பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

May 7, 2010

அற்றவைகளால் நிரம்பியவள் - 9 - யமுனா ராகவன்

யமுனா ராகவன் அய்ரோப்பாவில் மருத்துவராய் பணிபுரிகிறார். அவர் எழுதும் ‘’அற்றவைகளால் நிரம்பியவள்" தொடர்கதை காட்சியில் தொடராய் வெளிவருகிறது. அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கே சொடுக்கவும். http://kaattchi.blogspot.com/search/label/அற்றவைகளால்%20நிரம்பியவள்  
பகுதி 9

அஞ்சனாவின் அழகான கல்லூரி நாட்களில் நிறைய நிகழ்வுகள் அவளை சுற்றி நடந்தது. அப்படி நடந்த ஒன்று தான், அவளுடைய super senior ஈஷ்வர் drug addict என்று தெரியவந்தது. நான்காவது வருடப்படிப்பை முடிக்காது எப்போதும் கஞ்சா அடித்துக்கொண்டோ, இல்லை University football ground பக்கம் இருந்த மரங்களின் கீழே வெறுமே வானத்தை பார்த்தவாறு படுத்து இருப்பார். பார்க்க கொஞ்சம் நடிகர் ரகுவரன் போன்று கருப்பாய், உயரமாய், ஒல்லியாய் இருந்த அவரை, காலைவேலையில் கல்லூரி செல்லும் போது இருந்த அதே இடத்தில் சாயந்திரம் திரும்ப வரும்போதும் பார்க்கலாம். அவருடைய தினங்கள் எப்படி இருக்கும் என்று யோசிப்பாள் அஞ்சனா. பசியுமில்லாது தூக்கமுமில்லாது, ஏதோ ஒரு sleep - wake stateல் அவர் பார்க்கும் வானம், இந்த National geographic channelல் சில சமயம், ஒரு பூவின் மீது camera freeze ஆக்கி, அந்த பூ பார்த்து நிற்கும் வானம் காலையில் இருந்து இரவு வரை எத்தனை விதமாய் மாறுகிறது என்று super speedல் காட்டுவார்களே அது போல இருக்குமோ, இல்லை விதை ஒன்று போட்டு அங்கேயே நிற்கும் time lapse camera அது முளைத்து, வளர்ந்து பூவிட்டு, பெரிதாகி, கடைசியில் காய்ந்து இறப்பதை காட்டுவதை போல இருக்குமோ அவருக்கு என்று தோன்றும். Anyways, he was caught up in Time warp zone என்பது தான் நிஜம்.


உடலில் இருக்கும் எல்லா ரத்தகுழாயும் இதயத்தில் தான் போய் முடியும். Arteries இருதயத்தில் இருந்து சுத்தமான ரத்தம் உடம்பு முழுக்க கொண்டுவரும். Veins உடல் முழுக்க இருந்து அசுத்தமான ரத்தத்தை இருதயத்திற்கு கொண்டுச்செல்லும். இருதயம் ஒரு நிமிடத்தில் 70 முறை துடிக்கும், on an average. ஒரு துடிப்பில் அது உடம்பு முழுக்க செலுத்தும் இரத்தம் கிட்டத்தட்ட 72 ml. அதாவது ஒரு நிமிடத்தில் கிட்டத்தட்ட 5 litre ரத்தம் இருதயம் வழியே போய்வருகிறது. கிட்டதட்ட 5 ஒரு லிட்டர் பெப்ஸி பாட்டில் அளவு fluid ஒரு நிமிடத்தில் உடலில் சுற்றிவருகிறது. கொஞ்சம் யோசித்து பார்த்தால், இருதயம் கல்லணை போல ஒரு பெரிய அணைக்கட்டிற்கு சமம். எந்த நேரமும் வந்து சேரும் இந்த மாபெரும் ரத்தபிரவாகத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் ஒரு பெரிய சுவர் போன்றது தான் இந்த 4 heart valves.

