பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

April 9, 2010

அற்றவைகளால் நிரம்பியவள் 3 - யமுனா ராகவன்

யமுனா ராகவன் அய்ரோப்பாவில் மருத்துவராய் பணிபுரிகிறார். அவர் எழுதும் ‘’அற்றவைகளால் நிரம்பியவள் தொடர்கதை காட்சியில் தொடராய் வெளிவருகிறது.
பகுதி 1 : http://kaattchi.blogspot.com/2010/04/1_7008.html
பகுதி 2 : http://kaattchi.blogspot.com/2010/04/2_9702.html


பகுதி 3 –

அஞ்சனா லூயிஸிடம் பேசிக்கொண்டிருந்த போது வந்த கூட்டத்தில் எல்லோவரும் அவளை ஒரே போலதான் பார்த்து பேசினார்கள், அது படியுமா படியாதா என்று, அவன் ஒருவனை தவிர. உலகில் எந்த ஊரோ, எந்த நிறமோ, எந்த மொழியோ ஆண்களின் கண் ஒரு நொடியில் காட்டிக்கொடுக்கும் அவர் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என்று. அவர்களில் இருந்து வேறுபட்டு நிற்கும் ஒரு கண்களை நோக்கி ``எங்கே பார்த்திருக்கிறோம் இவனை?`` என்று வெகுவாய் யோசித்தபடி நின்றவளின் கைக்குலுக்கியவர்களில் மூவர் லேசாக பின்னங்கையில் முத்தமிட்டனர். இங்கு வந்த பிறகு கையில் தரப்படும் முத்தங்களும், பார்த்ததும் லேசாக கட்டிப்பிடித்து காற்றில் கன்னத்தின் அருகே முத்தமிடுவது பழகிவிட்டது. ஒரு காலத்தில் ப்ரஞ்சு மற்றும் ஆங்கிலேயரின் காலனியாக இருந்த இந்த தீவில் அவர்களின் பழக்கவழக்கங்களும் உறைந்துவிட்டது. வெறுமே ஒவ்வொருவரின் முகம் பார்த்து சிரித்தவளின் கண்கள் அவனுடைய முகத்தில் வந்து தங்கியது. மறுபடி ``எங்கே பார்த்தோம் இவனை`` என்று பிடிப்படாது யோசிப்பினும், அந்த ஆண்கூட்டத்தின் மத்தியில் நிற்பதை அவளை தாண்டி, அதே படகில் வந்து போய்க்கொண்டு இருந்த இந்தியர்களின் நிலைக்குத்திய பார்வையின் மூலம், இது நாளை தலைப்பு செய்தி போல பேசப்படும் என்று தோன்ற விடைப்பெற முயற்சித்தாள்.


அவர்கள் அனைவருக்கும் ``Bye’’ என்று சொல்லி நகர, முதுகிற்கு பின் அவர்கள் க்ரியோலில் பேசி சிரித்தார்கள். இன்னமும் முழுமையாக மொழி புலப்படாவிடினும், பேசப்பட்ட தோரணையும், அதட்டிய லூயிஸின் குரலும் அவளை தான் கிண்டல் செய்கிறார்கள் என்று விளங்க செய்தது. அவள் கொஞ்ச தூரம் செல்லும்போது, ``டாக்டர்! இன்று இரவு உங்களை 9 மணிக்கு அழைத்து போக வருகிறோம்`` என்ற கோரஸ் குரல் கேட்க, அங்கு நின்று மறுத்துப்பேச மனமில்லாது, வேகமாய் அவளின் இடத்திற்கு சென்றாள். அங்கு சென்று அமர்ந்தபின் அவள் மனம் அவன் கண்களை நினைத்தது.

