பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 15, 2010

அற்றவைகளால் நிரம்பியவள் 5 - யமுனா ராகவன்

யமுனா ராகவன் அய்ரோப்பாவில் மருத்துவராய் பணிபுரிகிறார். அவர் எழுதும் ‘’அற்றவைகளால் நிரம்பியவள்" தொடர்கதை காட்சியில் தொடராய் வெளிவருகிறது.
அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கே சொடுக்கவும்.
http://kaattchi.blogspot.com/search/label/அற்றவைகளால்%20நிரம்பியவள்

பகுதி 5
அஞ்சனாவின் வாழ்க்கை அவளை எப்போதும் ஒரே மனநிலையில் இருக்கவிட்டதே இல்லை. அதற்கு காரணம் அவள் மூன்றாம் வகுப்பு தோழி நிர்மலா தான் என்று தோன்றியது இப்போது. 


தன்னை காட்டிலும் நன்கு குட்டையாய் கட்டையாய், கறுத்து, தொப்பை uniform belt பிதுக்க, கையெல்லாம் புசுபுசு முடி வைத்துக்கொண்டு, காலை அகட்டி நடக்கும் நிர்மலாவின் மேலே எப்போதும் அடர்ந்த புல்லின் ஈரவாசம் வரும். அவளுடைய பள்ளி சீருடையின் இரண்டு பாக்கெட்டிலும் எப்போதும் ஏதாவது நொறுக்குதீனி நிரப்பிக்கொண்டு, பாடம் எடுக்கும் ஆசிரியைக்கு தெரியாமல் தானும் கொறித்துக்கொண்டே இவளுக்கும் தருவாள். அந்த கணங்களில் திருட்டுத்தனமாய் பெஞ்சின் கீழே கையை மறைத்துக்கொண்டு டீச்சருக்கு தெரியாமல் சாப்பிட்ட வேர்கடலை, அரை நெல்லிக்காய், மூக்கடலை எத்தனை ருசியாய் இருந்தது அப்போது. நிர்மலா அருகேயே அமர்ந்து, அவள் வாசம் நுகர்ந்துக் கொண்டே அவளுடைய ஆரஞ்சு ரப்பர் வளையல் போட்ட கையில் இருக்கும் முடியை விரலின் நுனியால் மெல்ல உணர்வதில் ஏனோ ஒரு சந்தோஷம் அஞ்சனாவிற்கு. Tactile pleasure... டீச்சர் திட்டியதில் மனது கலங்கும் நேரத்திலோ, அல்லது வேறு ஏதும் சரியாக நடக்காது வெறுப்பாக உணரும்போதோ அந்த கூசும் முடியுள்ள கைகள் பெரும்துணையாக தோன்றும். சத்தம் போட்டு சிரிக்கும்படிக்கு ஏதாவது கூறிவிட்டு, `` ஏய்! நெறய சிரிக்காதேடி. நெறய சிரிச்சா கட்டாயம் நெறய அழுவோம்`` என்று நிர்மலா எப்பவும் சொல்வாள். அவள் சொன்னபிறகு நிஜமோ பொய்யோ எப்போது நிறைய சிரித்தாலும் பிறகு அழும்படி வரும். சிரித்ததும் ஏற்படும் கூடிய சீக்கிரம் அழுது இந்த சிரிப்பை ஈடுக்கட்டுவோமோ என்ற anxiety ஏனோ இன்னமும் அஞ்சனாவிற்கு உண்டு. 


Logic மறக்கும் கணங்களில் இதுவும் ஒன்று. அழவே அதுவும் இன்னொருவர் முன் அழவே கொஞ்சமும் பிடிக்காததால் என்னமோ மனம் நிறைந்து சிரிக்கும் கணங்கள் குறைந்து தேய்ந்துதான் போனது. நான்காவது படிக்கும்போது ஊர் மாற்றி போகும் முன் அழுதுக்கொண்டே, அவள் வெகு நாளாய் குட்டிப்போடும் என்று புத்தகத்தில் வைத்திருந்த மயில் இறக்கையை இவளுக்கு கொடுத்து விட்டு, ``ஒரு ஒரு தடவை குட்டி போடும் போதும், ஒரு ஒரு புக்ல பத்திரமா வைடி. சீக்கிரம் நிறைய இறக்கை சேர்ந்திரும். அப்புறம் நான் வருவேன் இல்ல, நம்ம சேர்ந்து விளையாடலாம்`` என்று சொல்லி வராமலே போன நிர்மலா எப்படி, எங்கே இருக்கிறாளோ தெரியாது அஞ்சனாவிற்கு.