இந்த போதை பொருட்களால் பல விதமான உடல் உபாதைகள் ஏற்படினும், அதில் பல symptoms முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களில் சரியாகிவிடும். ஆனால் அடிக்கடி ரத்தநாளங்களில் மருந்து செலுத்தும் போது  அசுத்தமான ஊசியால் எடுக்கும் மருந்தானால், அது இருதயத்தில் இருக்கும் valvesஐப் பாதித்து, Infective endocarditis என்ற நோய் வரும். ரத்தவோட்டத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் அந்த சுவர்கள் பழுதானால், எல்லாமே முடிந்தது. அப்படிதான் ஒருநாள் இவள் கடைசி வருடம் படிக்கும் போது, ஈஸ்வருக்கு மிகவும் உடம்புக்கு முடியாது Casualty கொண்டு வந்து சேர்த்தார்கள். ஈஸ்வருக்கு மூச்சு விடமுடியாது, கைக்கால் எல்லாம் வீங்கி, severe heart failure, ஜுரத்தோடு இருந்தார். 

அந்த சமயம் அஞ்சனாவிற்கு ICU posting. மூச்சு விட முடியாது அவஸ்தை பட்டுக்கொண்டு இருந்த அவரிடம் அவள் rounds முடித்ததும் போய் அமர்ந்து பேசுவாள். Oxygen mask, IV drips, ECG leads, Nasogastric tube இத்தோடு அவரை பார்க்க பாவமாக இருந்தது. ஆப்பிள் மரத்தடியே நிழலில் ந்யூட்டன் படுத்திருப்பது போல அவர் படுத்திருந்தது தான் அவளுக்கு பிடித்தது, இப்படி beep beep சத்தங்களுடன், வெள்ளை அங்கி அணிந்து, பல்வேறு வகை வண்ண வயர்கள் சுற்றி இருந்தது பிடிக்கவில்லை. 

ஒரு காலத்தில் மிக நன்கு படித்தார் என்று சொல்வார்கள். புத்தி அதீதமானவர்களுக்கும், புத்தியே இல்லாதவர்களுக்கும் வாழ்க்கை சீக்கிரத்தில் போர் அடிக்கும் போல. இரண்டிற்கும் இடையே இருப்பவர்களுக்கு நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் அதே monotonous வட்டத்திற்குள் சுற்றுவது அத்தனை கடினம் அல்ல என்று தான் தோன்றுகிறது. All great minds have various doses of eccentricity. ``A beautiful mind`` என்ற Russell croweவின் படத்தில் அதை மிக அழகாக depict செய்திருப்பார். Brillianceக்கும் Lunacyக்கும் இடையே மிக சிறிய நூலளவு இடைவெளிதான். அதிமேதாவித்தனத்தோடு ஒட்டிவரும் விரக்தியும், purposeless feeling தான் இது போன்ற எழமுடியா பள்ளத்தாக்குகளில் தன்னையும் தள்ளுகிறதோ என்று புரியவில்லை அஞ்சனாவிற்கு.

ICUவில் posting சேர்ந்தப்பின், இரவுகளில் அங்கு தூங்கும்போது நிறைய nightmares வந்தது. அஞ்சனாவின் வாழ்வில் நடந்த அமானுஷ்யங்களை அறிவியலால் பதில்சொல்ல முடியாது போனாலும், உணரும்போது அதை மறுக்கமுடியாது போனதுதான் நிஜம். ICUவின் ஒரு மூலையில் அலுமினியமும் கண்ணாடியும் வைத்து, டாக்டர்கள் ஓய்வெடுக்க ஒரு சிறிய அறை செய்து இருந்தார்கள். கண்ணாடி திரைகள் நல்ல அழுத்தமான பச்சையிலான காட்டன் துணியால் செய்தவை. மெல்லிய ஏசி இருந்தாலும் அங்கு இருந்த ceiling fan சுற்றுவது பார்க்க சிறிது வித்தியாசமாக இருக்கும். நோயாளிகள் படுக்கும் அதே படுக்கைதான் இந்த அறையிலும் போட்டு இருந்தார்கள். அங்கு இருந்த இரவுகளில் ஒரே கனவு தான் திரும்ப திரும்ப வந்தது. ஆழ்ந்த தூக்கத்திற்கும், விழிப்பிற்கும் இடையே இருந்த அந்த நிலை பொதுவாக அஞ்சனாவிற்கு நினைவிற்கு இருக்காது. ஆனால் அங்கு தங்கியிருந்த இரவுகளில் அந்த இடைப்பட்ட நிலை நீண்டுக்கொண்டே போனது. அந்த நேரத்தில் வந்த கனவுகள், அஞ்சனாவை மிகவும் disturb செய்யக்கூடிய தன்மையோடு இருந்தது.

