1.
கானாமல் போனவர்களை
பற்றிய சுவரொட்டிகள்
பெரும்பாலும் பேருந்து நிறுத்ததிலும்
மின்சார ரயில்களிலும் மட்டுமே
ஒட்டப்படுகிண்றன.
கறுப்பு வெள்ளையிலேயே
இருக்கின்றன அச்சுவரொட்டிகள்.
புகைப்படத்தில் அவர்கள்
ஒரே திசையிலேயே பார்கின்றனர்.
சொற்ப பணத்தோடு,
மந்த புத்திகளாக
பச்சை பேண்ட்டும்,
வெள்ளை சட்டையுமாக
ஆண்களாகவே பெரும்பாலும்
தொலைந்திருக்கின்றனர்.
ஆளற்ற பேருந்துகளிலும்,
காலியான மின்சார ரயில்களிலும்
இறங்காது பயணிகின்றனர்.
தொலைந்துபோனவர்களின்
சுவரொட்டிகளின் மீது
எட்டு தினங்களுக்குள்
ஒட்டப்படுகிறது
மற்றுமொரு
தொலைந்துபோனவரின்
சுவரொட்டி..
2.
கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை
ஒட்டிய சாலையில் ஆட்டோவை
திருப்பிய ஒட்டுனர்.
“முன்னாடி இந்த ரோட்டில
ஆட்டோ ஒட்டவே முடியாது
அவ்வளவு குடிசைகள் என்றார்.
அவைகள் எங்கேயென
நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை.
3.
பொதிகை
செய்தி முடிகையில்
“காணாமல் போனவர்களை
பற்றிய தகவல் அறிந்தால்
தொடர்பு கொள்ள வேண்டிய
கட்டுப்பாட்டு அறையின் எண்
எப்பொழுதும் ஞாபகத்தில் வைக்க
முடியாததாகவே இருக்கிறது.
4.
நகர பூனைகள்
எங்கள் ஊர் பூனைகளை போல
பதட்டப்படுவதில்லை.
மனிதர்கள் அருகில் போனாலும்
பாவனையாகத்தான் விலகுகின்றன.
குப்பைமேட்டில்
மின் கழிவுகள் அடங்கிய பாலிதின்
கவர்களை சாவகாசமாக
தேடுகின்றன.
சமயங்களில் வீட்டு வாசலில்
நின்று கெஞ்சுகின்றன
போட்டதை சாப்பிட்டுவிட்டு
ஓடுகின்றன
நகரம் பூனைகளை
நாய்களாக்கி விட்டது
இனி பூனைகள்
உங்கள் சாலைகளில்
புணர்ந்தாலும்
ஆச்சர்யமில்லை.
- சாம்ராஜ்
April 14, 2010
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com