அப்படி ஒரு கணத்தை நினைக்க வைத்தது டேமியன் பார்த்த பார்வை. இத்தனை சிரிக்கிறோமே அழ வைப்பானோ என்று கொஞ்சம் துணுக்குற வைத்தது, அவன் கண்ணில் இருந்த ஏதோ. சில நேரங்களில் சில மனிதர்களை பார்த்ததும் நமக்கு பிடிக்காது, சிலரை பிடிக்கும் காரணங்களே இன்றி. டேமியனை பார்த்ததும் அவளுக்கு ``எங்கே பார்த்தோம் இவனை`` என்று குறுக்குறுப்பையும், அவன் வசீகர தோற்றத்தையும் மீறி அவளுக்கு அவனை பிடிக்க காரணம் something about him was very raw and honest. இன்று இவன் பார்வையில் தெரிந்த காழ்ப்பின் காரணம் தெரியாது போயினும், ‘’what’s his damn problem? Why am I even paying importance to this’’ என்று மனம் கொஞ்சம் எரிந்தது. புதிய ஒரு உலகில் காலடி எடுத்து வைத்ததும், அழகாய் இருக்கிறேன் என்ற இறுமாப்பும், வெகு நாள் கழித்து மீண்டும் ஒரு பெரிய இடத்தில் இத்தனை பேரின் முன்னிலையில் தனித்து நிற்பதும், அங்கு இருந்த பாதிக்கும் மேலே ஏதாவது கட்டாயம் அவளோடு பேசவேண்டும் என்று வந்து நலமா என்றாவது விசாரித்து போனதில் வந்த ஒரு சந்தோஷமும் எல்லாமே பின்னே அழ நேருமோ என்று எண்ணியதில் கொஞ்சமாய் குறைய துவங்கியது.


‘’ There you go!’’ என்று அழகான ஒரு சிகப்பு பேப்பர் குடை போட்டு கண்ணாடி கோப்பையை நீட்டியபடி நின்ற ஜிஜேவை ஒரு கணம் மறந்தே போயிருந்தாள். சுதாரித்து, ‘’Merci boku’’ ( மிக்க நன்றி) என்று வாங்கியவள் பார்த்த திசையை ஜிஜேயும் கவனித்தார். பளீரென பளப்பளக்கும் dance floor நடுவே இருந்து தன்னை பார்த்துக்கொண்டே இருக்கும் டேமியனும், தன்னருகே இருந்து அவனையே பார்த்துக்கொண்டு இருக்கும் ஜிஜே பார்த்ததும், இருவரின் மத்தியில் ஏதோ நிகழ்ந்து இருக்கிறது என்றும் '' they go way back '' என்றும் புரிந்தது.


