பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

May 6, 2010

யாராவது என்னை கொலை செய்யுங்களேன் - சக்தி செல்லையா

நீங்கள் என்னை என்றோ கொலை செய்திருக்க வேண்டும். 12 வருடங்கள் ஆகிவிட்டது. நீங்களும் என்னை கொலை செய்யவில்லை, நானும் எந்த பேருந்திலோ ரயிலிலோ அடிபட்டு சாகவில்லை. தற்கொலையாவது பண்ணியிருக்க வேண்டும். ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு நான் ஒன்றும் தைரியமானவன் கிடையாது. நீங்கள் என்னை விட்டு விட்டீர்கள். வெகுதூரம் விட்டு விட்டீர்கள். உங்களது கவனக்குறைவு என்று அதை கூறுவதா? இல்லை நான் திறமையானவன் என்று கூறுவதா?. இரண்டும் தான்.

நாங்கள் ஏன் உன்னை கொலை செய்ய வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு தோன்றினால் கண்டிப்பாக கிருபா மூர்த்தியை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தெரிந்து கொள்வதினால் எந்தப் பயனும் இல்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் கூறாவிட்டால் கிருபா மூர்த்திக்கு நான் நண்பன் இல்லை என்று ஆகிவிடும் அல்லது என்னைப்போல் உங்களுடன் ஒருவன் இருக்கின்றான் எனபது தெரியாமல் போய்விடும்.

கிருபா மூர்த்தி என் நண்பன். ப்ரவுன் கலர் டிராயரும் சந்தன கலர் சட்டையும் இஷ்த்ரி போட்டு தேய்த்து, கருப்பு கலரில் ஷாக்ஸும் ஷூவும் போட்டு கொண்டு மூக்கு ஒலுகியவாறு முதலாம் வகுப்பில் சேர்ந்தான். அவன் வந்த நாளில் இருந்து மூக்கொலிக்கிப் பட்டத்தை என்னிடமிருந்து அவன் அபகரித்துக் கொண்டான். பென்சில் சண்டை, ரப்பர் சண்டை என்று ஆரம்பித்து அவன் நோட்டில் கிறுக்கி வைப்பது முதல் அவன் பள்ளி பையை கிணற்றில் போடும் வரை அவனோடு எனக்கு முரண். காரணம் இல்லா அல்லது காரணம் அறியா முரண்.

அவனுடைய எல்லா பிரச்சனைகளின் தொடக்கமும் என்னிடம் தான். டீச்சரிடம் அடிவாங்கினால் அவன் என் முன் அழமாட்டான், அமைதியாக என்னை முறைத்துக்கொண்டே இருப்பான். நான் அவன் முன் அழ மாட்டேன், வலிக்கலையே என்று அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு வக்கணை செய்வேன். அவன் பள்ளிக்கு வராத நாட்கள் எனக்கு ஏதோ போல இருக்கும். நான் வராத நாட்கள் அவன் நிம்மதியாக தான் இருந்திருப்பான்.

ஒரு நாள் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு புறப்படும் வேளையில் மாடிப்படிக்கட்டில் இருந்து கிருபா தவறி விழுந்து விட்டான். மண்டை உடைந்தது. அப்போதெல்லாம் மண்டை உடைந்து விட்டால் பள்ளியே பரபரப்பாகி விடும். கண்டிப்பாக செத்துவிடுவார்கள் என்று நம்புவார்கள். கிருபாவோ மயக்க நிலையில் இருந்தான். கிருபா செத்துவிடுவான் என்று நினைத்துக் கொண்டு அவனை தூக்கிட்டு ஓடிய பியூன் பின்னாலையே ஓடினேன். பள்ளியை விட்டு வெளியே ஓடிய பியூனைக் கூப்பிட்டு ஒரு ரிக்ஷாவை காட்டினேன். அதில் நானும் பியூனுடன் சென்றேன். டாக்டர் ஒரு தையலை என் முன் போட்ட போது என்னை பார்த்துக் கொண்டே அழுதான். என்னை நோக்கிய அவனுடைய முதல் அழுகை. நான் தான் அவனுக்கு உதவினேன் என்று நம்பினான். அன்றிலிருந்து நண்பர்களா ஆனோம். எங்கள் இருவர்களுடைய அம்மாக்களும் நண்பர்களானார்கள். 

