யமுனா ராகவன் அய்ரோப்பாவில் மருத்துவராய் பணிபுரிகிறார். அவர் எழுதும் ‘’அற்றவைகளால் நிரம்பியவள்" தொடர்கதை காட்சியில் தொடராய் வெளிவருகிறது. அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கே சொடுக்கவும். http://kaattchi.blogspot.com/search/label/அற்றவைகளால்%20நிரம்பியவள்
பகுதி 13
உலகின் மிக பிரசித்தி பெற்ற ஓவியமான மோனலிசாவை அஞ்சனாவிற்கு மிக பிடிக்கும். ஒரு பெண்ணின் புன்னகையை உலகில் எப்படி எல்லாம் வர்ணிக்கமுடியுமோ, அத்தனை அர்த்தமும் பெயரும் உண்டு அந்த சிரிப்பிற்கு. அந்த பெண்ணின் பெயர் லா ஜியகோண்டா (La Giaconda), ஒரு பிரசித்தி பெற்ற பிரெஞ்ச் பிரமுகரின் மூன்றாவது மனைவியான அவளை படமாக வரைந்த போது, அவளுக்கு வயது 23 என்கிறார்கள். டா வின்சி வரைந்த அந்த உதட்டை உற்றுப்பார்த்தால் கண்களில் நிகழும் optical illusionல், சிறிது நேரத்தில் மோனலிசா சிரிப்பதை நிறுத்துவது போல தென்படும். அது மட்டும் அல்லாது அவளுடைய சிரிப்பை பார்த்தவர்களின் மனநிலையை பொறுத்து, ஒவ்வொருவருக்குள்ளும் அன்பு, சூழ்ச்சி, சோகம், குசும்பு, எரிச்சல், துரோகம், வெறுப்பு, சாந்தம், காதல் இப்படி வேறு வேறு வகையான உணர்வை தோன்றவைக்குமாம் அந்த சிரிப்பு.
அஞ்சனாவின் பள்ளிதோழியான குணா பார்க்க, பருத்திவீரன் படத்தின் முத்தழகு போல இருப்பாள். அத்தனை உயரமில்லை ஆனாலும் அவளுடைய மாநிறமும், அழகான உடலமைப்பும், தெளிவான லட்சணமான மாசு மருவில்லாத முகவெட்டும், சிகப்பு ரிப்பன் வைத்து மடித்து கட்டிய ரெட்டை ஜடை வைத்த குணாவை எட்டாம் வகுப்பு படிக்கும் போதே தனியாக தெரியவைத்தது. மிக நேர்த்தியாக உடை உடுத்துவாள். காலையில் வரும்போது போட்ட தாவணி, சாயங்காலம் பள்ளி முடித்து வீடு திரும்பும் போதும் கலையாது இருக்கும். முகம் ஒன்றும் பேசாது இருக்கையில் கூட ஒரு சிரிப்பை கண்கள் சுமந்து வருவது போல இருக்கும். அவள் சிரிப்பும் மோனலிசா போலத்தான். அவள் மேல் வெள்ளிக்கிழமைகளில் கடலைமாவு, சீயக்காய், மஞ்சளின் வாசம் அடிக்கும். நடு நெற்றியில் பொட்டு வைப்பாள். அவளின் பின்னோடு சுற்றாத ஆண்பிள்ளைகள் கிடையாது பள்ளியில். அடித்துக் கொண்டார்கள் நீ நான் என்று அவளோடு பேச. அஞ்சனாவிற்கு ஆச்சரியமாக இருக்கும் எப்படி இத்தனை பேரின் கவனத்தை திருடி, எப்படி இவளால் அமைதியாக இருக்கமுடிகிறது என்று. பத்தாவது படிக்கும்போது ப்ளஸ் 2 படித்துக்கொண்டிருந்த பிரகாஷை குணா காதலிக்கத் தொடங்கினாள். அவள் தாயார் அரசு உத்யோகத்தில் இருந்தார், தந்தையும் நல்ல வேலையில் இருக்க, வீட்டில் இவளோடு அக்காவும், அண்ணாவும் இருந்தார்கள். செய்யும் வேலைகளை மிக நேர்த்தியாக செய்பவள், அத்தோடு அத்தனை அழகாக எழுதுவாள். கணிதம் நன்கு போடுவாள், இப்படி நிறைய சொல்லலாம். பிரகாஷ் நல்ல சிகப்பு, அழகான சிரிப்பு, நல்ல பெயர் எல்லோரிடமும் எடுப்பவன். கிருத்துவ கத்தோலிக்க சமூகத்தை சேர்ந்தவன். குணாவின் வீட்டில் அவளுக்கு கிடைக்காத அன்பை அவன் கொடுத்தான் என்பதால் காதலிக்கிறேன் என்று சொன்னாள்.