ஜிஜேயின் புன்னகை மறைந்து அஞ்சனவை பார்த்து கேட்டார், '' I hope you don’t have anything to do with him '' என்றார். '' He is bad news'' என்று  சொன்னது, அஞ்சனா  காதில் விழுந்தும் விழாதது போல திரும்பி, அவர் குடுத்த கோப்பையை வாங்கினாள். மெதுவாக குடிக்க mocktail போல அல்லாது, இனிப்பாக இருப்பினும் வேறு ஒரு ருசியோடு இருந்தது. பால்கொண்டு கலந்த ஏதோ ஒரு பானம் போல இருப்பினும், விழுங்கும் போது வரும் மதுவின் வாடை அவளுக்கு தெரிய, என்ன இது ஜிஜே என்றாள். '' You would love it, Its Irish Cream.. Hun '' என்ற ஜிஜே, சிரித்த சிரிப்பும், மேய்ந்த  பார்வையும்   அவளுக்கு பிடிக்காது, அவரிடம் திரும்ப வருவதாய் சொல்லி நகர்ந்தாள். அத்தோடு அங்கே வந்த ஒரு வெள்ளைக்காரி இவரை பார்த்து சிரிக்க, சொன்ன dialogue எல்லாம் மறந்து, இவர் கவனம் Chopsticks போல இருந்த பெண்ணிடம் திரும்பியது. இப்போது ஜிஜேயை பார்த்ததும் நினைவுக்கு வந்தது, Asterix and obelix கார்ட்டூனில் வரும் வளைந்த கைத்தடியோடு வளைய வரும் வயதான Geriatrix தாத்தா. அந்த gaulish கிராமத்திலேயே வயதான கிழவருக்கு அழகான  இளம்மனைவி  இருப்பினும் எல்லா இளம்பெண்கள் புருவம் உயர்த்தி sight அடிப்பது அத்தனை பிடிக்கும். மூக்கை சுறுக்கி சிரித்து லேசாக தலையை மறுக்கும் விதமாய் ஆட்டியப்படி, ``What a Flamboyant and Pompous personality, this guy Didier is?`` என்று நினைத்துக்கொண்டு, கையில் கோப்பையை தாங்கியபடி மறுபடி அவள் முதலில் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்தாள் அஞ்சனா.           


ஜிஜே ஏன் அப்படி டேமியனை பற்றி சொன்னார் என்று தெரிந்து கொள்ள சிறிது ஆவலாய் இருப்பினும், அம்மாவின் குரல் வழக்கம் போல் காதுக்குள் ஒலித்தது. இந்த கையில் இருந்த irish cream வெகு சுவையாக இருந்தது. மெது மெதுவாய் நிலவை பார்த்து அருந்த, லேசாய்  தலை  வெகு அழகாய் கிறுகிறுப்பதை உணர்ந்தபடி,  அந்த கணத்தில் தொலைந்து நின்றவளின் பின்னிருந்து, ''Aren't you the most popular one,  in this goddamn crowd?'' என்ற குரலின்  கோபம்  சட்டென தூக்கி வாரிபோட்டது. திரும்பிப் பார்க்கையில் டேமியன். ஏனோ குரலில் இருந்து வழிந்து வந்த  எரிச்சலும், தலை சுற்ற வைத்த பானமும், இதுவரை குமைந்து கொண்டிருந்த நிலையும், அவளுக்குள்  எதையோ   உடைக்க,  கண்களில் அப்படியே கோபத்தை பிரதிபலித்தாள். ``Well, Looking at the facts, You aren't less popular either. But I definitely hold a better reputation than you. So Just back off’’ என்று சொல்லி அலட்சியமாக திரும்பினாள் கடலை பார்த்து.


