பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 27, 2010

வெற்றிடம் - அ.கணேஷ்ராஜ்


எனக்கு அப்போது நான்கு வயது இருக்கும் ஒரு நாள் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுப்பபட்டேன். “டேய் சதீசு எந்திரிடா... ஊருக்கு போனும்ல” அப்பாதான் எழுப்பிaனார். வேறு யார் எழுப்பினாலும் எழுந்திரிக்க மாட்டேன் என்பதால் மற்றவர்கள் என்னை எழுப்பும் முயற்சியில் ஈடுபடாமல் அப்பாவிற்கு பின்னால் நின்றிருந்தனர். அப்பாவின் குரல் கேட்டு நான் எழுந்து உட்கார்ந்ததும் அய்யா அதாவது அப்பாவின் அப்பா “எந்திரிப்பா சீக்ரம் பல்லு விளக்கிட்டு குளி பஸ்ஸூ வந்திரும்” என்றார். நான் இருந்த அறையில் உமிழப்பட்டிருந்த வெள்ளை நிற வெளிச்சம் என் கண்களை கூசச்செய்ய கண்களை சுருக்கியபடியே எழுந்தேன்.அம்மா அடுப்படியில் குண்டு பல்பின் மஞ்சள் நிற வெளிச்சத்தில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தாள். நான் நடந்து சென்று உள் வாசலில் முகம் கழுவிக்கொண்டிருந்தேன் “சதீசு எந்திரிச்சிட்டியாயா.. பல்லு விளக்கு காபி போடுறேன்” என்னிடம் பேசியபடியே அம்மா இட்லி சட்டியின் மூடியைத் திறந்தார் குப்பென்று ஆவி பறந்தது.

பின்பக்கம் அப்பா குளித்துக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. சட்டென பல்பொடியை எடுத்து பல் விளக்க ஆரம்பித்தேன். அப்பா குளித்துவிட்டு வந்துவிட்டார். “ இன்னமுமாடா பல்லு விளக்குற சீக்கிரம் போய் குளிடா” சொல்லிவிட்டு அப்பா உள்ளே சென்றார். வெள்ளை வேஷ்டி சட்டையுடன் வெளியே வந்தார். நான் அம்மா கொடுத்த காபியை குடித்துக் கொண்டிருந்தேன். சீக்கிரம் குடிச்சுட்டு கிளம்புடா, லெட்சுமி இவன சீக்ரம் குளிப்பாட்டி கிளப்பி விடு நான் இந்தா வந்துர்றேன்

