பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

March 27, 2010

சொந்த ஊர் இல்லாத நான் - இயக்குநர் ராம்

என்னிடம் சொந்த ஊர் எது எனக் கேட்கப் படும் போது கேட்பவரின் ஊருக்கு அருகில் உள்ள ஊரையே சொல்லிவிடுவது வழக்கம். கேட்டவரும் ஆகா நீங்களும் நம்ம ஊருதானா என புலகாங்கிதம் அடைவார். கேட்பவர் அடைகிற அற்ப சந்தோசத்திற்காய் நான் சொந்த ஊரை திரிக்கவில்லை. நிஜத்தில் எனக்கு சொந்த ஊர் என குறிப்பாய் ஒன்றும் இல்லாததும் சொல்வதற்கு வசதியாய இரண்டு மூன்று ஊர்கள் அகப்பட்டதாலும் இப்படிச் சொல்லக் காரணம்.

5ஆம் வகுப்பு வரை திண்டுக்கல், அம்மாவின் அப்பாப்(என் சங்கரன் தாத்தா) பூர்விகம் மதுரை நாயக்கர் புதுத்தெரு என்பதாலும் அப்புறம் இளங்கலை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்ததாலும் மதுரைக்காரர்கள் கேட்கும் போது என் சொந்த ஊர் மதுரையாகும்.

6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை பூளைமேடு, கோவையில் படித்ததும், தற்போது குடும்பம் கோவையில் இருப்பதாலும் கோவைக்காரர்கள்
கேட்கும் போது என் சொந்த ஊர் கோவையாகும்.

அப்புறம் அப்பாவின் பூர்விகம் ஸ்ரீவைகுண்டம் ஆனாதாலும் இன்னமும் அப்பா வழி உறவு திருநெல்வேலியில் இருப்பதாலும் நெல்லைக்காரர்கள் கேட்கும் போது என் சொந்த ஊர் நெல்லையாகும். ஆக நிஜத்தில் எனக்கு இந்த மூன்று ஊரின் தன்மைகளும் இல்லை. இந்த மூன்று ஊரின் வட்டார வழக்கும் இல்லை.

ஆறில்லாத ஊரில் இளம்பிராயம் கழிந்ததால் வைகையும், பரணியும் என் நீச்சல் அறியாமலேயே ஒடிக்கொண்டிருக்கிறது.

கோவை நட்பு வட்டாரம் என்னை மதுரைக் காரன் என்றும், மதுரைக்கார கூட்டம் என்னை கோவைக்காரன் என்றும் நெல்லைக் கூட்டம் என்னை சென்னைக் காரன் என்றும் சென்னைவாசிகள் உங்கள் ஊர் எது என்றும் கேட்டும் சொல்லியும் என்னை எல்லா இடங்களிலும் அந்நியனாகவே பாவிக்கிறார்கள். i am a outsider where ever i am.

எல்லா அந்நியர்களைப் போலவே எனக்கும் என் சிறு பிராயம் முதற் கொண்டே எனக்கு பூர்விகத்தைப் பற்றிக் கதைக் கேட்கவும் போய் பார்க்கவும் பிடிக்கும். விடுமுறைக்கு வருகிற உறவினர்களைப் பிடிக்கும். அத்தைக்கு அழகான மகள் இல்லையே என்ற வருத்தத்தைத் தாண்டி நெல்லையப்பர் கோவிலுக்கு அருகில் இருந்த அத்தையை அத்தான்களை மதினியை அன்னாச்சிகளை பிடிக்கும்.

வல்லநாட்டு ஆச்சி, முனைஞ்சிப்பட்டி ஆச்சி ஓட்டபிடாரத்து ஆச்சி என என் அப்பாவின் அம்மாவுடைய (செல்லம்மா ஆச்சி) சகோதரிகள் குடும்பத்திலிருந்து எப்போதாவது வருகிற சித்திக்கள், சித்தப்பாக்கள் அவர்கள் கொண்டு வருகிற லாலா அல்வாக்கள் வரும் போது அவர்கள் சொல்கிற கதைகள் என எல்லாம் பிடிக்கும்.