வாழ்க்கையில் சில தீர்மானங்கள் எடுக்க வயதும் அதனோடு சேர்ந்து வரும் முதிர்ச்சியும் தேவையான ஒன்று தான். ‘’ Adolescence`` in Latin means to grow up . மனித வளர்ச்சியில் குழந்தை பருவத்தில் இருந்து வளர்ந்து பெரியதாகும் முன் எடுத்து வைக்கும் புது உலகம் தான் அது. இந்த வயதில் கோபங்கள், எரிச்சல்கள், பொறுமையின்மை, உடலின் மாற்றங்கள், ஏக்கங்கள் இப்படி எல்லாமே புதிது. உடல் முதல் முதல் கொடுக்கும் கிளர்ச்சியும் புதிது தான். உலகமே மொத்தமாக தனக்கெதிராக இருப்பதாக தோன்றும் சமயம் மிகவும் பயங்கரமானது. எடுக்கும் முடிவுகளின் பிடியில் நாம் பின்னர் சிக்கும் நிலைக்கு கொண்டு சென்றுவிடும்.
குணாவின் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்தது. பிரகாஷிடம் சந்தித்து பேசுவதற்காக, குணா அங்கும் இங்குமாய் இருட்டு சந்துகளில் நின்றாள். அவளின் வீட்டிற்கு தெரிந்து அவளை அடித்தார்கள். சூடு வைத்தார்கள். குணா அத்தனை நெருக்கமில்லை அஞ்சனாவிற்கு இந்த சமயங்களில். ஆனாலும் அஞ்சனாவிற்கு அவளை பார்க்க பாவமாக இருக்கும். வாழ்க்கை எப்படி ஒரு பக்கம் இருந்து இன்னொரு பக்கம் கொண்டு செல்கிறது என்பதை ஏனோ பல வருடங்கள் உருண்டோடிய சமயத்தில் தான் உணர முடிகிறது.
பள்ளி நாட்கள் முடியும் வரை ஓரளவேனும் தொடர்பு இருந்தது. பிறகு இவள் ஒரு திசையில் படிக்க செல்ல, குணா சென்னை கல்லூரியில் BBM சேர்ந்தாள் என்ற அளவே தெரிந்தது. அதன்பின் தொடர்பு முற்றிலும் இல்லாது போனது அவர்கள் இருவருக்கும். அஞ்சனாவின் வாழ்வில் அதன்பின் நடந்த நிகழ்வுகள் அவளை வேறு ஒரு திசையில் அழைத்து போனது. வருடங்கள் போக, கல்லூரி முடித்து அம்மாவோடு அவர்கள் வேலையில் உதவ தொடங்கினாள் அஞ்சனா.
அப்படி ஒரு சமயம் இருக்கும் போது, குணா வந்தாள், அம்மாவை பார்க்க, prenatal check up (குழந்தை வளர்ச்சி சரியாக உள்ளதா என்று செய்யும் பரிசோதனை) செய்துக்கொள்ள. 7 மாதம் கர்ப்பமாக, முகமெல்லாம் பூரித்து, வயிறு முந்தி வர, கையும் தோளும் பின்னுக்கு தள்ளி, கர்ப்பஸ்திரிக்களுக்கு உரித்தான typical waddling gait வைத்துக்கொண்டு, அசைந்து அசைந்து வந்த குணாவை பார்த்ததும் அஞ்சனா மிகவும் சந்தோஷப்பட்டாள். வெகுவாக நடந்த சண்டைகளுக்கும், அடிதடிகளுக்கும் அப்பால் ஒருவழியாக பிரகாஷோடு திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார்கள் என்று சொன்னாள் குணா. தன்னோடு படித்த ஒருத்திக்கு வைத்தியம் செய்யும் செய்வது வித்தியாசமான உணர்வு தான். அதுவும் தன்னோடு அதே பெஞ்சில் அமர்ந்தவள் இப்போது வயிற்றில் குழந்தையோடு என்ற உணர்வு அஞ்சனாவிற்கு குணாவின் மேல் வாஞ்சையை அதிகரித்தது.