ஒன்பதாம் வகுப்பு. எங்கள் வாலிப வயதை நோக்கி நாங்கள் நகர்ந்த காலம். ஃபேனி கியூன் டீச்சர் சரித்திரப் பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள். கிருபா காலை வந்தவுடனே உன்னிடம் ஒன்று கூற வேண்டும் என்று சொல்லியிருந்தான். சரித்திர வகுப்பில் நான் கேட்டதும் சிறிது யோசித்து விட்டு தயங்கி தயங்கி கூறினான். கிருபா எப்போதும் மாலையில் டியுசன் செல்வான். டியுசன் செல்லும் பகுதியில் மார்க்கெட் தெருவை தாண்டித் தெக்கு தெரு. அதன் வழியாகத்தான் செல்ல வேண்டும். அந்த தெருவில் எப்போதும் சேட்டை செய்யும் நபர்கள் அதிகம். வெளிச்சம் அற்ற தெரு. தெரு விளக்குகள் எப்போதும் உடைந்தே இருக்கும். மாலை ஆறு மணிக்கு மேல் பெண்கள் யாரும் அந்தத்தெருவில் போக மட்டார்கள். கிருபா டியுசன் முடித்து விட்டு அந்த தெரு வழியில் சைக்கிளை உருட்டியவாறு நடந்து வந்தான். கூட்டமாக பத்து பேர் உட்கார்ந்து ஒரு போட்டி நடத்திக் கொண்டிருந்தனர். ஒரே கலகலப்பாக, சிரிப்பும் கும்மாலமுமாக இருந்தது.  கிருபா தற்செயலாக என்ன என்று எட்டி பார்த்தவன் பயந்து போய்விட்டான். ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்று புரியாமல் திகைத்துப் போனான். அனைவரும் தங்கள் பிறப்புருப்பை எடுத்து சுய இன்பத்தில் ஆழ்ந்திருந்தனர். கிருபாவிற்கு அதை வைத்து என்ன செய்கிறார்கள் என்ற ஆர்வம். அதில் அதிக தடவை எவன் சுயஇன்பம் காண்கிறானோ அவனுக்கு தெக்கு தெரு ஆண்மகன் பட்டம் மற்றும் மதுபானங்கள்.  அதில் ஒருவன் 12 தடவை ஈடுபட்டு கடைசியில் இரத்தம் வர, கிருபா பயந்து ஓடிவிட்டான்.

சரித்திர வகுப்பில் நாங்கள் இருவரும் ஆச்சரியத்தில் இருந்தோம். இரண்டு வகுப்பு வரை எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. ஒருவித கூச்சத்துடன் உட்கார்ந்திருந்தோம். காரணம் எங்களுக்குள் அவர்கள் செயல் தொற்றிக் கொண்டது என்றே கூறாலாம். பாடத்தை கவனிக்காததற்கு அன்று எல்லா டீச்சர்களிடமும் வசவு வாங்கினோம். சில வகுப்பில் வெளியே நின்றோம் ,சிரித்துக் கொண்டே.