“ஏங்க உங்களுக்கு டீ..” அம்மா கேட்க அப்பா வேண்டாம் என்று சொல்லியபடி வெளியே சென்றார். அம்மா என்னை குளிப்பாட்டி விட்டு அந்த அதிகாலை வேளையில் சாப்பிட சுடச்சுட இட்லி கொடுத்தாள். ஐந்தரை மணிக்கு இட்லி சாப்பிடவே முடியவில்லை போற வழியில பசிக்கும் ரெண்டு இட்லி சாப்புடுப்பா” என்று கூறி அம்மா சாப்பிடச்சொன்னாள். நான் சாப்பிட்டு கொண்டிருக்கும்போதே அப்பா வந்துவிட்டார் “அட.. இன்னமுமாடா கெளம்பாமா இருக்க” வழக்கம் போல் அப்பா குரல் உயர்த்தி சொன்னார் “இருங்க ரெண்டு வாய் சாப்புடட்டும், பஸ்ஸூ ஒன்னும் இப்ப வராது” அம்மா என்னை சாப்பிட வைப்பதிலேயே குறியாய் இருந்தாள். “அம்மா போதும்மா எனக்கு வேண்டாம் வாந்தி வர்ற மாதிரி இருக்கு”  என்று நான் தட்டை நகற்றி வைக்க அம்மா தட்டை தன் கையில் எடுத்துக் கொண்டு இட்லியை கையில் எடுத்து “ஒரு இட்லி சாப்டுப்பா”  என்றாள். கெஞ்சும் தோரணையில். “அவந்தான் வேண்டாங்கிறான்ல விடேன்” என்று அப்பா கூற “நீங்க கொஞ்சம் பறக்காம இருங்க கும்பகோணம் போக எம்புட்டு நேரமாகும் போற வழியில பசிச்சா என்ன பண்ணும் புள்ள. உங்களுக்கு என்ன.. போற வழியில ஏதாவது டீக்கடையில டீயக்குடிச்சுட்டு அக்கடான்னு இருப்பீங்க இவன் பட்டினியாவா இருப்பான்அம்மா கோபப்பட்டாள், அப்பாவிடம் இவ்வளவு சத்தமாக அம்மா பேசி நான் பார்த்த்தில்லை. “ஆமாமா போற வழியில ஹோட்டலே இருக்காது பாரு.... புதுக்கோட்டையில சாப்டுக்கலாம்” என்று அப்பா கூறிய அடுத்த நொடி எனக்குள் உற்சாகம் வந்தது. ‘ஹோட்டல்ல சாப்புட போறோமா.. இந்த இட்லிய இனி ஒரு வாய் கூட சாப்பிடக்கூடாது’ என மனதிற்குள்ளே முடிவெடுத்து எழுந்துவிட்டேன், அம்மாவின் முகம் வாடியது. அதிகாலையில் எழுந்து அம்மா பட்ட கஷ்டங்களை எல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு செல்கிறேன் என்று அப்போது எனக்கு தெரியாது.
ஹாரன் சத்தம் கேட்க வீடே பரப்பரப்பானது. படுத்திருந்த அப்பத்தா எழுந்து வர “எல்லார்கிட்டயும் சொல்லிட்டு கிளம்பு” என்றார் அப்பா. “அப்புத்தோவ் போய்ட்டு வர்றேன், அய்யா போய்ட்டு வர்றேன்”  என்று கூறிவிட்டு அம்மாவிடம் சென்றேன் “அம்மா போய்ட்டு வர்றேன்மா” அம்மாவிற்கு கண்கள் கலங்கியது உடைந்த குரலில் “போய்ட்டு வாய்யா.. நல்லபடியா போய்ட்டு வா”. நான் தலையாட்டியபடியே அப்பாவுடன் வெளியே சென்றேன்.

அம்மா கதவருகே நின்றபடி கலங்கிய கண்களுடன் நான் போவதை பார்த்துக்கொண்டிருந்தாள். அம்மா ஏன் அழுகிறாள் என்று எனக்கு அப்போது புரியவில்லை நான் ஒரு புது ஊருக்கு அப்பாவுடன் போகிறேன் என்கிற சந்தோஷம் மட்டுமே இருந்தது இப்போது ஹோட்டலில் சாப்பிடப்போகும் சந்தோஷம் வேறு. போகும் வழியெல்லாம் நான் சாப்பிடப்போகும் பூரியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். புதுக்கோட்டை போய் சேர்ந்ததும் அப்பா மறந்திடக்கூடாது என்பதற்காக “அப்பா பசிக்குதுஎன்றேன். ஹோட்டலுக்கு அப்பா அழைத்துச்சென்றார்.

எங்கள் டேபிளுக்கு சர்வர் வருவதற்காக காத்திருந்தோம், பக்கத்து டேபிளில்  ஒருவர் பூரியை கருக் முருக்’ என சாப்பிட்டுக் கொண்டிருந்தார் நான் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். “என்ன வேணும்னே..” குரல் கேட்டு நான் திரும்பி பார்க்க சர்வர் அங்கு நின்று கொண்டிருந்தார். அப்பா சர்வரைப் பார்க்க நான் அப்பாவைப் பார்த்தேன் “ரெண்டு பிளேட் இட்லி” என்று அப்பா சொன்னதும் நான் பதறியே போய்விட்டேன். அவசர அவசரமாக மறுத்தேன் “எனக்கு இட்லி வேண்டாம்” கிட்டதட்ட அழுதுவிடுவது போல்தான் சொன்னேன். “இட்லி வேண்டாமா.. வேற என்ன வேணும்?அப்பா கேட்க உற்சாகமாய்ச் சொன்னேன் “பூரி”.