அப்படி ஒரு சமயம் இருக்கும் போது, குணா வந்தாள், அம்மாவை பார்க்க, prenatal check up (குழந்தை வளர்ச்சி சரியாக உள்ளதா என்று செய்யும் பரிசோதனை) செய்துக்கொள்ள. 7 மாதம் கர்ப்பமாக, முகமெல்லாம் பூரித்து, வயிறு முந்தி வர, கையும் தோளும் பின்னுக்கு தள்ளி, கர்ப்பஸ்திரிக்களுக்கு உரித்தான typical waddling gait வைத்துக்கொண்டு, அசைந்து அசைந்து வந்த குணாவை பார்த்ததும் அஞ்சனா மிகவும் சந்தோஷப்பட்டாள். வெகுவாக நடந்த சண்டைகளுக்கும், அடிதடிகளுக்கும் அப்பால் ஒருவழியாக பிரகாஷோடு திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார்கள் என்று சொன்னாள் குணா. தன்னோடு படித்த ஒருத்திக்கு வைத்தியம் செய்யும் செய்வது வித்தியாசமான உணர்வு தான். அதுவும் தன்னோடு அதே பெஞ்சில் அமர்ந்தவள் இப்போது வயிற்றில் குழந்தையோடு என்ற உணர்வு அஞ்சனாவிற்கு குணாவின் மேல் வாஞ்சையை அதிகரித்தது.
அஞ்சனாவின் கண்ணிற்கு குணா இன்னும் அந்த தாவணியும் ரெட்டை ஜடையுமாய் தான் தென்பட்டாள். பிரகாஷ் என்ன செய்கிறான் என்று கேட்டதற்கு சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும், மாமியார் வீட்டில் சிறிது நாட்கள் தங்கி இருந்துவிட்டு ஒத்துவராததால் இப்போது அம்மா வீட்டிலேயே இருப்பதாக சொன்னாள். இப்படியே வாழ்க்கை சென்றால், ஒரு சில வருடங்களில் நல்ல நிலைமைக்கு வந்து விடலாம் என்று சொல்லி சிரித்தாள்.
அதன்பின் குணாவும் அஞ்சனாவும் நிறைய பேசத்தொடங்கினார்கள். பாரதி திருமணம் ஆகி சென்னை சென்றுவிட்டதால், அஞ்சனாவோடு பேச வெகு அருகில் இருந்த குணாவோடு ஏற்பட்ட புது சினேகம் பிடித்திருந்தது. குணாவிற்கும் எல்லாம் பகிர்ந்துக்கொள்ள அஞ்சனா தேவைப்பட்டாள். திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என்ற நிலை வாழ்வில் எல்லோரும் பார்ப்பார்களா இல்லை, அது காதலித்து திருமணம் செய்துக்கொள்பவர்கள் மட்டும் தான் அனுபவிப்பார்களா தெரியவில்லை அஞ்சனாவிற்கு. Drudgery of life, Rat race, Donkey work, Day to day hustle எல்லாத்துக்குமே தமிழில் ஒரே வார்த்தை தான்... குண்டு சட்டியில் குதிரை ஒட்டுவது.... என்பது தான் அது. காதல் கொஞ்சம் கசக்கும் போது இப்படி தான் இருப்பதாக குணா சொன்னாள்.
திருமணத்திற்கு உரித்தான ஏற்ற தாழ்வுகளுக்கு இடையே, குணா பிரசவித்தாள். அழகான ஒரு ஆண் குழந்தை. அப்படியே பிரகாஷின் Xerox version குழந்தை. பெயர் தேடி தேடி சூர்யா என்று வைத்தாள். சூர்யாவை பார்க்கும்போது, கையில் தூக்கும் போது, முகம் பார்த்து சிரிக்கும்போது தாய்மையின் ஓரப்பார்வை அஞ்சனாவிற்கு தெரிந்தது. பிரசவத்தை பற்றி எத்தனை பயமுறுத்தும் நினைவுகள் இருப்பினும், பாட்டி சொல்வது நினைவில் வந்தது. குழந்தையின் அழுகை சப்தம் கேட்டதும் அத்தனை நேரம் பட்ட வலி முழுக்க மறந்து போகும் என்ற பாட்டி, ஆறு குழந்தையை பிரசவித்தவர். இந்த குழந்தையை கையில் தூக்கும் போது தன்னை என்றாவது ஒரு நாள் தாயாய் நினைத்து பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை அஞ்சனாவால்.
குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தாள் குணா தடுப்பு ஊசி, ஜுரம், வயிற்றுவலி என்று. சூர்யா அழுதால் குணாவும் சேர்ந்து அழுதாள். ஊசி போடும் போது அவளுக்கு தாங்கமுடியவில்லை என்று சொல்லி அஞ்சனாவிடம் கொடுத்து சூர்யாவை பிடித்துக்கொள்ள சொல்லி, வெளியே நின்றாள். சூர்யாவும் முகம் பார்த்து சிரிக்கத்தொடங்கினான். எட்டு மாதம் ஆனதும், பேச தொடங்கினான். ``அத்தை தை தை`` என்று என்று பொக்கை வாய்க்காட்டி பேசியதில் மயங்கி போனாள் அஞ்சனா. சூர்யாவை பார்க்கும் போன போதெல்லாம் ஏதாவது வாங்கி போனாள்.
இப்படியே நாட்கள் சென்றது. பிரகாஷிடம் இந்த பிரச்சனை, அந்த பிரச்சனை என்று சண்டை போட்டாள் குணா. மொத்த நகையையும் வியாபாரத்திற்காக அடுகு வைத்தான். மீட்டு தரமாட்டேன் என்கிறான் என்று புலம்பினாள். சந்தோஷமாக வேலைக்கு காலையில் போகிறான், சாயங்காலம் திரும்ப வருகிறான், என்னை புரிந்துக்கொள்ளவே இல்லைடீ என்றாள். ஆனால் அவன் மேல் கொள்ளை பிரியம் குணாவிற்கு. சாயந்திரம் அவன் வரும் வேளையில் முகம் கழுவி, பூவைத்து, குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு, பிரகாஷ் ரயில் விட்டு வரும் வழி பார்த்து காத்திருந்தாள்.
சூர்யாவின் முதல் வருட பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக நடந்தேறியது. அஞ்சனா ஒரு பெரிய பொம்மை வாங்கி போனாள். சந்தோஷமாக இருந்தது குணாவை பார்க்க, அழகான பட்டு புடவை கட்டிக்கொண்டு பிரகாஷோடு சேர்ந்து சிரித்துக்கொண்டு இருந்தாள், சூர்யா கை கால் தத்தி தவறி நடப்பதை பார்த்தபடி. இரண்டு மணி நேரம் அங்கு இருந்துவிட்டு வந்தாள். புதிதாக ஆவடி பக்கத்தில் ஒரு தண்ணீர் பாக்கெட் செய்யும் factory lease எடுக்கப்போவதாக சொன்னான் பிரகாஷ். வெளியே கிளம்பும் முன் வழியனுப்ப வந்தார்கள் இருவரும். குணா சொன்னாள், `` அஞ்சனா! சொல்லுடி, இவர்கிட்ட இவங்க குடும்பத்தில யாரையும் நம்பவேணாம் அப்படின்னு. நான் சொன்னா கேட்க மாட்டேங்குறாரு. இவர்கிட்ட இருந்து பணம் பிடுங்கதான் பார்க்கிறாரு இவர் தம்பி லூயிஸ். மாத செலவுக்கு கொடுக்கட்டும் வேணாம் சொல்லலை. ஆனா இவர் ரொம்ப ஏமாந்து போறாரு அவங்க கிட்ட`` என்று. என்ன தான் பிரகாஷ் நன்கு பேசினாலும், இந்த விஷயத்தில் அவனுக்கு பதில் சொல்லும் அளவு நெருக்கமில்லாததால் அஞ்சனா ஒன்றும் சொல்லாது, அவனை பார்த்து சிரித்து விட்டு நகர்ந்தாள்.
சில மாதங்கள் இப்படியே நகர்ந்தது. அஞ்சனா மேல்படிப்பிற்காக தயாராகி கொண்டிருந்தாள் அந்த சமயம். ஒரு புதன்கிழமை ஆறு ஏழு மணியளவில் மொபைல் அடித்தது. அத்தனை காலையில் யார் கூப்பிடுகிறார்கள் என்று பார்க்க, குணா தான் அழைத்துக்கொண்டிருந்தாள். மொபைலை எடுத்து சிரித்துக்கொண்டே கேட்டாள், என்னடீ குணா என்று அஞ்சனா. வழக்கமாக குழந்தைக்கு ஏதாவது என்றால் தான் அப்படி கூப்பிடுவாள். அப்படி கூப்பிடும் பல நேரம் அழுகையின் ஊடே தான் அவள் குரல் கேட்கும், `` சூர்யாவிற்கு புரையேறி சிறிது நேரம் மூச்சு விட சிரமப்பட்டாண்டீ, சூர்யா பாலே குடிக்கலைடீ, சூர்யா நிறைய தூங்குறாண்டீ, சூர்யா உச்சாவே போகலைடீ ஒரு மணி நேரமா, சூர்யா தலையை இடிச்சுக்கிட்டாண்டீ`` இப்படி தான் இருக்கும். அப்படி யோசித்தப்படியே ஹலோ சொன்ன அஞ்சனாவிற்கு மறுமுனையில் இருந்த குணாவின் குரல் வித்தியாசமாக இருந்தது. விசும்பலாய் வந்த அவள் குரல் திரும்ப திரும்ப சொன்ன ஒரே விஷயம் ``இங்க வா அஞ்சனா சீக்கிரம், please. இப்பவே வா`` என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். குரலில் ஏற்றதாழ்வு இல்லாததோ, சப்தமோ, இல்லை என்னமோ ஒன்று அஞ்சனாவிற்கு புரியாத போதும், ஏதோ அசம்பாவிதம் என்ற மட்டும் புரிந்தது.