கட்டிலின் காலருகேயோ, தலைமாட்டிலோ ஒரு ஊதா நிற பட்டுப்புடவை கட்டிய இளம்பெண் ஒருத்தி, கழுத்தில் நிறைய நகையோடு, புது மஞ்சள் தாலியோடு, கையெல்லாம் சிகப்பும், பச்சையுமான கண்ணாடி வளையல்களோடு தங்கவளையும் போட்டு, கையில் மருதாணி வைத்து, அழகான குங்குமப்பொட்டு வைத்து, முடியெல்லாம் பறக்க, கட்டிலின் அருகே புடவையின் தலைப்பை வாயில் அழுத்தி, கண்ணில் நீரோடு, மெல்லிய குரலில் விசும்பிக்கொண்டே இருந்தது கனவா நிஜமா என்று தெரியாது ஒவ்வொரு முறையும் அதிர்ந்து எழுந்து சுற்றிமுற்றிப்பார்த்தாள். அதுவும் இதை பற்றி மங்கையிடம் பேச, இவளுக்கு முன் இதே posting செய்து முடித்த அவளும், அதே போல ஒரு பெண் அழுதுக்கொண்டே இருந்தாள் என்று சொன்னதில், நிஜமாகவே அஞ்சனா பயந்துப்போனாள். 

அதன்பின் அங்கு தூங்க அச்சமாக இருந்தது அவளுக்கு. அதனால் அதன்பின் வந்த இரவுகளில் தூங்காது விழித்தே இருந்தாள் அஞ்சனா. இப்போது அங்கேயே ஈஷ்வர் இருந்ததால், அவர் பக்கமே அமர்ந்து அவரோடு ஏதாவது பேசிக்கொண்டே இருந்தாள். Cardiology பிட்டுப்பிட்டு வைத்தார், human evolution பற்றி பேசினார். இளையராஜாவின் இசை பற்றி விவாதித்தார். சிதம்பரம் கோவில் பற்றி சொன்னார். இது சிவனை வழிப்படும் பஞ்சபூதஸ்தலம் என்றும், இங்கு இருக்கும் கோவில் ஆகாசத்தைக் குறிக்கிறது என்றார். திருமூலர் சொன்னதாக சொல்லி, திருமந்திரத்தில் வரும் ``மானுடராக்கை வடிவு சிவலிங்கம் ;மானுடராக்கை வடிவு சிதம்பரம் ; மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே`` என்றார். அதற்கு அர்த்தம் மிக complex ஆனது என்று சொல்லி, மனித உடம்பு தான் சிவலிங்கம், அதனால் உடம்பு தான் சிதம்பரம், அதுவே தான் சதாசிவம், அதில் தான் உயிர்களின் சிவதாண்டம் என்று சொல்லி சிரித்தார். அத்தோடு, ``சிதம்பரம் கோவிலின் அமைப்பு கற்பகிரகமும் அதை சுற்றியிருக்கும் வழியும் pencil கொண்டு sketch செய்து பார், It will correlate with blood circulation inside the heart and anatomy of heart, தெரியுமா. நம் இந்து மதம் பற்றி இப்படி இன்னும் நிறைய சொல்லலாம். அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்திலும்`` என்றார் மூச்சுவாங்கிக்கொண்டு.