அஞ்சனா பிறந்தது November மாதத்தில். அவளுடைய star sign Scorpio. கல்லூரிக்கு சென்றபின் தான் இது போன்ற விஷயங்களை பற்றி அவளுக்கு தெரியும். இவளுடைய பிறந்தமாதம் கேட்டதும், நிறைய பேர் `` இவளிடம் ஜாக்கிரதையாக இருக்கணும்`` என்றோ ``எனக்கு scorpio’s பிடிக்காது'' என்றோ `` நீ scorpioவா. நினைச்சேன் அப்பவே. You have a sharp way of telling off.’’ என்று மாறி மாறி சொல்வதை கேட்ட பிறகு தான் யோசிக்க தொடங்கினாள். எதிராளியின் மனநிலையை பற்றி சிறிதும் யோசிக்காது, மூளைக்கும் வாய்க்கும் நடுவே ஒரு filter இல்லாது, வரும் verbal diarrhoea, பல சமயங்களில் இவளை இன்னும் தனியாக்கி இருக்கிறது. எப்போதும் வீட்டில் அண்ணாவிற்கும் இவளுக்கும் நடுவே நடக்கும் பெரும் போரில் எல்லாம் சமாதானம் செய்ய வரும் சித்தப்பா இவளை கூப்பிடுவது '' Law point கொடுக்கு'' என்று. எதை சொன்னால் வலிக்குமோ, அதை பற்றியே மேலும் மேலும் சொல்லிக்காட்டி தர்க்கம் செய்வதாலும், மறுத்து பேசும்படிக்கு இடம் தராமல் இவள் பக்க நியாயங்களை அடுக்கிக்கொண்டே போவதாலும், பேசும் போது கையையும், தலையையை ஆட்டி ஆட்டி பேசுவதாலும் சித்தப்பாவிற்கு சிரிப்பு வருவதோடு, `` தொடங்கிட்டாயா, law point!’’ என்று எப்போதும் கிண்டல் செய்வார். வெகு இலகுவாய் வரும் இது போன்ற stinging retaliation தான் அவளை scorpio ஆக அடையாளம் காட்டுகிறதோ என்று யோசித்து இருக்கிறாள். எப்போதும் பேசிவிட்டு மனது வருந்துவாள், இப்படி சொல்லியிருக்கக்கூடாதோ என்று. ஆனால் இன்று அவளுக்கு வெகுவாய் பிடித்தது இவளின் பேச்சு. ''யார் இவன் நமக்கு, இவனிடம் நல்ல பெயர் எடுத்து என்ன ஆக போகிறது'' என்ற எரிச்சல் கூட காரணமாய் இருந்திருக்கலாம்.


டேமியன் ``உனக்கு தெரியாத விஷயத்தை பற்றி எத்தனை சுளுவாக judgement கொடுக்கமுடிகிறது. அப்படியே மல்பா புத்தி`` என்றதும் கண்விரிய ஆத்திரத்தோடு திரும்பினாள். ``நான் மல்பா தானே. இந்த உடுப்பு போடுவதால் வேறு ஊர்க்காரியாக மாறிவிட்டேன் என்றா எண்ணம் உங்களுக்கு. எனக்கு நல்ல வேலை மல்பா புத்தி இருக்கிறது. தப்பி தவறி கூட சேய்ஷல்வா புத்தி ஒட்டிக் கொள்ளவில்லை. என்னோடு வந்து பேசு என்று நான் கட்டாயப் படுத்தவில்லை. கதவு அந்த பக்கம்தான் இருக்கிறது. தாராளமாக போகலாம். நான் தடுக்கவில்லை. In fact, I would much appreciate if you left me alone, right now and would be real glad if I don’t have to encounter you again, EVER `` என்று சொல்லி உதட்டில் வெறுப்பை கக்கிவிட்டு, வெடுக்கென்று திரும்பி மிச்சமிருந்த பானத்தை பருகினாள் அஞ்சனா. எதனால் அத்தனை கோபம் வந்தது அவன் மேலே என்றே புரியவில்லை அவளுக்கு


சிறிது நேரம் கழித்து பார்க்கையில், அவன் அங்கு இல்லை, ozone முழுக்க லேசாக கண்ணை ஓட்டினாள், அவனை காணவில்லை. இதற்குள் மணி 3 தாண்டியதில், லூயிஸோடு கிளம்பி வீடு வந்து சேர்ந்தாள். வந்த நண்பர்கள் அங்கிருந்து வேறு பார்ட்டிக்கு செல்ல, லூயிஸே, ``அங்கு வேண்டாம் அஞ்சனா! உனக்கு அந்த சூழல் புதிதாக இருக்கும். There would be plenty of weed and booze there. உன்னால் ஒத்துக்கொள்ளமுடியுமா என்று எனக்கு தெரியவில்லை. உன்னை வீட்டில் விட்டுவிடுகிறேன்`` என்று சொன்னான். ஜீப்பை விட்டு இறங்கி ``I had a great time, நன்றி லூயிஸ்’’ என்று கூறி அவன் கன்னத்தில் கொடுத்த முத்தத்தை வாங்கிக்கொண்டு விடைப்பெற்றாள். அந்த ராத்திரிக்கும் ஜெனிஸின் படுக்கையறை திரைசீலை, விலக்கி பார்ப்பது தெரிந்தது. யார் என்ன செய்கிறார்கள் என்று எந்நேரமும் பார்த்துக்கொண்டே இருப்பது, ஜெனிஸின் உலகம். ஒன்றுமே யோசிக்காது, கால்கள் லேசாக பின்ன மெதுவாக வந்து வீட்டினுள்ளே நுழைந்து, லேசாக இருட்டில் தூங்கிவழியும் அவளுடைய அறைகளை பார்த்தாள். இத்தனை நேரம் இருந்த வண்ண உலகம் சட்டென இருள் மூட, நிஜம் கண்முன் விரிந்தது.