சட்டென குளித்து ஒரு அரைமணி நேரத்தில் அவள் குணாவின் வீட்டின் முன் நின்றாள். வீட்டின் முன் ஒரு நான்கைந்து பைக்கும், சிலர் அங்கங்கே நிற்க, என்ன நடந்தது என்று புரியாமலேயே உள்ளே சென்றாள் அஞ்சனா. குணா உள்ளே இருந்த நிலைவாசற்படியில் சூர்யாவை மடியில் கிடத்தியபடி, அவனை நெஞ்சோடு அழுத்தியபடி, முன்னும் பின்னுமாய் அசைந்துக்கொண்டே இருந்தாள், கண்கள் வெறித்து பார்த்தபடி.
அஞ்சனாவோடு வேறு யாருமே பேசவில்லை. குணாவின் பக்கம் அமர்ந்து, என்னடீ ஆச்சு! யாருக்கு என்ன என்று கேட்டாள். அவள் ஒன்றுமே பேசாது, அஞ்சனாவின் கையை அழுந்தப் பிடித்த படி இருக்க, ஏதோ அசம்பாவிதம் என்ற மட்டும் புரிந்துக்கொள்ள முடிந்தது. குணாவின் தங்கை பெயர் ப்ரியா. காலேஜ் இரண்டாம் ஆண்டு microbiology படித்துக்கொண்டிருந்தாள். கண்கள் குளமாக அஞ்சனாவிடம் வந்து, `` அக்கா! இப்படி ஆகி போச்சே! அக்கா`` என்று அழுதாள். என்ன நடக்கிறது என்று கிரகிக்கும் முன், ஒரு வெள்ளை ஆம்புலன்ஸ் வந்து நிற்க, அந்த இடமே அரக்க பரக்க மாறியது. வண்டியில் இருந்து லூயிஸ் இறங்கி குணாவிடம் வர, `` பாவிங்களா என்னடா பண்ணீங்க அவனை. `` என்று எழுந்து போய் சட்டையை பிடித்தாள் அவள்.
அஞ்சனா பார்க்கும்போதே stretcherல் ஒரு உருவத்தை இறக்கினார்கள் வெள்ளை துணியால் முழுக்க போர்த்தியபடி. சட்டென எல்லோரும் கூக்குரலாய் அழத்தொடங்க, அது வரை மடியில் தூங்கிக்கொண்டிருந்த சூர்யா பயந்து எழுந்து அழத்தொடங்கினான். அஞ்சனா, சூர்யாவை சமாதானப்படுத்தி, பெரிதாய் அழுதுக்கொண்டிருந்த ப்ரியாவிடம் கொடுத்து குழந்தையை மாடி அறையில் வைத்துக்கொள்ள சொன்னாள். அதற்குள் வந்து இறங்கிய உடலை பதப்படுத்தும் குளிர்சாதனபெட்டியில் வைத்தார்கள் பிரகாஷை. முகத்தை திறக்க, அடையாளமே தெரியாது போனது அஞ்சனாவிற்கு.