அங்கு இருந்து தாவி கோவில் கட்டிய ராஜாக்களின் வரலாறும், இந்தியர்களின் அறிவை பற்றி சொன்னார். பூகோளத்தில் முக்கிய magnetic புள்ளிகள் அந்த காலத்து மக்கள் எப்படி கண்டுப்பிடித்து, அந்த இடங்களில் மக்கள் வந்தால், அவர்களுக்கு நல்லது என்று தெரிந்து இது போன்று கட்டியிருக்கிறார்கள் பார் என்று வியந்தார். Peruவில் இருந்த Nasca lines பற்றி சொன்னார். பேச பேச ஒரு Encyclopediaவோடு பேசுவது போல இருந்தது அஞ்சனாவிற்கு. மனது மிகவும் கஷ்டமாக இருந்தது பேச்சின் ஊடே அவருக்கு மூச்சு திணறல் வரும்போதும், நெஞ்சுவலிக்கும் போதும். அந்த கல்லூரியின் மாணவர் ஆதலால், அவருக்கு கொஞ்சம் privacy உடன் தனியறை போல தந்திருந்தார்கள். அவருடைய குடும்பத்தை பற்றியும், குழந்தை பருவம் பற்றியும் சொன்னார். எப்படி பள்ளியில் எல்லாவற்றிலும் முதலாவதாக இருந்தார் என்றார்.

அவரோடு இருந்த அந்த 8 நாளில், அப்பா இறந்த பிறகு அவளை ஈர்ப்பது போல பேசிய ஈஷ்வரை அஞ்சனாவிற்கு மிகவும் பிடித்துவிட்டது. Almost like a Crush. ஈஷ்வருக்கு ஏதாவது fresh fruit juice, எளிதாய் ஜீரணமாகும் படியான டிபன் வகைகள், படிக்க library புத்தகங்கள் எடுத்துப்போனாள். எப்போது பார்ப்போம், எப்போது பேசுவோம் அவரோடு என்று இருந்தது. ஈஷ்வரும் அதே போல அஞ்சனா வரக் காத்திருந்ததாய் அவளுக்கு தோன்றியது. தினமும் பேசுவதில் இருவருக்கும் ஆன சம்பாஷணை, சீனியர் ஜூனியர் என்றது தாண்டி, ஒரு நல்ல நட்பாக மாறி கொண்டிருந்தது.  இந்த முறை உடல் சரியானதும், exam எழுதி, அதன்பின் M.S. General Surgery முடித்துவிட்டு, cardiothoracic surgery super speciality செய்யப்போவதாய் சொன்னார். என்னோடு அப்போதும் பேசுவாயா என்று கேட்டார். அஞ்சனாவும் நிச்சயம் பேசுவதாய் சொன்னாள்.

அப்படி ஒரு இரவு அவளோடு பேசிக்கொண்டே இருந்தவர், ``அஞ்சனா, you have really big eyes. It carries something mystic. பார்க்க பார்க்க அந்த கண்கள் பிடிக்கிறது. அத்தோடு நீ சிரிக்கும்போது தெரியும் உன் உதட்டோர மச்சமும்’’ என்றார். அஞ்சனாவும் அவர் முகத்தின் முன் விரல்கள் விரித்து ``ஈஷ்வர்! இப்போது எத்தனை விரல்கள் தெரிகிறது என்று சொல்லுங்கள். உங்கள் கண் எப்படி தெரிகிறது என்று சோதனை செய்யவேண்டும்`` என்று செல்லமாக கிண்டல் செய்தாள். இருவரும் சேர்ந்து சிரிக்க, சிரிக்க முடியாது இருமல் வந்து இன்னும் மூச்சுவிட கஷ்டப்பட்டார். இன்றும் அவருடைய மாத்திரைகள் எல்லாம் கொடுத்துவிட்டு, அவர் பக்கம் நின்று பார்த்த அஞ்சனாவிற்கு, அவரை பார்க்கும் போது உள்ளுக்குள் ஒரு வாஞ்சை பொங்குவதை தடுக்கமுடியாது, அதை ஈஷ்வரிடம் சொன்னாள். அதற்கு அவர், ‘’ Girls always like bad boys ‘’ என்று கூறி சிரித்தார். சிறிது நேரம் போனதும், ``அஞ்சனா, என்னுடைய இப்போது இருக்கும் நிலை என்ன என்று எனக்கு நன்கு தெரியும். இதில் இருந்து தேறிவர நாளாகும், இந்த பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டுவரும்படி எனக்கு ஒரு பிடிப்பும் இல்லை. என்னுடைய குடும்பம், நண்பர்கள் எல்லோரோடு இருந்தும் isolate ஆகிவிட்டேன். Will you be there`` என்றார் ஈஷ்வர். இத்தனை நாள் தெரிந்தாலும் அது வெறும் பெயரளவே தெரிந்து, Junkie என்ற ரீதியில் மட்டுமே தெரிந்து இருந்த ஈஷ்வரை இந்த சில நாட்கள் பேசியதில் அவளுக்கு பிடித்தது. அவளும் ம்ம் என்று சொல்ல, கைகளை மெல்ல நீட்டினார். அவர் அருகே சென்று விரல்களை பிடித்தவளின் பார்வை அவரின் இடுங்கி போன கண்களும், ஒட்டிப்போயிருந்த கன்னமும், மெழுகு போல waxy ஆக இருந்த சருமமும் பார்த்தப்படியே இருந்தவளை, கிட்டவர சொன்னார். அவளும் செல்ல பட்டும் படாது அவளுடைய கன்னத்திற்கும், உதட்டிற்கும் இடையே இருந்த மச்சத்தின் அருகே லேசாக முத்தம் தந்து ``நன்றி அஞ்சனா! இன்று நிஜமாகவே நான் சந்தோஷமாக இருக்கிறேன். I feel better already’’ என்றார். 