அடுத்த நாள் நாங்கள் இருவரும் காலையில் பார்த்த போது அன்று வரை இல்லாத ஒரு சிரிப்பை சிரித்துக் கொண்டோம். இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தரிடம் அகப்பட்டுக் கொண்டோம். நான் துளவி துளவி கேட்க, கிருபா ஒத்துக் கொண்டான். அவனுடைய முயற்சி வலியிலும் தோல்வியிலும் முடிந்தது என்று கூறினான். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது சிகரெட் பிடிக்க ஆரம்பித்தோம். ரஜினிகாந்த் மாதிரி சிகரெட்டை வாயில் போட்டு பழகினோம். ரயில்வே ஸ்டேசன் மரத்தடிக்கு மட்டுமே தெரியும் நாங்கள் குடிகாரர்கள் என்று. பல முரை வாந்தி எடுத்து பீர் குடித்து பழகினோம். ”கான் பார்க்” எங்களுடைய கிரிக்கெட் மைதானம். நிஜத்தில் அது ஒரு கண்மாய். மழைகாலத்தில் இரண்டாள் உயரத்துக்கு தண்ணீர்  நிற்கும். சுற்றி கரிசல் காடுகள். காட்டில் தேடித்திருந்து கிழிக்கப்பாடாத ஆணுறையை எடுத்து ஊதி  ஆராய்ச்சி செய்தோம். நாங்கள் குடித்த பீர் பாட்டில்களின் எண்ணிக்கையும் சிகரெட்டின் என்ணிக்கையும் அந்த ரயில்வே மரத்தடிக்கும் கரிசல் காட்டிற்கும் கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

அரசுத்தேர்வு வரும் முன் கிருபாவிற்கு காதல் வந்தது. அவனுடைய காதலை என்னிடம் சொல்லவில்லை. நானே யூகித்துக் கொண்டேன். அந்தப் பெண் யார் என்று தெரிந்து கொள்ள பல காரியங்களில் ஈடுபட்டேன். ஆனால் எங்களுடன் சேர்ந்து படிக்கும் பெண் என்பது மட்டும் உறுதியானது. கிருபா பள்ளிக்கு வராத ஒரு நாள் அந்தப் பெண் யார் என்று தெரிந்து கொண்டேன். அன்று வகுப்பில், கிருபாவிற்கு விபத்து ஏற்பட்டு விட்டது, மருத்துவமனையில் இருக்கிறான் என்று ஒரு வதந்தியை பரப்பினேன். காலையில் பரப்பப்பட்டதற்கு மதியம் உணவு இடைவெளியில் பதில் கிடைத்தது. யாருமில்லாத சமயம் பார்த்து ஒரு பெண் வந்தாள். இவள் கிருபாவை பற்றித்தான் கேட்க போகிறாளா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் முன்னே தயங்கி நின்றவளிடம் நான் மூச்சற்று நின்றேன். என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. நான் நினைத்ததை விட எனக்கு பேரதிர்ச்சி. கிருபா எப்படி இருக்கிறான்?, எந்த மருத்துவமனை, என்னை அங்கே கூப்பிட்டிட்டு போக முடியுமா? என்று அவள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறமுடியாமல் வாயடைத்து நின்றேன். அவனுக்கு ஒன்றுமில்லை, நன்றாகத்தான் இருக்கிறான், யார் சொன்னது அவனுக்கு விபத்து என்று சொல்லிவிட்டு, நீ ஏன் இவ்வுளவு பதட்டப்படுற? என்று கேட்டேன். நான் கேட்கும் வரை அவள் பதட்டமற்று தான் இருந்தாள். ஆனால் கேட்டவுடன் பதட்டமடைந்தாள். ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டு வேகமாக நகர்ந்தாள். கண்டிப்பாக அன்று என்னை அவுளுக்கு தெரிந்த தகாத வார்த்தைகளால் திட்டி இருப்பாள் இல்லை தன்னையே கடிந்து கொண்டிருப்பாள்.