பல சமயங்களில் பார்ப்பவர்களின் கண்களின் தாக்கம் அவளை யோசிக்க வைத்திருக்கிறது. மீன்களுக்கு உணவு போட்டபடி, பள்ளி நாட்களை நினைத்தாள். அஞ்சனா 8ம் வகுப்பு படிக்கும் போது அவளோடு படிக்கும் பெண்களின் பேச்சு கூடப்படிக்கும் பையன்களை பற்றி மாறுவதை கவனித்தாள். அத்தோடு அவரவர் வாங்கிய கம்மல், செயின், நகப்பாலிஷ், இத்யாதிகள் பற்றியே. அண்ணாவோடும் அவன் நண்பர்களோடும் விளையாடி, கட்டி பிரண்டு சண்டையிட்டு, கிரிக்கெட் மட்டை தூக்கி போய், பக்கத்தில் இருந்த நாற்றமடிக்கும் அழுக்கு குட்டையிலிருந்து ஜிலேபி மீன்கள் பிடித்து வந்து பாட்டிலில் போட்டு வளர்த்து, கயிறுக்கு மாஞ்சா தடவி, பசை கைக்கால்களில் ஒட்டிக்கொண்டு, தம் தாமே கலர் பேப்பரில் செய்த பட்டத்தை டீல் விட்டு, மரமேறி கொய்யாக்கா பறித்து, உப்பு நெல்லிக்காய் ஆள் மாற்றி ஆள் கடித்து, தலைமுதல் கால் வரை அழுக்காகி பாட்டியிடம் `` பொம்பள புள்ளயா, லட்சணமா இருக்கா பாரு! நல்லா தடிமாடு மாதிரி வளர்ந்துவிட்டு மொட்ட பையனாட்டம் சுத்தி வருது பாரு. வயசுக்கு வந்துட்டோங்கற நெனப்பே இல்லை, ஹ்ம்ம்ம்.... நான் சொன்னா யாரு கேக்குறா இந்த வீட்டுல`` என்று திட்டுவாங்கியே கழிந்த நேரத்தில் பெரிதாய் தோணவில்லை அவளின் உடலில் நிகழ்ந்திருந்த மாற்றங்கள்.

ஒரு தடவை ரோட்டில் பாரதியோடு நடந்து ட்யூஷன் போகும் போது, `` வந்துட்டாண்டி அவன்`` என்றாள். ``யாருடி என்று கேட்ட அஞ்சனாவிடம் பூனைமீசையோடு ஒல்லியான வளர்ந்த ஒரு பையனை காட்டி சொன்னாள் ``அவன் உன்னை ரொம்ப லவ் பண்றானாம்டி. தினம் உன்னை follow பண்றான்`` என்றாள். திரும்ப அவனை அஞ்சனா பார்க்க தலை ஸ்டைலாக கோதிவிட்டுக்கொண்டு கைவிட்டு சைக்கிள் ஓட்டி சாகசம் செய்தான். பெயர் கூட தெரியாத அவனை அதன்பிறகு தான் கவனிக்க தொடங்கினாள். சைக்கிளில் அவள் படிக்கும் பள்ளிவரை பின் தொடர்ந்து வந்தான் தினமும். அவள் வீட்டை அடிக்கடி சம்பந்தமே இல்லாமல் சைக்கிள் பெல்லடித்துக் கொண்டே பலமுறை கடந்தான். காரணம் தெரியாவிடினும், அவன் பார்க்கும்போது முதன்முறையாக அவளுக்குள் ஏதோ சிறகடித்தது. எப்போதும் ஒப்பனைக்கோ, தலைமுடிக்கோ பெரிதாக ஒன்றும் நேரம் ஒதுக்காதவள், கொஞ்சமே கொஞ்சம் கண்ணாடிமுன் கூடுதலாய் நின்றாள். பின்வந்த ஒரு தீபாவளி அன்று அவள் பெயருக்கு வந்த 15 Greeting card முழுக்க இருந்த I love you பார்த்து பாட்டியிடம் செமத்தியாக திட்டுவாங்கினாள். அத்தோடு அவளுடைய ஆட்டங்களுக்கு தடா விதித்தனர். அத்தனை கோபம் வந்தது, பாரதி வந்து வாழ்த்து அட்டைகள் பிடித்ததா என்று அவன் கேட்டதாய் சொன்னதும். அதன்பின் அவன் பார்வையால் வந்த ஏதோ காணாமல் போனது. சமீபத்தில் இந்தியா சென்று பணம் எடுக்க ATM முன்பு நின்று இருந்த சமயம், யாரோ பார்த்துக்கொண்டே இருப்பது தெரிந்து திரும்பி பார்த்தவளுக்கு சிறிது நேரம் எடுத்தது அவன் தான் என்று உணர. இருந்த கொஞ்சமே கொஞ்சம் முடியும் வெளுத்து, தொப்பை லேசாய் எட்டிப்பார்க்க வயதாகி போயிருந்தான். போகும்போது `` நல்லா இருக்கியா`` என்றவனின் கண்ணை இப்போது பார்த்தபோது அவளுக்கு சிறிது வருத்தமாக இருந்தது. அஞ்சனா கண்விரிய சிரித்து ம்ம்ம்ம் என்றாள். ``நீ இன்னமும் அப்படியே தான் இருக்கே, மாறவே இல்லை`` என்று சொல்லி போனவனின் பெயர் இன்னமும் அவளுக்கு தெரியாது. உருண்டோடிய வருடங்களும், அவளுடைய மாற்றங்கள் அவன் கண்ணுக்கு எட்டவே இல்லை.