எப்போதும் போல ஹாஸ்டலுக்கு காலையில் சென்று சிறிது நேரம் உறங்கிவிட்டு,  குளித்து, குதூகலமாய் கொஞ்சம் நேரம் தேடி ஒரு நல்ல சல்வார் எடுத்து, உடைமாற்றி, புத்தகமும் பழச்சாறும் வாங்கிக்கொண்டு, Scooty எடுத்துக்கொண்டு சென்றாள் அஞ்சனா. இறங்கும் முன் காற்றில் பறந்து இருந்த முடியை சரி செய்துவிட்டு, rear view கண்ணாடியில் இன்னொரு முறை முகம் பார்த்துவிட்டு உள்ளே சென்றாள். ICUவில் இருக்கும் எல்லோரும் critically ill patients. அதனால் எப்போதும் பரப்பரப்பாகவே இருக்கும் அந்த இடம். அங்கு இருக்கும் எல்லா நர்ஸும் நன்கு பழகினார்கள். சுபாசினி சிஸ்டர் அமர்ந்து இருந்த பக்கமாக பார்த்து, ``ஹை`` சொல்ல, அவள் முகம் சரியில்லாதது கண்டு, ``என்ன ஆச்சு சிஸ்டர்`` என்று கேட்டாள் அஞ்சனா. வெறுமே கண்ணை மட்டும் ஈஷ்வர் இருக்கும் அறை நோக்கி காட்ட, கால்கள் தடுமாற வேகமாய் அறையை நோக்கி சென்றாள்.

அவளுடைய consultant பழனியப்பன் சாரும், ICU incharge நீலகண்டன் சாரும், MD general medicine படிக்கும் PG student கேரளாவை சேர்ந்த ஜார்ஜும், ஈஷ்வரின் அறையில் இருந்து வெளியே பேசிக்கொண்டே வந்தார்கள். அவள் அறைக்குள் போக தொடங்க, ஜார்ஜ் சொன்னான், `` He went into Ventricular Fibrillation and arrested, அஞ்சனா. We tried resuscitating, But he didn’t make it. Sorry’’ என்று. Heart valves பழுதானால், ரத்தம் தேங்கிக்கொண்டே போகும் இதயத்துள். அதனால் ஒரு பலூன் போல இதயசுவர்கள் வீங்க தொடங்கி, பொதுவாக கைக்குள் அடங்கும் இதயம், heart failure வரும்போது இளநீர் போல பெரிதாகும். இது இருதயத்திசுக்களில் ஓடும் இதயத்துடிப்பை தீர்மானிக்கும் நரம்புகளை வெகுவாய் பாதிக்கத்தொடங்கும். பெரும்பாலுமான நேரங்களில், இதயம் கட்டுக்கடங்காது நிமிடத்திற்கு 180, 190 தடவை துடிக்க ஒரு அளவிற்கு மேல் முடியாது, இதயம் துடிப்பதை நிறுத்தும். இப்படி நடக்கும் Cardiac Dysrhythmias வெகு சட்டென நிகழும்.