புதுக்கோட்டையிலிருந்து மீண்டும் பயணத்தை துவங்கி திருபுவனத்தில் முடித்தோம். திருபுவனத்தில்தான் என் பெரிய மாமா அதாவது அம்மாவின் மூத்த அண்ணன் இருக்கிறார். அவர் குடும்பம் எல்லாம் சொந்த ஊரில் இருக்க இவரும் இன்னொருவரும் இங்கு தங்கி வேலை செய்துகொண்டிருந்தனர். பெரிய மாமா சற்று குண்டாக இருப்பார் கடிந்து பேசத்தெரியாதவர் எல்லாவற்றிர்க்கும் ஒரு சிரிப்பு சிரிப்பார் அவரிடம் எனக்கு பயம் இருந்ததில்லை அதனால் அதிகம் அவருடன் விளையாடுவேன். திருபுவனத்தில் அக்ரஹாரம் போன்ற தெருவில் இருந்தது மாமா இருந்த வீடு. வீட்டிற்குள்ளே சென்றதும் மாமா அப்பாவைப் பார்த்து குழைந்தபடி வாங்க” என்றார். என்னைப் பார்த்ததும் “வாடா களவானிப்பயலே” என்றார் நான் சிரித்தேன்.

மதியத்திற்கு மேல்தான் மாமாவிடம் அப்பா வந்த விஷயத்தைச் சொன்னார். அதுவரை எனக்கு தெரியாத அந்த விஷயம் “இவன் ஊர்ல பயலுகளோட சேர்ந்து சுத்தி திரியவே பாக்குறான், பள்ளிகொடத்துக்கு நெதம் அனுப்புறத்துக்குள்ள ஊரையே கூட்டிர்றான். அதான் இனி அங்குட்டு விட்டு வச்சா உருப்பட மாட்டான்னு கூட்டியாந்துட்டேன். இவன நல்ல ஸ்கூல்ல சேத்துவிட்ரனும்” என்றார் அப்பா. மாமா என்னை பார்த்தபடியே தலையை ஆட்டினார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது நான் வெளியூர் போவதுபோல் போய் வருவது என்றுதான் நினைத்திருந்தேன். இங்கு ஸ்கூலில் சேர்க்கப்போவதாக சொன்னதும் பய்ந்துவிட்டேன். நான் அப்பாவிடம் போய் “நான் நம்மூரு ஸ்கூலுக்கே போறேன்பா.. நாம ஊருக்கு போலாம்.. ஊருக்கு போலாம்” என்றதும் “ஊருக்குத்தான போலாம்டா.. இன்னும் ரெண்டு நாள்ல போலாம். அதுவரைக்கும் சும்மா இந்த ஸ்கூலுக்கு போய்ட்டு வா” என்றார் அப்பா. நான் ஏற்றுக்கொள்ளவே இல்லை ஒரு வழியாக சம்மதிக்க வைத்தார். அந்த தெருவில்  மாலை பள்ளி முடிந்து வரும் மாணவர்களை கூப்பிட்டு “உங்க ஸ்கூல் எப்டி இருக்கும்னு இவன்கிட்ட சொல்லுங்க “ என்று மாமா சொல்ல அவர்கள் என்னையும் ஜோதியில் ஐக்கியமாக்கிட வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ  அந்த பள்ளியைப்  பற்றி வானலாவப் புகழ்ந்து தள்ளிவிட்டனர். ஒரு வழியாக நாளை காலை என்னை பள்ளியில் சேர்ப்பதற்கு  முடிவு செய்துவிட்டனர்.