குந்தா சித்தப்பா ராம்நாட்டு சித்தப்பா என சித்தப்பாக்கள் இருந்த ஊர் பெயரை வைத்தே அவர்களை அழைத்தோம். பயணங்கள் ஆபூர்வமான அந்தக் காலங்களில் ஊர்கள் மீதான பிரியமும் அபூர்வமும் கனவும் நிறையவே இருந்தது. ஒவ்வொரு ஊரும் மற்ற ஊரிலிருந்து வேறு பட்டதாகவே அப்போதெல்லாம் இருந்தது. இந்த 2010 ல் எல்லா ஊரும் ஒரே மாதிரி ஆகிவிட்டது.

ஊரில் இருந்து திருமணத்திற்கு ஏதாவது விசேசத்திற்கு என வருபவர்கள் அவர்கள் வாழ்கின்ற ஊரின் தன்மையோடு வந்தார்கள். திண்டுக்கள் ஜான் மாமா , உறவில்லை யென்றாலும் நாங்கள் திண்டுக்கலில் வசித்த போது குடும்ப நண்பர் ஆனவர். இஸ்லாம் சமயத்துக்காரர். தி.மு.க அனுதாபி. பிரமாதமான மீசை உண்டு அவருக்கு. என்னுடையை 9 வயதில் அவருடைய மிதிவண்டியைத் தான் ஓட்டிப் பழக்கினேன். என்னுடைய 15 வயது வரை தொடர்பிருந்த்தது. சிறுமலை வாழைப்பழத்தோடும், பாலாப்பலத்தோடும் தான் அவருடைய வருகை இருக்கும். கட்டி அணைக்கையில் அவரிடம் இருந்து வரும் வேர்வையின் மனமும் அவரின் அந்த மீசை குத்தலும் இன்னமும் மிச்சம் இருக்கிறது நினைவு நாசியில்.

அப்புறம் திண்டுக்கல் சம்பாக்கா அவரோடு வரும் பாண்ட்ஸ் பவுடர் மனம், முகத்தை அன்போடு கிள்ளி அணையும் அவரின் உரம் மிகு கரங்கள், லாரிக்காரம்மா கை அப்படித்தான் இருக்கும் என அம்மா சொல்லுவாள். திண்டுக்கலில் இருந்து வந்து போன கன்னங்கரேர் சராதி மாமா, தனித்த குரல் நாயுடு மாமா அவர், பக்கத்து வீடுதான். மீனாம்மா என்று என் அம்மாவின் அம்மாவை அழைப்பவர்கள் அவர்கள், புனிதன் அம்மா(எனக்கு வீட்டுப் பெயர் புனிதன்) என்று என் அம்மாவை அழைப்பவர்களும் அவர்களே.

சாரதி மாமா வீட்டில் 6 பேர், மற்றவர்களின் பெயர் நினைவில் இல்லை.
ஆனால் அந்த நாயுடு முகங்கள் அவர்களின் விதவிதம்மான கற்கள் பதித்தத் தங்கச் சங்கிலிகள் என எல்லாம் நினைவோடு இருக்கிறது. கோவைக்கு இவர்கள் வரும் பொழுதெல்லாம் திண்டுக்கலோடு வந்தார்கள். இன்னமும் இவர்களுக்கு என் அம்மா புனிதன் அம்மா தான். (புனிதன் ஆகிய நான் அப்பாவாகி 7 வருடம் தாண்டி விட்டாலும்)

அப்போதெல்லாம் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர்கள் ஊர் மாறிப் போனபின்னும் பார்க்க வந்தார்கள். சாதி தாண்டி மதம் தாண்டி எல்லோருக்குள்ளும் உறவும் உறவுக்குப் பேரும் ஊரின் பேரும் இருந்தது. வல்லநாட்டிலிருந்து வருபவர்களைப் போல் திண்டுக்கல் காரர்கள் இல்லை, திண்டுக்கலில் இருந்து வந்தவர்களைப் போல் திருப்பூர்காரர்கள் இல்லை.