அஞ்சனாவிற்கு திரும்பவும் அப்பாவின் மறைவை போலவே, இவன் இறந்துப்போனதும் மண்டைக்குள் ஏதோ ஒரு காணசகிக்காத நிகழ்ச்சியின் Rerun பார்த்தது போல இருந்தது, நேற்று இரவு அத்தனை பேசிய ஈஷ்வரின், இப்போது பேசாது இருந்த செத்த உடலை, அவளுக்கு முத்தம் தந்த உதட்டை பார்க்கும் போது அவளுக்கு ஒன்றுமே தோன்றவில்லை, மறத்துப் போனது. பெரிய சித்தன் போல பேசிய அந்த வளர்ந்தவனின், 27 வயதில் முடிந்தே போய்விட்டது அவன் வாழ்க்கை. இன்று அவனிடம் கேட்க நிறைய கேள்வி வைத்திருந்தாளே. யாரிடம் கேட்பது என்று தோண, நேற்று சொன்னானே, I feel better என்று, இன்று நெஞ்சு வலித்திருக்குமோ, இறக்கும் கணம் இவளை நினைத்திருப்பானோ, வெகுவாய் கஷ்டப்பட்டானோ என்று யோசித்துக்கொண்டே அவளுடைய அறைக்கு வந்து சேர்ந்தாள் அஞ்சனா.

இந்த 27 வயதிற்குள் என்ன எல்லாம் செய்திருக்கிறான் அவன் என்று கேட்டாள் நேற்று. மொட்டைமாடியில் மழையில் படுத்து இருக்கிறேன், வீட்டில் காசு திருடினேன் கஞ்சாவிற்காக, பைக்கில் இரவில் பாண்டிசேரியை சுற்றுவது அழகு, என்னோடு அடுத்தமுறை வருகிறாயா என்று கேட்டான். Cornetto icecream சாப்பிடவேண்டும் போல இருக்கிறது என்றான். பேசிக்கொண்டிருக்கையில் இது வரை யாராவது பாய்ஃப்ரெண்ட் இருக்கிறானா உனக்கு, முத்தம் கொடுத்திருக்கிறாயா, கட்டிப் பிடித்திருக்கிறாயா என்று கேட்டான். அஞ்சனா அதற்கு இல்லை என்று சொல்லி, உங்களுக்கு எப்படி என்று கேட்டாள். நாளை வா சொல்கிறேன் என்றான். படுக்கையில் படுத்தவள், I guess I would never know if he knew love, or if he ever made love என்று யோசித்தப்படியே உறங்கியே போனாள். Goms வந்து எழுப்பி, அவன் உடலை அவன் பெற்றோர் வந்து வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள். கல்லூரியின் பஸ் ஒன்றில் இறுதி மரியாதைக்காக பாண்டிச்சேரி போவதாய் சொன்னார்கள். அது தான் ஈஷ்வரின் ஊர். இவள் வரவில்லை என்று சொல்லி உறங்கிப்போனாள். எப்படி எதிர்க்கொள்வது என்று தெரியாத விஷயங்களையும், கணங்களை எல்லாம் தூங்கி தான் கழிப்பாள் அஞ்சனா. அவன் மேல் இருந்தது வெறும் பிரியமா, காதலா, ஈர்ப்பா, பச்சாதாபமா என்று அவளுக்கு தெரியும் முன்னமே அவன் சென்று விட்டான். எல்லோரும் வழக்கம் போல அவன் மறைந்த விஷயம் சில நாட்கள் பேசினார்கள். அதன் பின் நாட்கள் உருண்டுக்கொண்டே செல்ல, கண்ணை விட்டு மறைந்த ஈஷ்வர், கருத்தை விட்டும் மறைய தொடங்கினான்.