மாலை அப்பா வெளியே கிளம்பினார் “ அப்பா எங்கப்பா போறீங்க” என்று நான் கேட்டதும் “டேய் போகும்போது எங்க போறீங்கனு கேக்காதடா” என்றார் மாமா. நான் மாமாவை சட்டை செய்யாமல் “எங்கப்பா போறீங்க?” என்றேன் மீண்டும். அப்பா,“டவுனுக்கு போயி உனக்கு தேவையானத எல்லாம் வாங்கிட்டு வர்றேன், நீ மாமா கூடவே இரு , “நானும் வர்றேன்பா” ஒரு வித பாதுகாப்பின்மையை முகத்தில் தேக்கிவைத்துக்கொண்டு கெஞ்சலாக அவரிடம் கேட்டேன். அப்பா என்னை சமாதானப்படுத்தும் தொனியில் என்னருகே வந்து “டவுன்ல ரொம்ப கூட்டமா இருக்கும்டா... ரொம்ப தூரம் நடக்கனும் காலு வலிக்கும், நீ இங்கயே இரு நான் வர்றப்ப உனக்கு என்னமாது வாங்கிட்டு வர்றேன்”  நான் மௌனமாக தலையை தொங்கப்போட்டவாரே நின்றிருந்தேன். சரி உனக்கு என்ன வேணும் சொல்லு வாங்கிட்டு வர்றேன்”  நான் தலையை நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தேன். “சொல்லு என்ன வேணும் ?” அப்பா மீண்டும் கேட்க சந்தோஷமாக சொன்னேன் “தங்கப்பேனா வேணும்பாஅப்பா சிரித்தபடி “சரி” என்று கூறிவிட்டு போனார். கொஞ்ச நேரம் மாமாவுடனே திரிந்து கொண்டிருந்தேன் அதன்பின் ஜன்னலோரத்தில் போடப்பட்டிருந்த கட்டிலில் படுத்துக்கொண்டு ஜன்னல் கதவுகளின் மேல் காலை வைத்துக் கொண்டு எனக்கு அப்பா வாங்கி வரவிருக்கும் தங்கப்பேனாவைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை விழித்தபோது விடிந்திருந்தது.

எழுந்தவுடன் அம்மா ஞாபகம் வந்தது, அப்போதுதான் அப்பாவுடன் திருபுவனத்திற்கு வந்திருப்பது உரைத்தது. தங்கப்பேனாவைப் பார்க்கும் ஆவலில் அப்பாவைத்தேடினேன் அப்பா தூங்கிக்கொண்டிருந்தார். எழுப்பிக் கேட்டால் திட்டுவார் என்பதால் நேற்று அவர் வாங்கி வந்த பொருட்கள் எல்லாம் எங்கிருக்கின்றன என்று தேடிக்கொண்டிருந்தேன். பின்பக்கமிருந்து மாமாவின குரல் கேட்டது “டேய் களவானிப்பயலே அங்க என்னடா பண்ணிட்டிருக்க?” திரும்பி பார்த்தால் மாமா அங்கு நின்று கொண்டிருந்தார் அவருக்கு பதிலளிக்காமல் நான் பொருட்களை தேடினேன். கிடைத்துவிட்டது ‘பேக், புக், ஸ்லேட்எல்லாம் இருந்த்து தங்கப்பேனாவை மட்டும் காணவில்லை எனக்கு ஏமாற்றமாக இருந்தது. ஒருவேளை அப்பா அதை பத்திரமாக எடுத்து வைத்திருக்கலாம் என்று மனதை தேற்றிக்கொண்டேன்.

அப்பா எழுந்ததும் நான் முதலில் அவரிடம் கேட்டது “தங்கப்பேனா எங்கப்பா?” அப்பா கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் சொன்னார் சுத்தமா மறந்துட்டேண்டா” எங்க அப்பா எப்போதும் இப்படித்தான் நான் கேட்கும் விஷயத்தை அரை குறையாக மறக்க மாட்டார் சுத்தமாகத்தான் மறப்பார். கை சுத்தம், வாய் சுத்தம், தொழில் சுத்தம் போன்று என் அப்பாவிற்கு மறதி சுத்தம். எனக்கு அழுகை வருவது போல் இருந்தது கண்கள் கலங்க ஆரம்பித்தன. என் முகம் போன போக்கைப் பார்த்துவிட்டு அப்பா “ நீ இன்னைக்கு ஸ்கூலுக்கு போயிட்டு வர்றப்ப வாங்கி வச்சிருக்கேன் சரியா” என்றார். நான் சிரித்தபடி வேகமாக சரி என்று தலையாட்டினேன் அவர் எத்தனை பொய்கள் சொன்னாலும் நம்பத்தயாராக இருந்தேன்.