மெல்ல உடைமாற்றி, முகம் கழுவி, படுக்கையில் வந்து படுத்தவளுக்கு மனம் முழுக்க சஞ்சலங்களும், கேள்விகளும் அப்பிக்கொள்ள உறக்கமே வரவில்லை. அவள் இப்போது இருந்த நிலை, அவளுக்கு Cinderella கதையை நினைவுக்கு கொண்டுவந்தது. அந்த Pumpkin chariot, கண்ணாடி செறுப்பு, குதிரைகளான 7 எலிகள், அந்த குண்டு Fairy God mother எல்லாம் எப்பவும் அஞ்சனாவிற்கு பிடிக்கும். ஆனால் மணி 12 ஆகும்போது திரும்பவரவேண்டும் என்ற கட்டளையின் கீழ் திரும்பி, அவள் கண்ணாடி செறுப்பை விட்டு விட்டு ஓடிவந்த Cinderella, அதுவரை இருந்த எல்லாம் மாயமாக மறுபடி அவளுடைய கொடுமைக்கார சித்தியின் வீட்டிற்கு வர நேரும்போது, ஒரு வேளை இப்படி தான் உணர்ந்திருப்பாளோ என்று எண்ணினாள்.


வெகு நாள் ஆயிற்று இத்தனை கோபப்பட்டு என்று எண்ணிக்கொண்டே, நடந்த நிகழ்வுகளை மனதில் ஓட்டிப்பார்த்தாள் அஞ்சனா. கல்லூரியில் அடிக்கடி கேட்க நிகழ்ந்த வார்த்தையை நினைவுக்கு கொண்டுவந்தது, டேமியன் சொன்ன ``மல்பா புத்தி`` என்ற வார்த்தை. கல்லூரியில் தனித்து நடந்து கொண்டிருக்க நேர்ந்தபின், ஒரு ஆறு மாதம் முடியும் சமயம், ஒருவாறாக அஞ்சனாவோடு சேர்ந்து ஒரு gang உருவாகியது. கோமதி, மங்கை, நந்தினி... வாழ்வில் அவளுடைய கல்லூரி வாழ்க்கையை ஒரு அழகான ஓவியமாக மாற்றியவர்கள். இவர்கள் 4 பேரும் சேர்ந்து அடித்த லூட்டியும், கஷ்டத்தில் ஒருவரை ஒருவர் தாங்கி நிற்கும் தூண்களாக, வளர்ந்து வந்திருந்த 4 வெவ்வேறு Background ஒன்றாய் கொட்டி கிளறி ஒரே சூழலாக, கருத்து பரிமாற்றங்கள் வேறுபாடுகளோடு ஒருவரை ஒருவர் பற்றி வளர்ந்தனர். சிரிப்பு மட்டுமே வாழ்க்கையாக, செய்யும் செய்கைகள் அத்தனையும் adventure ஆகிப்போனது. But she couldn’t help but notice, கோமதி பள்ளர் இனத்தையும், மங்கை MBC ஆகவும், நந்தினி ஆதிதிராவிட கிருத்துவச்சியாகவும் இருக்க நேர்ந்தது. நல்லவேலை அங்கு இருந்த கள்ளர் கூட்டத்திலோ, வன்னியர் கூட்டத்திலோ அவளை சேர்த்துக்கொள்ளவில்லை. நான்கு பேரும் யாரை பற்றியும் கவலைப்படாது அவர்களின் சொந்த உலகத்தில் சிரித்து, அழுது, பேசி, விவாதித்து, படித்து அந்த 5 வருடம் முடிந்த பின்னும், அவர்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகவே இருக்கின்றனர் இன்றுவரை.
    