சில வருடங்கள் கழித்து, ஒரு பகலில் தூங்கும்போது வந்த ஒரு வண்ணக்கனவுகளில் அவன் பார்க்க healthy ஆக handsome ஆக young ஆக, நேர்த்தியான ஒரு சிகப்பு டி ஷர்ட் கறுப்பு ஜீன்ஸ் அணிந்து, பச்சை பசேலென விரிந்து இருந்த அந்த மரத்தடியே புத்தகம் படித்தப்படியே அவளை பார்த்து, கண்விரிய சிரித்து கையசைத்து கூப்பிட்டான், ``வா அஞ்சனா இந்த புத்தகம் ரொம்ப நல்லா இருக்கு. சேர்ந்து படிக்கலாம்`` என்று. அவள் இருந்த ரோட்டிற்கும், அந்த மைதானத்திற்கும் இடையே இருந்த அந்த பெரிய நீல கம்பி வலையில் எங்குமே உள்ளே நுழைய வழி இருக்கவில்லை. சுற்றி சுற்றி வந்து உள்ளே நுழையமுடியாது, மூச்சுவாங்க நின்றவளை பார்த்து சிரித்துக்கொண்டே பக்கம் வந்து, கம்பியை பிடித்தவாறு நின்ற அவளுக்கு கம்பியின் வழியாகவே முத்தம் தந்து, திரும்ப மரத்தடிக்கே சென்று புத்தகம் படிக்க தொடங்கினான் ஈஷ்வர். அவன் முத்தமிட்ட மச்சத்தை தேய்த்தப்படியே தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்தாள். அதன் பின் அவனை கனவில் காணவில்லை அஞ்சனா.

அஞ்சனாவின் பழைய நினைவுகளில் இருந்து அவளை மீட்டது கிரிஸ்டியானாவின் அழுகையும், ஃபெமினாவின் அனத்தலும். மூளையால் சில வேளைகளில் parallel ஆக இரண்டு விஷயங்களை யோசிக்க எப்படி முடிகிறதோ என்று நினைத்தப்படி, கிரிஸ்டியானாவின் தொலைந்த முகத்தை பார்த்தப்படி அவள் பதிலுக்காக காத்திருந்தாள் அஞ்சனா. மெல்ல வாய் திறந்து அவள் சொன்னாள், `` என்னால் தான் இப்படி ஆகிட்டா ஃபெமினா. என்னால தாங்க முடியலை டாக்டர்`` என்றவள், `` நான் தான் இவளை Ghettoவிற்கு அழைத்துப்போனேன். என் புது பாய்ஃப்ரெண்ட் கிராண்ட் ஆன்ஸில் கஞ்சா சப்ளை செய்கிறான். எனக்கு கொடுத்துப்பழக்கினான் இந்த ஒரு வருடமாய். என்னால் இந்த பழக்கத்தினால் மார்செலாவை பார்த்துக்கொள்ளவே முடியலை. ஒரு நாள் என்னை வந்து அழைத்துப்போக வந்தாள் ஃபெமினா. அன்றில் இருந்து பேசி பேசி இவளையும் கஞ்சாவிற்கு அடிமையாகும்படி செய்துவிட்டான். 4 வாரத்திற்கு முன்பு வீட்டில் இருந்த நாற்பதாயிரம் ரூபாய் பணம் எடுத்துவிட்டு ஓடிப்போய்விட்டாள் இவள். நானும் தெரிந்த வீடுகள் எல்லாவற்றிலும் தேடினேன். எப்போதும் போதையோடு ஒரு பெண் இருந்தால், வெளியே உடல் தேடி அலைய வேண்டியதில்லை இல்லையே, அதனால் எவனும் இவள் எங்கு இருக்கிறாள் என்று கூற மறுத்துவிட்டார்கள். நான் அலைந்து திரிந்து இன்று ஒரு வீட்டில் இருப்பதாய் கிடைத்த தகவலின் பேரில் அங்கு போனேன். ஒரு 5 ஆண்களுக்கு மத்தியில் நிர்வாணமாய் இருந்தாள் இவள். அந்த அத்தனை பேரும் இவளை``..... என்று சொன்னவளுக்கு அதற்கு வார்த்தையே வரவில்லை. ``ஃபெமினா மேலே இருந்த ஆளை தள்ளிவிட்டு, இவளை இங்கே அழைத்து வந்திருக்கிறேன். அப்போதும் என்னோடு வரமாட்டேன், அங்கேயே விட்டுடுன்னு கெஞ்சுறா இவள். ஏதாவது மருந்து கொடுங்கள் டாக்டர் எங்கள் இருவருக்கும்`` என்று கதறினாள் கிரிஸ்டியானா. இது அத்தனையும் கேட்டுக்கொண்டிருந்த அஞ்சனா உறைந்து போய் இருந்தாள்.

-யமுனா ராகவன்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com