அவள் பெயர் வள்ளி. மாநிறம் என்றெல்லாம் கூறமுடியாது. நல்ல வெள்ளை நிறம். ஒல்லியான சருமம், அழகான கண்கள், அதன் கீழ் உள்ள கண்மை அதனினும் அழகு. நீலமாக பின்னிய ஒற்றைச் சடையும் அதில் ஒளிந்து கொண்டிருக்கும் அன்று பூத்த மல்லிகையும், மலையாளப் பெண்களைப் போல் நெற்றியில் ஒரு சந்தன கோடும் அவளை சீக்கிரம் வசீகரிக்க செய்துவிடும். நேருக்கு நேராக எவரையும் பார்க்க மாட்டாள். எப்போதும் தலை குனிந்தவாறே இருப்பாள். அடக்கமாக எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளியிடம் இருந்து தான் கற்க வேண்டும். இப்படி ஒரு பெண்ணை இந்த பூமியில் எங்கும் பார்க்க முடியாது என்று தான் தோன்றியது. கிருபாவிற்கு ஏற்ற பெண் அவள். அடுத்து வந்த சில தினங்களிலேயே அவன் காதலை என்னிடம் கூறினான்.

கிருபாவிற்கு வள்ளியும் தன்னை விரும்புகிறாள் என்பது தெரியாது. அந்த சந்தோசமான செய்தியை ஒரு நாள் கிரிக்கெட் விளையாடும் போது, ஓட்டத்தின் நடுவில் கூறினேன். மெய்மறந்து போனான். விளையாடிக் கொண்டிருக்கும் போதே, பேட்டை தூக்கி போட்டுவிட்டு என்னை இழுத்து கொண்டு கண்மாய் மேட்டிற்கு ஓடினான். நாங்கள் தோற்றுவிட்டதாக எதிரணியில் விளையாடியவர்கள் எங்களை பார்த்து கத்தினார்கள். பதிலுக்கு இல்லை நான் ஜெயிச்சுட்டேன் என்று பலமாக கத்திக்கொண்டான் கிருபா. அவள் வீட்டு தெருவில் என் செருப்புகள் தேயத் தொடங்கின அவனுடன் சேர்ந்து.

அரசு பரீட்சை முடிந்தவுடன் பள்ளியை விட்டு செல்லும் முன் அவன் காதலை வள்ளியிடம் கூறினான். வள்ளியும் தன் காதலை ஒற்றைச் சிரிப்பில் சொன்னாள். காதலைச் சொல்லிய பின் அவர்களுக்குள் என்ன பேசிக்கொள்வது என்று தெரியவில்லை. பரிட்சை நல்லா எழுதிருக்கீங்களா, உங்க டிரஸ் நல்லாருக்கு, உங்க கையில அஞ்சு விரல் இருக்கு?, எனக்கும் அஞ்சு விரல் இருக்குனு பேசிக்கொண்டார்கள். எல்லாவற்றையும் கேட்டுகொண்டு, மனதிற்குள் சிரித்துக் கொண்டு இவர்களுக்கு பாதுகாவலனாய் வகுப்பறையின் வாசலிலேயே நின்று கொண்டிருந்தேன். பின் ரகசிய தூதுவனாக மாற்றப்பட்டேன்.

கிருபா மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கும், வள்ளி இயற்பியலும் பயின்றார்கள். கல்லூரி நாட்களில் இருவருக்கும் துணையாக எப்போதும் நான் செல்வேன். பாண்டிச்சேரியில் ஆரம்பித்து தஞ்சை, சீர்காழி, சென்னை, மதுரை, தேனி, குமுளி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி , காரைக்குடி என்று பல ஊர்களை சுற்றினோம். சில சமயங்களில் இருவரையும் கண்டு பொறாமை பட்டதும் உண்டு. கிருபாவிற்கு ஜார்கண்ட் மாநிலத்தில் வேலை கிடைத்தது. ஒரு ஆட்டோமொபைல் கம்பெனி. எட்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தான். எங்களை விட்டு வெகுதூரம் செல்ல தயரானான். மதுரை ரயில்வே ஸ்டேசன் வரை வள்ளி வந்தாள். நான் சென்னை ரயில்வே ஸ்டேசன் வரை சென்று வழியனுப்பினேன். அடுத்த ஓரிரு மாதத்தில் வள்ளிக்கு ஒரு மொபைல் ஃபோன் வாங்கி அனுப்பினான். அதை வள்ளியிடம் நான் தான் கொண்டு போய் கொடுத்தேன். மொபைல்ஃபோன் வந்ததும் எனக்கு வேலை இல்லாமல் போனது. மாதம் ஒரு முறை வள்ளியை பார்க்க சென்றேன். பள்ளியில் இருந்த எந்த சுபாவமும் மாறவில்லை. கிருபாவிடம் அவ்வப்போது ஒரு சில ஆங்கில வார்த்தையும், ஹிந்தி வார்த்தையும் கலந்து வந்தது. எனக்கு அது விந்தையாக இருந்தது.

