இருவரும் நள்ளிரவு வரை பல ஸ்டேசன்கள் இறங்கி கண்ணாடி வழியே என் தம்பியைக் கூப்பிடுவேன். அவன் எங்கள் அப்பாவிடம் அப்பாவிடம் சொல்வதற்குள் கூபேக்குள் ஓடி விடுவோம்.
       பின் பதின் பருவங்களிலும் இருபதின் தொடர்ச்சியிலும் நிறைய ரயில் பயணங்கள். ஒரு நாள் காத்திருந்தாலும் ரயிலில்தான் போக வேண்டுமென்ற அளவிற்கு ரயிலின் மீதான காதல் கூடியிருந்தது.

       என்னைப் போலவே ரயிலை நேசிக்கும் சந்தியா என்னையும் நேசிக்க என் வாழ்வில் நுழைந்தார்கள். அவர்களை காதலித்ததிற்கான காரணங்களில் ஒன்றாக தண்டவாளங்களுக்கு அருகே அவர்கள் வீடு இருந்தது கூட இருக்கலாம். ஒயாத சண்டைகளுக்கு இடையே,  பிணக்குகள் தீராத மாலைப் பொழுதுகளில் வாடிப்பட்டி ரயில் நிலையம் வரை நடந்து போவோம்.  சிமெண்ட் பெஞ்சுகளில் அமர்ந்திருப்போம். நிற்காத ரயில்களை வேடிக்கை பார்ப்போம். பினக்குகள் தீர்ந்து பெரும் காதலோடேயே நாங்கள் ரயில் நிலையத்தை விட்டு புறப்படுவோம்.

          பிறிதொரு நாள் சந்தியாவின் தோழி திருமணத்திற்கு கேரளத்தின் லக்கடி அருகே சிறிய கிராமத்திற்கு போனோம். பாலக்காடு பாசஞ்சரில் யாருமே இல்லை. முத்தம் கொடுத்துக் கொள்ளக் கூடிய தனிமை.அப்படித்தான் பிரச்சினை தொடங்கியது. பிணக்கோடேயே லக்கடி போய் இறங்கினோம். திருமணம் முடிந்திருந்தது. மாலை நிகழ்வுக்குப் பிறகு நண்பர்கள் பரத புழா ஆற்றுக்கு அழைத்துப் போனார்கள். சோகையான நிலா ஆறும் மணலும் விரிந்து கிடந்தது. சந்தியாவும் மற்றவர்களும் கரையில் உட்கார்ந்திருக்க நாங்கள் வெகு நேரம் குளித்துக் கொண்டிருந்தோம். போதுமென சந்தியா கை காட்டினார்கள். நான் தண்ணீரிலிருந்து எழுந்து வந்தேன். சந்தியா கை காட்டிய திசையில் ரயில் வந்து கொண்டிருந்தது எங்களின் சமாதனத்தை அறிவித்தபடி.

     காலம் ஒடிக்கொண்டிருக்கிறது. ரயில்களின் நிறம் மாறி விட்டன. சந்தியாவோடு இணக்கம் காண முடியா பிணக்கத்தொடு பிரிந்தாயிற்று. தம்பி அகாலமாய் ஏரியில் முழ்கி இறந்து போனான். அண்ணண் பெரியவனாய் பணம் துரத்த அமெரிககா போனான். பின்னதாய் அப்பா மரித்து போனார். ரயில் கூபேக்கள் இனி எனக்கில்லை. பாலக்காடு பாசஞ்சரையே நிறுத்தி விட்டார்கள். இப்பொழுதும் பணி நிமித்தமாய் ரயிலில் அலைந்து கொண்டுதான் இருக்கிறேன். வாடிப்பட்டி ஸ்டேசனை தாண்டும் பொழுது முறிந்து போன பிரியத்தின் ஞாபகமாய் வாசலருகே வந்து நிற்கிறேன்..ஒரு வேளை அந்த சிமெண்ட் பெஞ்சில் சந்தியா அமர்திருக்க கூடுமென……

ரயில்கள் ஒடிக் கொண்டிருக்கிணறன. என்னுடைய பால்யங்களை, காதலை, கண்ணிரை, சந்தோசத்தை, துர் சொப்பனங்களை, துயரங்களை தன் ஞாபக தண்டவாளங்களில் சுமந்தபடி…..

- சாம்ராஜ்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com