நேரம் போனதை உணர்ந்து திரும்ப வீடு நோக்கி நடக்க தொடங்கினாள். இரண்டாவது குழந்தை பிறக்கும் சில மாதங்களுக்கு முன் பாரதியிடம் பேசினாள். பாரதி `` நீ கொடுத்து வச்சவடீ. என் பொழப்பையும் பாரு! தினந்தினம் அதே சமையல். அதே வேலைங்க. புள்ளய பார்த்து புருஷனை பாத்துக்கிட்டு அதே இடத்துல செக்குமாடு மாதிரி. நீதான் எத்தனை இடம் பார்த்துட்டே. You are so lucky!``... என்று பெருமூச்சு விட்டவளை பார்த்து சிரித்தாள். நிஜம் தான் அவள் சொன்னது. ஆனால் நாணயத்திற்கு இருக்கும் அடுத்த பக்கம் பாரதிக்கு தெரியாது. ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு... Vagabond... அவளின் வாழ்வும் அதே தான். இது வரமா சாபமா தெரியாத வாழ்வு. கார்ட்டூன் மிகப்பிடிக்கும் அஞ்சனாவிற்கு. அதில் சோகமாய் வீட்டை விட்டு செல்லும் நாயோ, பூனையோ, எலியோ தோளில் ஒரு குச்சியும் அதன் ஒரத்தில் ஒரு சிறுமூட்டையும் தாங்கி முதுகு வளைந்து நடக்கும். பல சமயம் விமான நிலையத்தில் பெட்டி தள்ளிக்கொண்டு போகும் சமயம் அந்த கார்ட்டூன் உருவமாய் அவள் மாறுவதாய் தோன்றும். எத்தனை இடங்களுக்கு போயிருக்கிறாள், எத்தனை மனிதர்களை சந்தித்து இருக்கிறாள், எத்தனை சம்பவங்களை கடந்து இருக்கிறாள் என்று எண்ணியபோது மனது லேசாய் தோய்ந்து போனது.

வீடு வந்தவளுக்கு கொஞ்சம் இறுப்பு கொள்ளவில்லை. அவள் வீட்டுக்கும், லூயிஸ் வீட்டுக்கும் வெகு சிறிய இடைவெளி தான். அவன் வீட்டில் பாட்டும், சிரிப்பும் காதுகிழிய, காற்றில் Barbecue chicken and burger வாசம் வந்தது. கண்மூடி யோசித்தாள், ஏதோ இருந்தது அலட்சியமாகவும் உக்கிரமாகவும் ஒரே சமயத்தில் பார்க்கும் அந்த கண்களில். ``போகலாமா... வேண்டாமா என்று கொஞ்சம் நேரம் நடந்த போராட்டத்தில், ``போய்தான் பார்ப்போமே... இங்கு வந்த இத்தனை நாட்களிலும் எங்கு தான் சென்றிருக்கிறோம். Why not?`` என்று தோன்ற, போடுவதற்கு சரியான உடை தேடினாள். யோசனைகளின் தேடலின் பின்னே, துடுக்குத்தனம் செய்யும்போது எல்லாம் வந்து பேசும் அம்மாவின் குரல் சொன்னது, ``Curiosity kills the cat. Think things through before you get it going!’’. ஏனோ அவளுக்கு அது பழகவே இல்லை. ‘’Pretty woman’’ படத்தில் ‘’Julia Roberts’’ I’m not a planner. I live moment to moment’’ என்பாள், அஞ்சனாவிற்கும் தன்னைப் பற்றி நினைக்கும் போது இப்படி தான் தோன்றும்.