நான் வேலை தேடி சென்னை வந்தேன். அதற்கு பிறகு வள்ளியுடன் ஃபோனில் மட்டும் தான் பேசினேன். சிறிது காலம் கழித்து அதுவும் நின்று போனது. கிருபாவும் நானும் தினமும் பேசுவோம். வள்ளிக்கு ஃபோன் செய்து விட்டு அடுத்து என்னிடம் தான் பேசுவான். அடுத்த இரண்டு வருடத்தில் சென்னைவாசியாகிப் போனேன். மதுரைக்கும் எனக்கும் உண்டான தூரம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.  சென்னை மொழி என்னை கடத்திச்சென்றது. இப்போது கிருபா பேசுவது வித்தியாசமாக தெரியவில்லை.
வள்ளி வீட்டில் தன் காதலை எப்படி சொல்வது என்று தினமும் புலம்பத் தொடங்கினான். வள்ளியோ இப்போது நிலமை சரியில்லை, நேரம் வரும் போது நானே சொல்கிறேன் என்றாள். கிருபாவிற்கோ பொறுமையில்லை. அவள் வீட்டிற்கு என்னை போய் வரச் சொன்னான். ஒரு சனிக்கிழமை நான் மதுரை சென்றேன்.  அவள் வீட்டிற்கு செல்லாமல் கிருபா வீட்டிற்கு சென்றேன். கிருபாவின் அப்பாவிடம் அவன் காதலை சொன்னேன். முதலில் மறுத்த அவர், பின்பு அவன் சந்தோசம் தான் எங்க சந்தோசம் என்று கூறிவிட்டு வள்ளியை பார்க்க வேண்டும் என்றார்.


அடுத்த நாள் வள்ளியை பார்க்க செல்லூரில் உள்ள அவள் வீட்டிற்கு சென்றோம். தெருவின் இரண்டு புறங்களிலும் சாக்கடை ஓடியது. பக்கத்தில் வரண்ட நிலத்துடன் வைகையும் இருந்தது. ஆங்காங்கே பாத்திரம் பழுது பார்க்கும் தொழிலாளிகள். பச்சை கலர் வீடு. முதல் மாடியில் தான் அவள் குடியிருந்தாள். கிருபாவின் அப்பா வருவது தெரிந்தால் பயப்படுவாளோ என்று எண்ணி நாங்கள் கூறவில்லை.

வீட்டிற்குள் நான் மட்டும் சென்றேன். வள்ளி இருக்காளா என்று தெரிந்து கொண்டு பின் அப்பாவை கூப்படலாம் என்று நினைத்திருந்தேன். வள்ளியின் அம்மா மட்டும் சமையக்கட்டில் இருந்தாள். வீட்டின் முன் பகுதியில் யாரும் இல்லை. நல்ல வேளை யாரும் இல்லை. என்னால் அந்த அதிர்ச்சியை துளி அளவேனும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த ஃபோட்டோவை பார்த்தவுடன் புளியமரத்தில் ஏத்தி நடு நெத்தியில் என்னை ஆணி வச்சு அரஞ்சது போல் இருந்தது. என்னைப் போல் ஒரு முட்டாள் இருந்திருக்கவே முடியாது என்று கடிந்து கொண்டேன். வாயில் இருந்து வள்ளி என்று ஆக்கிரோசமாக கூப்பிட்டுவிட்டேன். சமையக்கட்டில் இருந்து பதட்டதுடன் வள்ளியின் அம்மா வந்தாள்.