பார்ப்பதற்கு வீடு போன்றிருந்த பள்ளியில் என்னை எல்.கே.ஜியில் சேர்த்துவிட்டு அப்பாவும் மாமாவும் கிளம்பினார்கள். அப்பா கிளம்பும்போது ஒரு முறை ஞாபகப்படுத்தினேன் “அப்பா தங்கப்பேனா” அப்பா சிரித்தபடி “இந்தா நானும் உன் மாமனும் இப்ப நேரா டவுனுக்குத்தான் போறம் வர்றப்ப வாங்கிட்டு வந்திடுறேன்” என்றார். அதைக் கேட்டதும் எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை, புதுப்பள்ளியில் அன்று நாள் முழுவதும் அந்த சந்தோஷம் எனக்குத் துணையாக இருந்தது. பள்ளிவிட்டதும் பள்ளிக்கு எதிரே இருக்கும் மரத்தடிக்கு வரச்சொல்லியிருந்தார் மாமா. சொன்னது போலவே நான் அந்த மரத்தடிக்குச் செல்ல மாமா என்னை சைக்கிளில் உட்காரவைத்து ஓட்டினார்.

“அப்பா எங்க மாமா?” நான் ஆர்வமாக கேட்க “வீட்ல இருக்கார்” என்றார்.

“தங்கப்பேனா வாங்கிட்டு வந்துட்டாரா?

“ம்..

“எப்டி இருக்கு” நான் ஆர்வமாக கேட்க மாமா பதில் சொல்லவில்லை

“எப்டி இருக்கு மாமா” நான் மீண்டும் சத்தமாகக் கேட்டேன்.

“ம்.. நல்லா இருக்கு

மாமாவிடம் ப்ள்ளியில் நடந்தவற்றை எல்லாம் சொல்லிக்கொண்டே வந்தேன். வீடு வந்துவிட்டது வீட்டை நெருங்க நெருங்க எனக்குள் பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்தது. சைக்கிளை நிறுத்தியவுடன் இறங்கி வேகமாக வீட்டிற்குள் ஓட ஆரம்பித்தேன். உள்ளே சென்று பார்த்தால் மாமாவுடன் வேலை செய்யும் நபர் மட்டும் இருந்தார் அப்பா இல்லை. “அப்பா எங்க மாமா காணோம்?” நான் ஏமாற்றத்துடன் கேட்க “மறுபடியும் டவுனுக்கு போயிருப்பார்டா”  எனக்கு முகம் வாடியது. “தங்கப்பேனா..?” என்று நான் கேட்க “அதை பாக்கெட்லதான் வச்சிருந்தாரு..” என்றார் மாமா. மாமா பொய் சொல்கிறார் என்று எனக்கு தோன்றியபோதும் அது உண்மையாக இருக்க வேண்டும் என்று விரும்பி நம்பினேன்.