ஒரு கருப்பு sleevless dress இருந்தது, வெகு நாளாய் தூங்கிக்கொண்டு. அதை போடலாம் என்று முடிவு செய்தாள். மொபைலில் அம்மா அழைத்துக்கொண்டிருந்தார்கள். சிரித்துக்கொண்டே எடுத்து ஹலோ சொன்னாள். வழக்கமான நலன் விசாரித்துவிட்டு, இன்று வீட்டில் பெப்பர் சிக்கனும், கத்திரிக்காய் கொத்ஸும் செய்ததாகவும், அது அஞ்சனாவின் பிரியமான மெனு ஆகையால் சாப்பிடும்போது எல்லாவரும் அவளைப் பற்றி யோசித்ததாய் சொன்னார்கள். அம்மா இதை சொல்லும் போது எல்லாம் அஞ்சனாவிற்கு தோன்றுவது, வீட்டில் முன்னோர்கள் இறந்தநாள் அன்று அவர்கள் விரும்பிய சமையல் செய்து, படையல் வைத்துவிட்டு, காக்காவிற்கும் சிறிதுவைத்துவிட்டு அவர்கள் சாப்பிடுவது.. சிரித்துக்கொண்டாள்.

பிறகு என்ன செய்யப்போகிறாள் அந்த வார இறுதியில் என்று கேட்டார்கள். முன்னொரு சமயம் ஒரு பார்ட்டி போய் வந்து. அங்கு நடந்த, இவளுக்கு வேடிக்கையாக தோன்றிய நிகழ்வுகளை விவரித்து சொல்ல ஏகத்திற்கு பயந்தே போனார்கள். ஆகையால் பேசும் விஷயங்கள் வடிக்கட்டி சொல்ல துவங்கிவிட்டாள். அம்மாக்கள் பாவம், ஜாக்கிரதைமா.... என்று சொல்லும் அந்த குரல்களில் தான் எத்தனை பரிவு, ஆற்றாமை, ஆதங்கம், அன்பு. ஒரு முறை மனம் வலிக்க கோபத்துடன் எதற்கோ அம்மாவை கடிந்து அழும்சமயம், நடுங்கும் குரலோடு `` என்னால முடிஞ்சா திரும்ப எடுத்து உன்னை பத்திரமா என் வயிற்றுக்குள்ளவே வச்சுக்குவேண்டா... உனக்கு ஏதும் கஷ்டம் வராம பாத்துக்குவேன். என்னால முடியலயே!`` என்றபோது அசந்துபோனாள். அதில் இருந்து அம்மாவை எதற்கும் கோபிக்கக்கூடாது என்று உணர்ந்தாள். என்ன சொல்வார்கள் ``இன்று ஆறு, ஆறரை அடி உயரமுள்ள சுமார் 25 சேய்ஷல்வா ஆண்களுடன் discotheque போகப்போகிறேன்`` என்று சொன்னால்?. கண்முன் விரிந்தது அம்மாவின் முகம். ஏனோ கண்ணுக்கெட்டா தூரத்தில் அமர்ந்துக்கொண்டு, அதுவும் தொலைப்பேசியில் இது போன்ற நுட்பமானவைகளை சொல்லி அவரை disturb செய்யத்தோன்றாது, அம்மாவிற்கு பிடித்த பதில்களையே சொல்லிவைத்தாள். ‘’Sparing the details’’... இவள் சொல்லாது விடுபடும் கணங்கள், அவள் வீட்டை பொறுத்தவரை நிகழாதவைகள். இப்படி எத்தனையுள்ளது விடுபட்டவைகள்... பெருமூச்செறிந்தாள் அஞ்சனா.