அடிக்கடி கேட்டு கொதிக்க  வைத்த வார்த்தை, வகுப்பில்  இருக்கும் சக நண்பர்கள்  சூடாகி தர்க்கம் செய்யும்  போது உபயோகித்த `` பற புத்தி  டா.. பற பயலுவ... இத்யாதிகள்... வார்த்தைகளின் முன்னால் சேர்க்கப்பட்ட ``பற`` என்ற வார்த்தை இவளையும் கூட இருந்த 3 பேரையும் வெகுவாய் பேச வைத்திருக்கிறது ஜாதியை பற்றி. இத்தனை நூற்றாண்டு காலம் ஆகியும், வாழ்க்கையின் பொருளாதார மற்றும் சமூகத்தரத்தை பார்க்கும்போது சமநிலையில் இருப்பினும், ஒரு கல்லூரியில் அதுவும் மருத்துவம் படிக்க நேரினும், மற்ற நிகழ்வுகளில் எல்லாம் ஒன்றுகூடி நிற்பினும், ஒரு மனிதனின் அடிப்படையான உணர்வான கோபத்தை கிளறும்போது வரும் வார்த்தைகளில் எட்டிப்பார்த்த ஜாதீயத்தையும், அது தாங்கி வந்த கர்வத்தையும், எதனால் உருவாயிற்று என்றே தெரியாது வளர்ந்து போன விஷயம் இன்னமும் எல்லாவரின் உள்ளத்திலும் நிலைத்திருப்பதையும் அவளால் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை. 


சமீபத்தில் அமெரிக்காவில் computer engineer ஆக பணிப்புரியும் அவள் தங்கை, சிட்டிஅத்தையின் இரண்டாவது மகள் சொன்னாள், `` இங்க வந்து இத்தனை நாளாச்சு, அஞ்சனா. எத்தனை பெரிய IT industry வேலை செய்தாக்கூட, முதல கேக்கிற கேள்வி, என்ன caste நீங்கன்னு தான்`` என்று சொன்னப்போது, ஒரு மாதிரி புரிந்தது எத்தனை புரையோடி போயிருக்கிறது இந்த எண்ணம் என்று.


மருத்துவப்படிப்பு சமுதாயத்தில் ஒரு உயர்ந்த நிலையை குறிப்பிடினும், ஒரு 18, 19 வயது பிள்ளைகளாய் தொடங்கும் அந்த அறிவு பயணம் மிக வித்தியாசமானது, கடினமானதும். முதல் வருடம் படிக்கும் பிள்ளைகள் என்று ஒரு கல்லூரியின் உள்ளே கண்டுப்பிடிப்பது வெகு சுலபம். கல்லூரி வந்த புதிதில் தென்படும் திருவிழாவில் தொலைந்தது போன்ற பாவனைகள் ஒரு ஆறுமாதத்தில் மாறத்தொடங்கும். Acclimatization... ஒரு organism தன்னை அது புதிதாய் எடுத்துவரப்பட்ட சூழலுக்கு தகுந்தப்படி தன்னை மாற்றிக்கொண்டு அந்த சூழலில் தன்னை நன்கு வளர்த்துக்கொள்வது. அது எல்லா ஜீவராசிகளுக்கும் பொறுந்தும். கல்லூரி வாழ்க்கையும் அதுப்போல தான். அவள் படிக்கும் கல்லூரியில் உலகின் எல்லா பாகங்களில் இருந்தும் மாணவ மாணவிகள் வந்து படித்தனர். எங்கு இருந்து வந்த போதும், வந்த போது அஞ்சனாவை போலவே, என்ன ஊர் இது என்று கரித்துக்கொட்டினாலும், அவர்களுக்குள் சிதம்பரமும் அவளுடைய மருத்துவ கல்லூரியும் ஒரு பாகமாவதை தவிர்க்கவே முடியாது. மற்ற படிப்புகளை விட வாழ்வின் நிஜங்களை வெகு அருகில் இருந்து பார்க்க வைக்கும் படிப்பு மருத்துவப்படிப்பு. ஜனனம், மரணம், வலி, சுகம், உறுப்புகள், சோகம், வாழ்வில் பிடிப்பு, பிடிப்பற்ற தன்மை, நம்பிக்கை, தோல்வி, பயம், தனக்கும் மேலே ஒரு சக்தி உண்டென்ற நிலை இப்படி அத்தனையையும் முகத்தில் தினம் தினம் அறைந்து, செம்மட்டியால் அடிவாங்கி, உருவமாகும் பழுத்த உலோகம் போல அங்கு இருக்கும் எல்லாவரையும் மாற்றும். இத்தனைக்கும் மத்தியில் கூட இன்னும் ஜாதி விடாது இருந்த மக்களை பற்றி யோசித்ததில் மனத்தை அழுத்தி சிரிப்பு வந்தது.