”ரொம்ப நேரமா கூப்பிட்டிட்டு இருந்தேன், யாரும் வரல, வள்ளி எங்க?”.”அவ இங்க இல்லையே, கானாடுகாத்தான்ல இருக்கா?. நீங்க யாரு?” ”கூடப்படிச்சேன்,  பாத்துட்டு போகலாம்னு வந்தேன்.” “சரி, இனிமேல்லாம் இங்க வராதீங்க, அவ வாக்கப்பட்டு போயு ரெண்டு வருசம் ஆச்சு” என்று வெடுக்கின்னு சொல்லிட்டு உள்ளே சென்றாள்.

வீட்டிற்கு வெளியே நின்று கொண்ட்டிருந்த கிருபாவின் அப்பாவிற்கு வள்ளி வேற வீட்டுக்கு மாறி போயிட்டாங்க, நாம இன்னொரு நாள் வரலாம் என்றேன். அப்பாவை வீட்டில் விட்டுவிட்டு வள்ளிக்கு ஃபோன் செய்தேன். அவள் எடுக்கவில்லை. கிருபாவிற்கு ஃபோன் செய்தேன். சொல்லியே தீர வேண்டும் என்று முடிவு செய்தேன். சொன்னால் அவன் அங்கு என்ன செய்து கொள்வான் என்று அச்சம். தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த ஊர்களையும் சாட்சிக்கு கூப்பிட்டாலும் கூட அவளோ திரும்பி வரப்போவதில்லை, இவனையாவது திரும்பி வரவழைத்து விடலாம் என்று நினைத்தேன்.
நன்றாகவே விசாரித்தான். வீடு, ஆட்கள், கோழி முதல் நாய் வரை அனைத்தையும் விசாரித்தான். அவள் வேறு வீட்டிற்கு மாறிவிட்டாள். இன்று தப்பான வீட்டிற்கு போய்விட்டேன் என்றேன்.
”நீ பாக்காதது கூட ஒரு விதத்தில் நல்லது தான். அவுங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைனு கூடவே இருக்காளாம், இப்பதான் பேசுனா” என்றான்.
அவள் கை தொட்டு எங்கிருந்தோ வீசப்பட்ட கல் குறி தப்பாமல் என்னை தாக்கியது.
”இதுக்கு முன்னாடி எப்ப வள்ளிட்ட பேசுன?” ,”நேத்து…”,”அதுக்கு முன்னாடி?”,   ”முந்துன நாள், தினமும் பேசிக்கிட்டு தான்டா இருக்கோம்” ,”கல்யாணத்த பத்தி என்ன சொன்னா?”, ”நேரம் வரும் போது நல்லா பண்ணலாம்” என்றுகூறியதாக சொன்னான்.மேலும் துளவி துளவி கேட்ட அவன் கேள்விகளுக்கு தப்பித்தால் போதும் என்று பதிலளித்தேன். கானாடு காத்தானுக்கு பஸ் பிடித்து சென்றேன். வெளிப்படையாக பெயரைச் சொல்லி விசாரிக்க முடியாததால் கோவில், கடைத்தெரு, என்று சுற்றினேன். இரண்டு நாள் கழித்து ஒரு தியேட்டர் வாசலில் வள்ளியையும் அவள் கணவனையும் பார்த்தேன்.