அடுத்து மொபைல் அழைக்க, அதில் லூயிஸ். எடுத்து பேச, இன்னும் ஒரு 2 மணிநேரத்தில் கிளம்பலாம் என்றான். கடைசியாக ஒரு தடவை போகப்போகிறோமா இல்லையா என்று உள்ளுக்குள் கேட்டுக்கொண்டு, அவனிடம் சரி என்றாள். லேசாக மனம் பரபரப்பாகிறதை தவிர்க்கமுடியாது கட்டிலில் சாய்ந்தாள். இந்த excitement என்பது எத்தனை அழகான ஒரு feel. அனுபவிக்க வேண்டிய உணர்வு. அவள் laptopல் இருந்த புகைப்படங்களைப் பார்க்கலானாள். வயதிற்கு வந்ததும் அத்தை எடுத்துக்கொடுத்த அந்த பச்சை பட்டுப்பாவாடை, சிகப்பு தாவணி முதல் முறை போட்டு, கை நிறைய கண்ணாடி வளையலிட்டு, இடுப்புக்கும் கீழே வளர்ந்திருந்த அடர்ந்த கூந்தலில் சரம்சரமாய் ஜாதிமல்லி பூச்சூடி, முகத்தில் அங்கங்கே எட்டிப்பார்க்கும் பருவோடு, கண்விரிய சிரித்து அப்பாவின் தோளில் சாய்ந்து நிற்கும் அஞ்சனா.. எத்தனை பாதுகாப்பான அன்பான காலம். அப்பாவின் வியர்வை வாசம் நினைவுக்கு வந்தது. Musky வாசம் லேசாய் விபூதியோடு கலந்தது போல். இருவரின் புருவமும் ஒரே போல இருக்கும். அப்பாவின் மூளை கொஞ்சம் வந்து இருக்கலாம் தனக்கென்று எண்ணியவள், பார்த்தாள் ``எத்தனை நீளமாக இருந்திருக்கிறது அவள் கூந்தல் ஒரு காலத்தில்!`` இப்போது தோள்வரை மட்டுமே.

இன்னும் ஒரு மணிநேரமே இருந்த சமயத்தில், குளிக்க கிளம்பினாள். ஜெனிஸின் இன்னொரு வீட்டில் தான் லூயிஸ் வாடகைக்கு இருந்தான். அஞ்சனாவின் குளியலறை அவளுக்கு பிடிக்காது. அந்த ஊர் முழுக்க எல்லார் வீட்டிலும் ஜன்னல் தெளிவான see through கண்ணாடி பதித்தவைகள் தான், கிரில் வேலைப்பாடோ, மரச்சட்டங்களோ இல்லை. யாராவது தட்டிவிட்டு உள்ளே நுழையலாம். திரைசீலைகளும் அழகுக்கு லேஸ் வேலைப்பாடுடன் உள்ளது தான், கனமானவை கிடையாது. அவள் குளியலறை பாத்டப்பில் இருந்த சுவற்றின் ஜன்னலில் இருந்து சரியாக இரண்டடி எடுத்து வைத்தால் லூயிஸின் சமையலறை கண்ணாடி ஜன்னல் தெரியும். அதுவும் சிறிது மேடாக இருந்த இடத்தில் அவன் வீடு இருந்ததால், அவள் குளியலறை முழுவதும் தெரியும். பகலில் சிறிது பரவாயில்லை, இரவில் விளக்கு போட்டால் இங்கு நடப்பது முழுக்க தெளிவாக தெரியும். லூயிஸ் அப்படிப்பட்ட செயல் செய்பவன் இல்லை. ஆனாலும் அந்த ஜன்னலை மூட இருந்த பழைய டர்க்கி டவல்கள் எடுத்து போட்டிருந்தாள். முழுதாக மறைக்காவிடினும் ஏதோ கொஞ்சம் பரவாயில்லை. இரவு வேலைகளில் விளக்கு போடாமல் இருட்டில் குளிப்பது எத்தனை கடினமான விஷயம்.