அத்தனை சிகப்பாய், ஒல்லியான பிரகாஷின் முகம் கறுத்து ஊதிப்போய், முகத்திலும் வெளியே தெரிந்த கை காலும் வீங்கி கரும்பச்சையாய் மாறி, நாக்கு தள்ளி, அழுக தொடங்கி இருந்தது. சுற்றி சுற்றி வைத்த ஊதுபத்தி, சாம்பிராணி, air freshner தாண்டி வந்த அழுகிய வாடை வீடு முழுக்க பரவியது. அஞ்சனாவிற்கே நெஞ்சு அடைத்தது பிரகாஷை அப்படி பார்க்க. குணா அழவில்லை, அனத்திக்கொண்டே இருந்தாள். திங்கள் காலை வழக்கம் போல வேலைக்கு சென்னை சென்று, மதிய வாக்கில் தொலைப்பேசியில் அழைத்து குணாவிடம் அவசரவேலை நிமித்தம் அவனை உடனடியாக பெங்களூர் போக சொல்லி இருப்பதாகவும், திரும்ப வருவதை பற்றி பிறகு சொல்வதாக சொல்லிவிட்டு வைத்தானாம். பத்திரமாக இருக்கும்படி குணா அவளிடம் கூறி வைத்தாள். செவ்வாய் கிழமை முழுக்க ஒரு பதிலும் இல்லை அவனிடம் இருந்து, அவனுடைய மொபைலும் ‘’ Out of coverage area ‘’ என்றே சொல்லிக்கொண்டு இருந்ததாம். புதன்கிழமை விடியல் நான்கு மணிபோல வந்த ஒரு போன்காலில் லூயிஸ் அவளிடம் சொன்னதெல்லாம் பிரகாஷ் இறந்துவிட்டான் என்பது தானாம்.
இவளிடம் பெங்களூர் செல்வதாக பொய்சொல்லிவிட்டு, தம்பியும் இன்னும் ஒரு 4 நண்பர்களோடு வேளாங்கன்னி, நாகூர் என்று ஒரு சிறு பயணம் போக தயாராகி கிளம்பி போயிருக்கிறான் பிரகாஷ். வேளாங்கன்னி கோயில் செல்லும் வழியில் இருந்த ஒரு குளத்தில் குளிக்க செல்ல (? குடித்து விட்டு) அங்கு செடியில் சிக்கிக்கொண்டு இறந்து போனதாக லூயிஸ் சொன்னான். லூயிஸ் செவ்வாய்கிழமை காலையில் தான் குளத்தில் சிக்கினான் என்றான். கூட சென்ற ஒரு நண்பன் திங்கள் சாயந்திரமே மாட்டிக்கொண்டான், யாராலும் குளத்தில் இறங்கி தேடமுடியவில்லை, அதனால் அடுத்த நாள் தான் தேட தொடங்கினார்கள் என்றான். இன்னொருவன் செவ்வாய்கிழமை சாயந்திரம் தான் இப்படி மாட்டினான் என்றான். இப்படி ஆளுக்கொரு கதை சொல்ல, எப்போது இறந்தான் என்றே தெரியாத நிலையில் குணாவின் அனத்தல் அதிகமானது.
குணா, `` பாருடீ! அஞ்சனா... பார்த்து பார்த்து ஆசைப்பட்டேனே.. என்கிட்ட பொய் சொல்லிட்டு, போயே போயிட்டான் பாரு. வெயில கொஞ்சம் போனா தோல் எறியுதும்பானேன்... பாரு எப்படி வந்து இருக்கான். இது அவன் தானா கொஞ்சம் நல்லா பார்த்து சொல்லுடீ. எனக்கு அடையாளம் தெரியலை என் புருஷந்தானான்னு. பாவி பய! என்னையை விட்டு போறதுக்காடி, என்னை இப்படி சுத்தி சுத்தி வந்தான். ஐய்யோ! எனக்கே அடையாளம் தெரியலையே. என் புள்ள எப்படி பார்ப்பான் இந்த முகத்தை`` என்று வெறித்த பார்வையோடே, அழாது லேசான குரலோடு பேச பேச அஞ்சனாவிற்கு தாங்கமுடியவில்லை. தோழியை கட்டிப்பிடித்துக் கொண்டாள். மனது வலித்தது. அவனை post-mortem செய்து தான் அனுப்பியிருந்தார்கள். அதற்குள் வீடு முழுக்க ஜே ஜே என்று ஜனம் சேர்ந்தது.
பிரகாஷின் அம்மா வந்து என் புள்ளயை என் வீட்டில் இருந்து தான் கல்லறைக்கு கொண்டு போகவேண்டும் என்று சொல்லி பேச, குணா எழுந்தாள். கல்லறைல கொண்டு போய் வைக்க உங்க கிட்ட காசு இருக்கா என்ற கேள்விக்கு பதில் இல்லாது அடங்க, திரும்ப வந்து அஞ்சனாவிடம் அமர்ந்தாள். இதற்குள் பள்ளி, கல்லூரி, கூட வேலை செய்பவர்கள், சர்ச் சேர்ந்தவர்கள், குணாவின் சொந்தம் என்று எல்லோரும் வர, குணாவை கட்டி பிடித்து அழுதார்கள். ஓலமிட்டார்கள். அஞ்சனாவிற்கு அந்த இடத்தில் இருந்து உடனே போய்விடவேண்டும் என்று தோன்ற, எழ முற்பட, குணா கையை கெட்டியாக பிடித்துக்கொண்டு, ``என்னை இங்க தனியா விட்டுட்டு போயிடாதே டீ அஞ்சனா! எனக்கு ரொம்ப பயமா இருக்கு`` என்றவளை பார்க்க நெஞ்சே அறுந்து போனது.