கல்லூரியை பற்றி யோசித்ததும், அஞ்சனாவிற்கு நினைவிற்கு வந்தது அவளின் முதல் வருடப்படிப்பான Anatomy... உடல்கூறுவியல்... இதைப் பற்றி யாரைக் கேட்பினும் முதலில் சொல்வது, அந்த Formaldehyde நாற்றம் பற்றியாக தான் இருக்கும். உடல் அழுகாது, உள்ளுறுப்புகள் எல்லாம் பத்திரப்படுத்த உபயோகிக்கும் இந்த இரசாயணபொருளின் வாடை இப்போது யோசித்தாலும், நினைவிற்கு வந்தது. இந்த formaldehyde நிறைத்த ஒரு room அளவு தொட்டி ஒன்றை முதல் நாள் சுற்றி காட்டியதும். உடல் வற்றி, தோல் காய்ந்து கடினமாகி அட்டை கருப்பாக விறைத்து, கடைகளில் வைக்கப்படும் mannequins ( ஆளுயர பொம்மைகள் ) போல இருந்த  30 cadavers (பதப்படுத்த பட்ட உடல்கள்) தலை குப்புற, நிலைக்குத்தி, கை மேலே, கால் மேலே, தலை மேலே, பார்த்தப்போது அவளுக்கு அவர்கள் நம்மை போலவே மனிதர்கள் என்று நம்பமுடியாது பார்த்தது இன்றும் நினைவில் இருந்தது அவளுக்கு.


அஞ்சனா அவள் வாழ்வில் இது வரை ஒரு 2000, 3000 பேர் இறப்பதை பார்த்திருப்பாள். இறக்கும் சமயம் அவளால் ஆன பாடுபட்டும் ஒன்றுமே முடியாது, அவள் கண்முன் ECG monitor இதயத்துடிப்பை இழந்து flat line ஆவதை மட்டுமே ஒரு 600, 700 பேரிடத்திலாவது பார்த்திருக்கிறாள்.  இறப்பை அத்தனை அருகில் அதுவும் இளவயதில் இறக்கும் நோயாளிகளை பார்க்கும்போது, வாழ்வின் அர்த்தங்கள், வாழ்வு தாங்கி வரும் நிலையில்லா தன்மை, ``அட இவ்வளவு தான், எல்லாமே கடைசியில். இதற்கு தான் இத்தனை கஷ்டமும் என்று வரும் பற்றற்ற தன்மை அவளுக்குள் பல்வேறு நினைவுகளை தூண்டிவிட்டது. இத்தனை உயிர்கள் போக நேரினும், அவளை பலமாக உலுக்கிப் போட்ட சில இறப்புகள் அந்த இரவில், அந்த நேரத்தில் அவளுக்கு நினைவிற்கு வந்து விழியை நனைத்தது.
 

தொடரும் 
யமுனா ராகவன்  

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com