சேய்ஷல்ஸில் இருந்த இலைப்பச்சை பல்லியும், இரண்டு விரல் தடிமன் ஸ்கேலில் பாதி அளவுக்கும் மேலே நீளமுள்ள பூரான்களும், கையளவு அகலமுள்ள முசுமுசு முடியோடு முதுகில் சிலுவை போல மஞ்சள் கோடு போட்ட சிகப்பு சிலந்தியும், கண்டு வந்த புதிதில் நடுங்கியே போனாள். அதுவும் அவை வீட்டின் உள்ளேயும், சுவற்றிலும் தரையிலும் அவ்வப்போது தென்பட இவள் அலர, மிராண்டா வந்து விழுந்து விழுந்து சிரித்தாள். அந்த சிலந்தி சிலுவை குறி தாங்கியதால் அங்கே அதை ஒன்றும் செய்யமாட்டார்களாம். துடைப்பம் எடுத்து பட்டும் படாமல் அப்படியே தோட்டத்தில் தள்ளிவிட்டவள் ``இங்கே இருக்கும் 4 வயது குழந்தை கூட பயப்படாது.. நீங்கள் இப்படி ஓடிவிட்டீர்களே`` என்று கிண்டல் செய்தாள். அதனால் குளியலறையில் முதலில் செல்லும்போது சுற்றி முற்றி, இண்டு இடுக்கெல்லாம் பார்த்துவிட்டு தான் ஒவ்வொரு நாளும் குளிக்க செல்வாள். இப்போதும் விளக்கு போட்டு பார்த்துவிட்டு, பின் அணைத்துவிட்டு, உடை கழட்டினாள். ஏனோ அத்தனை அருகில் அதுவும் அத்தனை ஆண்கள் பேச்சு சப்தம் கேட்கும்போது குளிக்கையில் வெட்கமாக இருந்தது. அவசரம் அவசரமாக முடித்து வெளியே வந்தபோது கன்னம் எரிந்தது அவளுக்கு, அவர்கள் பேச்சில் இவள் பெயரடிப்பட்டதை கேட்டு. என்ன பேசிக்கொண்டார்கள் என்று பிடிப்படவில்லை.

தலை ஈரம் துடைத்து, மெல்ல உடை மாற்றி, லேசாக ஒப்பனை செய்து, Poison perfume பூசிக்கொண்டு நின்றபோது கண்ணாடியில் அவளை பார்த்தாள். பொதுவான பெண்களை காட்டிலும் கூடுதல் உயரம். பல சமயம் ஆண்களின் கண்ணுக்கு கண் சமமாய் பார்த்து பேசும் உயரமும் வளர்த்தியும் அவளை திமிர்பிடித்தவளாய் காட்டியிருக்கிறது. அகன்ற தோளும், பரந்த மார்பும், குறுகிய இடுப்பும், விரிந்த இடையும் அவளை ஒரு அடங்கா குதிரை போல் காட்டியது. மெத்தென முன்விழும் கேசமும், அமைதியான ஆனால் அகலமான கண்களும், சற்றே தடித்து லேசாய் பிளந்த அவள் ஈர இதழும், உதட்டின் அருகே இருந்த மச்சமும், மாநிற முக அமைப்பும், பார்த்ததும் வாயடைக்க வைக்கும் அழகு போல இல்லாத போதும், பார்க்க பார்க்க ஏதோ ஒரு ஈர்ப்பை தந்தது. அவள் வீட்டில் அவள் தான் சுமார். அவளின் குடும்பத்திலிருந்த ஏனைய 2nd generation பெண்கள் அனைவரும் வெகு அழகு. அதற்கு ஈடுக்கொடுக்க நிறைய விஷயங்களில் அவளை மெறுகேற்றிக்கொண்டாள் அஞ்சனா. பாட்டு, நடனம், ஓவியம் இப்படி பல. முகத்தால் கவராது போன தூரங்களை இது போன்ற விஷயங்களால் நிறைத்தாள்.

இவற்றை யோசித்துக்கொண்டே இருக்கும்போது மொபைலில் இளையராஜா மந்திரப்புன்னகையோ BJM கொண்டு அழைத்தார். லூயிஸ், ரெடியா என்று கேட்டான். ம்ம்.. என்று சொல்லி கண்ணாடியில் ஒரு முறை முடியை நேராக வாரிவிட்டு, அவள் உடையை பார்த்தாள். முழங்கால் வரை இருந்த அந்த spaghetti straps வைத்த மிருதுவான கருப்பு evening wear அவளுக்கு அழகாக இருந்தது. மார்பு லேசாய் தெரிந்தது உறுத்தியது. கறுப்பு ஹை ஹீல்ஸ் செறுப்பு மாட்டிக்கொண்டு பார்த்தவளுக்கு, அவள் அழகாய் தெரிந்தாள். அழகாக்கி கொண்டு இன்னொருவர் பார்த்து ரசிக்கும்போது ஏற்படும் துள்ளலும், நானும் அழகுதான் என்று லேசாய் வரும் திமிரும் கர்வமும் எல்லோருக்கும் வருமா என்று அஞ்சனாவிற்கு தெரியாது. ஆனால் அவளுக்கு வரும்.