இன்னும் இறுக்கமாக கட்டிப்பிடிக்க, குணா அஞ்சனாவின் தோளில் சாய்ந்து கொண்டு ஏதோ படமொன்றை பார்ப்பது போலவே பார்த்துக்கொண்டிருந்தாள். இருவரும் பேசாது உறைந்து போய் இருந்தார்கள். சுற்றி நடப்பது கண்ணில் பதிந்தாலும், மனதில் பதியவில்லை அஞ்சனாவிற்கு. குணா அனத்தல் மட்டுமே தான் கேட்டது. `` அஞ்சனா! சட்டைல லேசா அழுக்கான கூட பிடிக்காதுடீ. இப்படி வந்து இருக்கானே பொட்டலமா அழுகி போயி. எனக்கு அவன் முகத்தை பார்க்கவே பயமா இருக்குடீ. இதுக்கு அப்புறம் இவனை நிஜமா பார்க்கவே முடியாதாடீ. அது அவன் தானா, வேற யாராவது இருக்குமா டீ. எனக்கு தெரியலையே, ஐய்யோ! இவன்கூட தானே தினம் தினம் படுத்தேன். எனக்கு அவனா இதுன்னு தெரியலையே. அம்மா... அம்மா`` என்று முனகிக்கொண்டே இருந்தாள்.
இதன் ஊடே யாரோ குழந்தைக்கு அப்பாவின் முகத்தை காட்டுங்க அப்படின்னு சொல்ல, அஞ்சனாவிற்கு பத்திக்கொண்டு வந்தது. யாரை சந்தோஷ படுத்த குழந்தை முகத்தை பார்க்கணும். இப்படி பார்த்தாலும் அவனுக்கு ஒன்றும் நினைவுக்கு இருக்காது. அதனால வேண்டாம் என்று தீர்த்து சொன்னாள். குணாவும் ஒத்துக்கொண்டாள் இதற்கு. கல்லறையில் அடக்கம் செய்ய தேவையான வேலைகளுக்கு லூயிஸ் வந்து வந்து குணாவிடம் காசு வாங்கினான்.
ஒரு மதியம் 1 மணி ஆகியிருக்கும். குணா பிதற்றத்தொடங்கினாள். ``அஞ்சனா! அழுகி போய் நாறுறாண்டீ என் பிரகாஷ். எடுத்துட்டு போக சொல்லுங்க. அவனை சீக்கிரம் எடுத்து போங்க இங்க இருந்து`` என்று ஓங்கி கத்தத்தொடங்கினாள். நிஜமாகவே வயிறு இன்னும் வீங்கி, முகம் இன்னும் வீங்க தோலெல்லாம் வழட்டி கொண்டு அந்த இடத்தில் இருந்து ரத்தம் கசிய தொடங்கியது அவனுக்கு. வந்தவர்கள் எல்லோரும் ஒத்துக்கொள்ள, முகத்தை போர்த்தியபின் சூர்யா கூட்டி வந்தார்கள். கல்லறைக்கு எல்லோரும் போக, குணாவும் நடந்தாள் சூர்யாவை தூக்கியபடி. பாதிரியார் பேசி முடித்து அடக்கம் செய்தார்கள். கொஞ்ச நேரத்தில் எல்லோரும் கலைய தொடங்கினார்கள். அஞ்சனா, சூர்யா, குணா இன்னும் சிலர் மட்டும் அங்கேயே இன்னும் சிறிது நேரம் நின்று, பிறகு கிளம்பினார்கள் அங்கு இருந்து.