முத்துதேவர் மருமகளா நீயு? பேரன எங்க என்று வள்ளியிடம் ஒரு வயதானவள் கேட்டாள். வீட்டுல அத்த கூட இருக்கான் என்று கூறிவிட்டு தியேட்டருக்குள் சென்றாள். என்னை அவள் பார்க்கவில்லை. நேரடியாக எல்லாவற்றையும் கேட்டுவிடலாமா, இல்லை கழுத்தறுத்து கிருபாவிடம் கொடுத்து விடலாமா என்று ஏதேதோ யோசனை ஓடிக்கொண்டே இருந்தது.

படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வந்தாள். டீக்கடைக்கு முன் நின்றிருந்த என்னை எதேச்சியாக பார்த்துவிட்டாள். அடுத்த நொடி கால் இடறி கீழே விழுந்தாள். அவள் கணவன் தூக்க, கண் கலங்கியவாறு என்னை பார்த்தவாறே சென்றாள். அவள் அழுதது கீழே விழுந்ததுனால் மட்டும் இல்லை என்று புரிந்தது. கிருபாவிடம் எதை சொல்வது என்று புரியாமல் ஜார்கண்டுக்கே போய் கூப்பிட்டு வந்திடலாம் என்று நினத்தேன்.

விறகு வெட்டும் கடை தாண்டும் போது வள்ளியிடம் இருந்து ஃபோன்.
பேசுவதற்கே விருப்பமில்லாமல் கோபமாக  ”என்னடி வேணும் உனக்கு?”. "என்னை மன்னிச்சிடு அண்ணேன். நான் தப்பு பண்ணிட்டேன்னன்” என்று எப்போதும் போல் தயங்கி தயங்கி பதிலளித்தாள். நீ மன்னிப்பு கேட்டு இங்கு என்னத்த வாழப்போகுது? நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க அண்ணேன்… இப்பவரைக்கும் கிருபாவ எதுக்குடி ஏமாத்திக்கிட்டிருக்க?, ஒருத்தன் பத்தாதா …__________,  ___________,   ______________ …

சிறிது மெளனத்துக்கு பிறகு அழுது கொண்டே திக்கி திக்கி பேசினாள்., நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு புரியாது. எங்க ஜாதிய மீறி எங்க அப்பா எதையும் செய்ய மாட்டார். அவருக்கு விருப்பமேயில்லாட்டாலும், எங்க ஜாதிக்காரங்க விடமாட்டாங்க. எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு கிருபாவுக்கு தெரிஞ்சா அவன் அங்கேயே செத்துடுவான். என்னால அத எந்த சந்தர்ப்பத்திலும் …….. என்று அழுதாள்.

”இவனல்லாம் எதுக்குடி அப்பன்னு சொல்லிட்டிருக்க, பண்ணது தப்பு, இதுல காரணம் வேற சொல்றியா?” மீண்டும் அழுதாள். இப்ப என்னைய என்னதான் பன்ன சொல்ற? கிருபாட்ட எப்படிடி சொல்வேன் இத,?,தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.  அவனையும் மறக்க முடியல, என் குழந்தையும் விட முடியல, இவுங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ..என்று வார்த்தை விக்க ஆரம்பித்தது. விறகு வெட்டும் சத்தத்துக்கு நடுவில் அமைதியாக நின்றேன். வள்ளியின் குழந்தை அழுகும் சத்தம் கேட்டது. இருவருக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

நான் இப்ப என்ன அண்ணேன் பண்ணுறது? என்றாள்.வாக்கப்பட்டு போனவள வெளியுல வா ன்னு கூப்புடவா முடியும். அதுவும் வெகு தூரம் போனவள என்று கூறிவிட்டு அமைதியாக நின்றேன்.சிறிது நேரம் யோசித்த பிறகு .."நான் வந்துட்டு போனது, பேசுனது எதையும் சொல்லாத. கிருபாவ நான் மாத்துறதுக்கு  நான் முயற்சி பண்றேன்.  அதுவரைக்கும்… ……தயக்கத்துடன் கேட்டாள்…..  ”அதுவரைக்கும் எப்பவும் போல என்ன பேச சொல்றீங்களா?.
"காதலிச்ச பாவத்துக்கு பண்ணித் தொலையேன்" என்றேன் கோபத்துடன்.
அவள் குழந்தை அழுதது. அக்குழந்தையின் அழுகை உனக்கு எந்த வித உரிமையும் இல்லை என்று கூறுவது போல் இருந்தது.

