1.
கடவுள்
”இந்தக் கோவில் வேண்டாமா”
என்றாள்.
”உனக்கு பிடிச்ச பிள்ளையார் தான?”
என்றதற்கு
”அதே பிள்ளையார் தான்
ஆனா அந்த பூசாரி தாத்தா
இல்லையே” என்றாள்
”பூசாரியா முக்யம்? சாமிதான முக்யம்”
என்றேன்
”அந்த பூசாரிதாத்தா தான்
என் பாபி பொம்மைக்கும்
திருநீரு பூசுவரும்மா,
அவர் இருக்குற கோவிலுக்கு
மட்டும்தான் வருவேன்” என்றாள்.
2.
பண்ணை சென்ற சிறுமி
கொக்கு பொம்மையை மட்டுமே
பார்த்திருந்தவள்
கொக்கு பறப்பதைப் பார்த்து
அதிசயத்தாள்.
நிஜ கொக்குகள் தொடங்கி
இலைகளின் தளதளப்பின்
மீது அலையும்
உயிர் வண்ணங்கள் வரை
ஆயிரம் கதைகளை
அவளுக்காய்ச் சொன்னார்
தோட்டக்காரத் தாத்தா.
காலுள்ள மரங்கள்,. பறக்கும் மாடு,
பேசும் நாய்கள், ஆப்பிள் பழுக்கும்
சப்போட்டா மரம் என என
தன் பண்ணை அதிசயங்களைச்
சொல்லி அவரைத் திகைக்க வைத்தவள்
பிஞ்சிட்ட பலாமரம் காட்டி
பழுத்திட்டால் தகவல்
அனுப்பும்படி அவரிடம்
வேண்டினாள்.
தாமரை இலை மேல்
தனித்திருந்த நீர்த்துளிகளை
பனிக்கட்டி என்றாள்.
தூரத்து தென்னந்தோப்பை
சாமியின் ஒட்டடைக்குச்சிகள்
என்றாள்
அல்லிகுளத்தை
அலைபேசியில் படமெடுத்து
கைப்பேசிக்கு குளிருதாம்
என சிரித்தாள்
நிலா வந்து அல்லி பூக்கும் வரை
இருந்தாக வேண்டுமென்றவள்
நிலா வந்த போது
அதைப் பார்க்காமலேயே
தூங்கிப் போயிருந்தாள்.
காட்சியில் பிரசுரமான சுமதியின் ஏனைய கவிதைகளுக்கு சொடுக்கவும்
http://kaattchi.blogspot.com/search/label/சுமதி%20கவிதைகள்
April 16, 2010
தொடர்பு
படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com