அப்பாவிற்காகவும் தங்கப்பேனாவிற்காகவும் நான் காத்திருக்க ஆரம்பித்தேன். நேரம் ஆக ஆக எனக்கு பயம் அதிகரித்தது இரவும் வந்து கொண்டிருந்தது. மாமாவை நச்சரிக்க ஆரம்பித்தேன் என் நச்சரிப்பு தாங்காமல் மாமா உண்மையைச் சொன்னார் “உங்கப்பா ஊருக்கு போயிட்டாருடா” மாமா சொன்னதும் பக்கென்று எனக்குள் ஏதோ ஒரு பெரிய பள்ளம் விழுந்தது போன்றிருந்தது எதைக்கொண்டும் இட்டு நிரப்ப முடியா பள்ளமது. பெருங்குரல் எடுத்து கத்தி என் மாமாவை கிடைத்ததை எல்லாம் கொண்டு அடிக்க ஆரம்பித்தேன். அவர் என் மீது கோபப்படவில்லை என்னால் முடிந்த வரை கத்தினேன். “நீ என்ன கத்துனாலும் உங்கப்பா வரமாட்டாரும்பி” என்றார் மாமா. நான் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தேன். இதை என்னால் நம்பவே முடியவில்லை நான் யாரை நம்பி இங்கு வந்தேனோ அவர் என்னை விலை பேசி விற்றுவிட்டு செல்வதுபோல் சென்றுவிட்டார். அதுவும் என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் மாயமாய் மறைந்ததுபோல் போய்விட்டார். அப்பாவைக்கூட நம்பக்கூடாதா... இரண்டு நாளில் ஊருக்கு போகலாம் என்று சொன்னாரே நானும் அதை நம்பிக்கொண்டிருந்தேனே என நினைத்து நினைத்து அழ ஆரம்பித்தேன். புது இடம் புது ஆட்கள்.. அப்பா இருக்கும் தைரியத்தில் மட்டும்தான் அங்கு இருந்தேன் இனி எனக்கு இங்கு யார் இருக்கிறார் என்று தோன்றியது. திருப்புவனத்தில் எனக்காக இருப்பவரும் எனக்கு தெரிந்தவரும் என் மாமா ஒருவர் மட்டுமே, அந்த ஒருவர் எப்படி என் பெற்றோருக்கு சமமாவார், என் குடும்பத்திற்கு சமமாவார், என் ஊருக்கு சமமாவார். ஆத்திரத்தை அழுதழுதே தீர்த்துக்கொண்டேன் அழுகையும் தீர்ந்தபின் உறங்கிப்போனேன்.
மறுநாள் காலை மாமா என்னை ஸ்கூலுக்கு ஆயத்தம் செய்து அவரும் ஆயத்தமானார். மாமாவிடம் “அப்பா எப்ப வருவார் மாமா” என்று கேட்க துவங்கி இருந்தேன். எனக்கு அப்போது இருந்த ஒரே நம்பிக்கை அப்பா திரும்ப வருவார் என்பதே. மாமா “அடுத்த வாரம் வருவார்” என்று சொன்னார். நம்பிக்கையுடன் சைக்கிளில் உட்கார்ந்திருந்தேன். எனக்கு அந்த ஊரில் தெரிந்த ஒருவர் என் மாமாதான், ஹேண்டில் பாரில் இருந்த அவரது கையை இருகப்பற்றிக் கொண்டேன்.

பள்ளிக்கு முன் இருந்த மரத்தடியில் மாமா என்னை இறக்கிவிட்டதும்  கண்கள் கலங்க அவரிடம் சொன்னேன் “நான் ஸ்கூல் முடிஞ்சு வர்ற வரைக்கும் இங்கயே இருங்க மாமா.. எங்கயும் போய்டாதீங்க..
“சரி நிக்கிறேன் போ” என்றார் மாமா. பள்ளி உள்ளே செல்லும் வரையில் அவரைத் திரும்பி திரும்பி பார்த்தபடியே சென்றேன்.

மாலை பள்ளி முடிந்ததும் வேகமாக வந்து பார்த்தால் மாமா நான் சொன்ன இடத்திலேயே நின்று கொண்டிருந்தார். எனக்காக காலையிலிருந்து காத்துக்கொண்டிருந்த மாமாவை எனக்கு பிடித்திருந்தது, சந்தோஷம் தாங்கவில்லை. ஓடிச்சென்று சைக்கிளில் ஏறிக்கொண்டேன்.
மாமாதான் தினமும் சமைப்பார் காலையில் அவர் வைக்கும் குழம்பை சோற்றில் ஊற்றி சாப்பிட்டு விட்டு “ நல்லாவே இல்லை மாமா” என்பேன் முகத்தை சுளித்துக் கொண்டு. “டேய் குழம்பு first class அ இருக்கு ஏ one, சாப்புடு” என்பார் நான் சிரிப்பேன். first class, ஏ oneபோன்ற வார்த்தைகளை முதன் முதலில் மாமா சொல்லத்தான் கேட்டேன்.