அதற்குள் வெளியே கதவு தட்டப்படும் ஓசை கேட்டதும், அவள் கைப்பை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். வாசலில் லூயிஸ் நல்ல வாசனையுடன் ஜீன்ஸ் இறுக பிடித்த கருப்பு டி ஷர்ட்டும் கருப்பு பூட்ஸும் போட்டுக்கொண்டு பார்த்து `` Wow! Hey gorgeous!’’ என்று கைப்பற்றி முத்தமிட்டு அழைத்துப்போனான் அவன் ஜீப்பிற்கு. அங்கு நின்ற 4 ஜீப்பில் இருந்து வந்த catcalls அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது. யார் வண்டியில் ஏறவேண்டும் என்ற பஞ்சாயத்து முடித்து லூயிஸின் வண்டியிலேயே ஏறினாள் அஞ்சனா. முன்னிருக்கையில் அமர்ந்து திரும்பி பின்சீட்டில் இருந்தவர்களுக்கு ‘’Bon swa ( good evening )’’ என்றாள். அங்கு அவன் அமர்ந்திருந்தான். எல்லாவரையும் அறிமுகம் செய்த லூயிஸ், இவனை பார்த்து ‘’ This is Accouche. Damian Accouche’’ என்றான். எல்லாவருக்கும் பொதுவாய் சிரித்துவிட்டு திரும்பிக்கொண்டாள். அவர்கள் ஏதேதோ பேசி கொண்டே வர, அஞ்சனா தான் ஒருவேளை இவர்களோடு வந்தது தவறோ என்று யோசித்துக்கொண்டாள்.

ஆன்ஸ் லாசியோ ( Anse Lazio )... கூகிளில் உலகின் பிரசித்தி பெற்ற கடற்கரைகளை தேடினால், முதல் பத்து இடத்தில் இருக்கும் இயற்கையின் அழகோவியம். அங்கு அமைந்த ozone discotheque மிக பிரபலம். வாரம் வெள்ளி சனிக்கிழமைகளில் மட்டும் இயங்கும் அது ஒரு 5 நட்சத்திர ஓட்டலின் விஸ்தாரித்த அமைப்பு. இதற்கு முன் இதுபோன்ற இடங்களுக்கு செல்லும்படி நேர்ந்ததில்லை அஞ்சனாவிற்கு. எல்லாமே புதுமையாக இருந்தது. வாசலில் கிங்கரர்கள் போல தடி தடியாக இருந்த Bouncers, neon வெளிச்சம் தோய்க்கும் இருட்டு, காதை பிளக்கும் இசை, அத்தனை அழகான பெண்களும் ஆண்களும், முகம் தாக்கும் விதவிதமான நறுமணமும், சிரிப்பும், பல வித fashionable உடைகளும், இன்னொரு பக்கம் நிலா வெளிச்சமும், மெல்ல குளிரும் காற்றும், பரந்த கடலும்... அஞ்சனாவை சிலையாக்கியது. The whole atmosphere showed realms of two contrasting world.

லூயிஸ் வரசொல்லி அழைக்க, நுழைவாயில் அருகே இருந்த பெண் fluorescent stamp கொண்டு இடது கையில் தேள் படத்தை பொருத்தினாள். `` Ladies first’’ என்று சொல்லி இவளை உள்ளே நுழையவிட்டதும், அவள் பின்னே நுழைந்த 25 ஆண்களும் அந்த அரங்கத்தின் கவனத்தை ஈர்த்தனர். எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்தது இருந்தது, அவளை தவிர. எப்போதும் போல மூச்சடைக்க தனியாக உணர, `` வா! அங்கு இடமிருக்கிறது. வேண்டுமானால் சிறிது நேரம் அங்கு அமர்ந்துக்கொள்`` என்றவனை திரும்பி பார்த்தாள். ஆறடி உயரமும், Gaius Julius Caesar நினைவு படுத்தும் முகவெட்டும், தீவிரமான பார்வையும், திரண்ட தோள்களும் கொண்ட அவனை...டேமியன்.

தொடரும்

யமுனா ராகவன்

தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com