என்னுடைய 4 வயதில் இருந்து 7 வயது வரை திருப்பூர். சசியம்மா, ஆனந்தியம்மா, என அம்மாக்களும் சசி ஆனந்தி போன்ற பிள்ளைகளும் நிறைந்திருந்த காலம் அது. என் அம்மாவின் பெயர் கஸ்தூரி அம்மா ஆகிவிட்டது திருப்பூரில்(என் தங்கையின் பெயர் கஸ்தூரி) ஆனந்தி என் முதல் சிநேகிதி. என்ன ஆயிருப்பாளோ அந்த திருப்பூர் ஆனந்தி இப்போது? திருப்பூர் காரர்கள் வரும் பொழுது பெரும் பாலும் தேங்காய் பன்னும் மெக்ரூன்னட்டும் வாங்கி வருவார்கள். நாங்கள் விட்டு வந்த கோர்ட்டர்ஸ் கதை இருக்கும்.

நாங்கள் இருந்த போது வந்த திருடர்கள் மீண்டும் உலா வருவார்கள் வீட்டிற்கு வந்த அவர்களின் கதைகளில். தொலைக்காட்சி இல்லாத அடிக்கடி மின்சாரம் வேறு நெடும் நேரத்திற்கு போன காலங்களில் நாங்கள் அவர்களோடு இருந்தோம். மரத்தின் அடியில் மண்ணெண்ணை விளக்கில் அம்மாக்களும் பிள்ளைகளும் உண்டு ஆடிய மாலைப் பொழுதுகளை அவர்கள் மீண்டும் நிகழ்த்துவார்கள். அந்தக் காலங்களில் அம்மாக்களும் பிள்ளைகளைப் போலவே வாழ்ந்தார்கள் என்பது இன்றைக்குப் புரிகிறது.

தொலைக்காட்சி வந்த பிறகு அவர்கள் வீட்டிற்கு வந்த காலங்களில் முன்னைப் போல கதைகள் இல்லை. அப்புறம் சேனல்கள் கூடக்கூட அவர்கள் காணம்மாலேயே போனார்கள். ஆனால் இன்னமும் எங்காவது சந்திக்கையிம் என் அம்மா இவர்களுக்கு கஸ்தூரி அம்மாதான்.(கஸ்தூரி இரண்டு குழந்தைக்கு அம்மாவாகி என் புதிய மறுமகளைப் பார்த்துக் கொள்வதற்காய் என் அம்மாவை(அவளுக்கும்தான்) நாடுகடத்தி நியூ செர்சி கொண்டு போய்விட்டாள்.)

நியூ செர்சியில் என் அம்மாவை என்னவென்று அழைக்கிறார்கள் எனத் தெரியவில்லை. திருப்பூர்காரர்களுக்கும் திண்டுக்கல் காரர்களிடம் இருந்து வெகு தொலைவு போன அம்மாவை சாரதி மாமா நியூசெர்சியில்
போன மாதம் சந்த்தித்தார் என அம்மா சொன்னாள். நிச்சயம் புனிதன் அம்மா என்று தான் அழைத்திருப்பார் அவர். ஒரு வேளை ஆனந்தியும் கூட எங்கோ அய்ரோப்பியக் கண்டத்தில் மூக்கொழுக்கிக் கொண்டிருக்கலாம்?

இப்போதும் கூட வருகிறார்கள் வெவ்வேறு ஊர்களில் இருந்து ஆனால் அவர்களோடு ஊர் வருவதில்லை. எல்லோரும் ஒரு ஊர்காரர்களாய் ஒரே தன்மையுடையவர்களாய் விசேசப் பரிசுப்பொருட்களோ விசேச ஊர் பதார்த்தங்களோ இன்றி வருகிறார்கள். பக்கத்து வீடுகளில் இன்னமும் மனிதர்கள் தான் வசிக்கிறார்கள். ஆனால் அடுத்தடுத்த சுவர்கள் மட்டும்மே பேசிக்கொள்ள சென்னை ஜீவிக்கிறது. ஆக சொந்த ஊர் எந்த ஊராக இருந்தாலும் பெரிய வித்தியாசங்கள் இல்லை என்பதால் எந்த ஊரையும் சொல்லிக் கொள்ளலாம் சொந்த ஊர் என.

ராம்.


என் அப்பாவின் பிறந்த வீட்டிற்கு முதன் முதலாய் 2009 ல் போன போது எடுத்த படம். 1975ல் விலைக்கு வாங்கியவர்கள் இன்னமும் வீட்டை புதுப்பிக்காமல் இருப்பது 
ஆச்சர்யம் தான். 





தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com