அதன் பின் வீடு வந்த அஞ்சனாவிற்கு தூங்க நாட்கள் பிடித்தது. இது நடந்து சில மாதங்கள் ஆனபிறகு ஒரு இரவு 4 மணிவாக்கில் தொலைபேசியில் குணா அழைத்தாள். தூக்கத்தில் இருந்து எழுந்து பேச முனைய, குணா ஓவென்று கதறினாள். என்ன குணா என்று பரிவாய் கேட்க, அஞ்சனா ``என் கனவில பிரகாஷ் வந்து, வாடீ உங்கூட இருக்கணும் நானு அப்படின்னான். We started making love. நிஜமா அவனோடு இருந்த மாதிரியே இருந்தது. கொஞ்ச நேரத்தில என்னை சுத்தி ஒரே அழுகின வாடை. கண்ணு முழுச்சு பார்த்தா, கனவா நினவான்னு தெரியலை, அவந்தாண்டி என்மேல ஊதி போய் நாக்கு தள்ளி கண்ணுல இருந்து ரத்தம் வர என்னை செய்யுறான். பயந்து போய் கத்திட்டே எழுந்துட்டேண்டீ. பார்த்தா என் படுக்கை முழுக்க ரத்தமா இருக்கு! அஞ்சனா. Im bleeding so heavily suddenly. அஞ்சனா நான் என்னடீ பண்ணுவேன்.`` என்று அழுதவளை எப்படி தேற்ற என்று தெரியவே இல்லை அஞ்சனாவிற்கு.
இது போல சில நாட்களும், எனக்கு அவனை இப்பவே பார்க்கணும் போல இருக்கே அஞ்சனா என்று சில நாட்களும், என்னால முடியலைடீ என் உடம்பு கொதிக்குதேடீ, என்ன செய்யட்டும் என்று கதறலாய் சில நாட்களும், என் முன்னாடியே என் அக்காவும் மாமாவும் கொஞ்சுறாங்கடீ. எனக்கு வயித்தெரிச்சலா இருக்குடீ என்று சில நாட்களும் சென்றது. பிரகாஷ் இறந்தபின் என்னிடம் இத்தனை கடன் வாங்கியிருந்தான், அத்தனை கடன் வாங்கியிருந்தான் என்று வந்த கூட்டத்திற்கு பதில் சொல்லியே நொந்தாள் குணா.
கூட படித்த பள்ளி நண்பர்களும், பிரகாஷின் வேலை நண்பர்களின் பார்வையே மாறிவிட்டது என்று சொன்னாள். பேசி முடிக்கையில் ஏனோ படுக்கைக்கு அழைப்பு தான் வந்தது எல்லோரிடம் இருந்தும் என்று அழுதாள். எங்கு போனாலும் காட்சி பொருளாகி போனாள் குணா. பகலில் பரிதாப போர்வையில் வரும் ஆண்களிடம் இருந்து தப்பவும், இரவில் விரகத்தின் பிடியிலும், கனவில் திரும்ப அழுகிய வாடையோடு பிரகாஷ் வருவானோ என்ற பயமும் ஏக்கமும் கொண்டும், குழந்தையை எப்படி வளர்க்க போகிறோம் என்ற குழப்பமும், அத்தனை நாள் நன்கு பழகிய பெண்கள் கூட அவள் எந்த ஆணோடு பேசினாலும் இவளின் கற்பொழுக்கத்தை பற்றி புதிதாக சொல்ல தொடங்கிய குறைகளையும் கண்டு ஓய்ந்து போனாள் அஞ்சனாவின் தோழி.
23 வயதில் கைம்பெண் என்றாலும் அத்தனை நாள் அழகாய் உடுத்துகிறாய் என்று வந்த comments, இப்போது கொஞ்சம் ஜாஸ்தியா தாண்டி பண்ணுறா அலங்காரம் என்று மாறிவிட்டது கண்டு அஞ்சனாவிற்கு அத்தனை கோபம் வந்தது. இது அத்தனையும் தாங்கி குணா இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் சூர்யாவோடு. இப்போது ஆயிற்று சூர்யாவிற்கு 9 வயது. அஞ்சனாவின் வாழ்க்கையில் அவளை பாதித்த எத்தனையோ பெண்களில் முக்கியமான ஒரு பெண் குணா. ஆனால் இன்னமும் அவளை ஆண்கள் பார்க்கிறார்கள், முயற்சிக்கிறார்கள். அவர்களை தாண்டி இன்னமும் நடக்கிறாள். அவள் போகும் வழியில் இன்னமும் எல்லோரின் கவனமும் அவள் மேல் தான். ஆனால் குணா இன்னமும் மோனலிசாவின் புன்னகையோடு தான் வளைய வருகிறாள். அஞ்சனாவிற்கு தான் தெரியும் பார்க்கும் போதே மறையும் குணாவின் புன்னகை பற்றியும், பார்க்கும் அத்தனை பேரும் அவள் சிரிப்பிற்கு அவரவற்கு ஏற்றவாறு பெயரிடுவது பற்றியும்.
- தொடரும்
- யமுனா ராகவன்