மன்னிச்சுக்கோ வள்ளி, எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல, நீ….நீ…பழைய வள்ளியாவே கிருபாட்ட பேசு, முடிஞ்ச அளவுக்கு உன்னைய வெறுக்கற மாதிரி பேசு, கிருபாவ மறந்துட்டு ...அண்ணேன்,……..என்று வார்த்தை கம்ம அழத் தொடங்கினாள்.சிகரெட்டை வாங்கி பத்த வைத்தேன். கண்ணீரை புகையாக்கினேன்.தயக்கத்துடன்…. ஏதாவது முக்கியாமான விசயம்னா ஃபோன் பண்ணு வள்ளி… என்று கூறிவிட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தேன். அவள் குழந்தை அழுது கொண்டே இருந்தது…. ஃபோனை கட் செய்தேன்.

சென்னைக்கு கிளம்பினேன். கிருபாவுடன் பேசுவதை முடிந்த அளவுக்கு தவிர்த்தேன். விலகினேன். இருமாதங்கள் கிருபாவுடன் பேசாமலே கழிந்தது. அவனுடைய பெயரை மிஸ்ட் காலில் பார்க்கும் போதெல்லாம் பதட்டம் தொற்றிக் கொண்டிருந்தது.. ஒருநாள் மதுரை லோக்கல் லேண்ட்லைன் நம்பரிலிருந்து ஃபோன். கிருபாவின் அப்பா அழுதார். கிருபா அழகர் கோவில் மலையில் தற்கொலை செய்து கொண்டான். தற்கொலை செய்யும் முன் வள்ளிக்கு அழைத்திருக்கிறான். நன்றாகத்தான் பேசியிருக்கிறான். அவள் குழந்தையிடமும் கூட. நான் அவனை ஏமாற்றிவிட்டேன் என்று தெரிந்தும் என்னை அழைத்திருக்கின்றான். அப்போதும் நான் அழைப்பை எடுத்திருக்கவில்லை.

பத்து நாள் கழித்து முத்து தேவர் மகனிடம் இருந்து ஃபோன். மிகவும் கீழ்தரமாக ஒரு கேள்வியை கேட்டேன் அவரிடம், "நல்லாருக்கீங்களா?" ,"என் மனைவி 2 வயசு குழந்தைய விட்டுட்டு மருந்தகுடிச்சிட்டா, முன்னாடியே நீங்க சொல்லியிருந்தீங்கன்னா, அவள யாருக்கும் தெரியாம உங்க நண்பரோட அனுப்பி வச்சிருப்பேன் சார், இப்படி கொலபாதகம் பண்ணிட்டீங்களே?"

அன்று அவன் என்னிடம் பகிர வேண்டிய அந்த வார்த்தைகள் எல்லாம் அழகர் கோவில் மலையிலேயே புதைந்து விட்டன. அவன் பெயரிட்டு இருக்கும் அவனுடைய நம்பர் இன்றும் என் மொபைலில் இருக்கிறது. வள்ளியின் குழந்தையுடைய அழுகை தொடர்ந்து என்னை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறது. அழகர் கோவிலுக்கு வழி தெரியாமல் இன்றும் சென்னை வீதிகளில் சுற்றித் திரிகிறேன், இரவுகளில்.

நீங்க ஏன் சார் இன்னும் என்னைக் கொல்லாமல் இருக்கறீங்க?

-    சக்தி செல்லையா

                           

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com