தினசரி மாமா என்னை பள்ளிக்கு கிளப்பிச் சென்று விடுவதும் நான் பள்ளி முடிந்து வரும்போது அங்கேயே நின்று கொண்டிருப்பதும் வாடிக்கையானது. ஆனால் அப்பா வருவார் என்று மாமா சொன்ன நாள் மட்டும் வரவே இல்லை.அன்று பள்ளிக்கு செல்லும் வழியில் மாமாவிடம் கேட்டேன் “மாமா எனக்கு தங்கப்பேனா வேணும்” மாமா சிரித்தார். நான் முன்பக்கம் இருக்கும் கம்பியில் உட்கார்ந்திருந்த்தால் குரல் மட்டும் கேட்டது. “தங்கப்பேனாதானே.. செய்யச் சொல்லி ஆசாரிகிட்ட ஆர்டர் குடுத்திருக்கு சீக்ரம் வந்திரும்” என் முகத்தில் புன்னகை படர்ந்தது சட்டென புன்னகையுடன் தலையை திருப்பி மாமாவைப் பார்த்தேன். “எப்ப வரும் மாமா?ஆவலுடன் கேட்டேன். “செஞ்சு முடிச்சதும் ஆள் விட்டு சொல்லி அனுப்புறேன்னு சொல்லி இருக்காங்க, சொன்னதும் வாங்கிடலாம்” எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. சைக்கிளில் செல்வது என்னவோ பறப்பது போலவே இருந்தது. இப்போதெல்லாம் மாமா சொல்வதையும் நான் நம்ப ஆரம்பித்திருந்தேன். சைக்கிளை விட்டு இறங்கி உற்சாகமாக பள்ளிக்கு ஓடினேன்.

“இன்னும் கொஞ்ச நாள்ல எனக்கு தங்கப்பேனா வந்திரும்டி”  வகுப்பறையில் என் அருகே இருந்தவனிடம் சாப்பாட்டு நேரத்தில் தம்பட்டம் அடித்தேன். “வந்திரும்டி யா.. நான் என்ன பொண்ணா”  நான் சொன்ன விதத்தை கிண்டல் செய்தான் அவன். ஊரில் பேசி பழகியது இன்னும் மாறவில்லை. “தங்கப்பேனால்லாம் எதுவும் கெடையாது சும்மா டூப் உடாதடாஎன்றான் அவன். “யார் சொன்னா தங்கபேனா இருக்கு” நான் விடுவதாய் இல்லை.

“அப்டியா எந்த கடையில இருக்கு காட்டு

“கடையில எல்லாம் இல்ல செய்ய சொல்லி ஆர்டர் குடுக்கணும்

“டேய் நீ நல்லா டூப் உடுற

“யாரு நானா... நீ தாண்டா.. உனக்கு வேணும்னா வா எங்க மாமாட்ட கேக்கலாம்

“எங்க போயி?

“நம்ம ஸ்கூல் முன்னாடிதான் எங்க மாமா எனக்காக நின்னுட்ருப்பாரு நீ வா

“பொய் பொய்யா சொல்லாதடா உங்க மாமா காலையிலயே போய்ருப்பாரு, எல்லாரும் காலையிலயே போயிருவாங்க 

நான் சொன்ன எதையும் அவன் நம்புவதாய் இல்லை “வேணும்னா உனக்கு காட்டுறேன் வாடா” என்று  அவனை கூட்டிக்கொண்டு மெயின் கேட்டை நோக்கி நான் ஓட ஆரம்பித்தேன் என் மாமா நிச்சயம் எனக்காக அங்கு நின்று கொண்டிருப்பார் என்கிற நம்பிக்கையுடன்.

                                                     - அ.கணேஷ்ராஜ்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com