உங்களுக்கு இரயிலை பிடிக்குமா? என்ன இது கேள்வி யாருக்குத்தான் இரயிலை பிடிக்காது . ஒருவேளை குஜராத்தில் இருக்கும் பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட எல்லாருக்கும் ரயிலை பிடிக்கத்தான் செய்யும்.(இந்த நேரத்தில் பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இருக்கை கிடைக்காமல் பயணம் செய்துகொண்டிருப்பவர்களை தவிர)
ஆரம்பத்தில் எனக்கும் இரயில் பிடித்த பால்யம்தான் .ஆனால் எனக்கு இப்போது ரயில் பிடிப்பதில்லை ஆம் ரயிலை நான் வெறுக்கிறேன். அதன் சத்தம் தூரத்தில் கேட்டாலும் இரு காதுகளையும் பொத்திக்கொள்ள கூடியவனாகவே இருக்கிறேன். எனது வெறுப்பு ஒரு அழகான பெண் உங்களை அண்ணா என்று அழைத்தால் உங்களுக்கு வரும் சாதரண வெறுப்பை போன்றது அல்ல…..
எங்கோ தூரத்தில் கேட்கும் அந்த ரயிலின் சத்தம் உங்களுக்கு என்னவெல்லாம் நினைவுபடுத்தக்கூடும் உங்களின் பால்யத்தை ,உங்கள் காதலியை, நசுக்கப்பட்ட அந்த வெள்ளிகாசுகளை, பழைய பாடல்களை சத்தம் போட்டு பாடும் கண் தெரியாத அந்த பெரியவர்களை, உங்களின் பணம் இல்லாத பர்சை கஷ்டப்பட்டு திருடிய அந்த திருடனை, வியர்வைகள் காட்டிக்கொடுத்த கசங்கிய பெருத்த மார்புகளை , கடைசிவரை பெயர் கேட்காமல் பார்த்து பார்த்து ரசித்த அழகிய பெண்களை இப்படி எதுவாகவும் இருக்கலாம், ஆனால் எனக்கு அந்த ரயிலின் சத்தம் வழி தெரியாமல் மேய்ந்து திரிந்து எங்கோ தொலைந்து கதறும் ஒரு பசுமாட்டின் சத்தத்தையே நினைவுபடுத்துகிறது.
நீங்கள் ஆளில்லாத காடுகளில் நீண்டு பெருத்த பாம்பை போல செத்துகிடக்கும் அந்த தண்டவாளங்களில் நடந்திருப்பீர்கள் ஒரு ரயிலைப் போல சத்தமிட்டு ஓடியிருப்பீர்கள். ஆனால் அந்த தண்டவாளங்களுக்கு நடுவில் காய்ந்தும் காயாமலும் கிடக்கும் மாட்டு சாணங்களை பார்த்திருப்பீர்களா…. சத்தியமாய் பார்க்காமல் மிதித்து சீ என்று காலைதான் உதறியிருப்பீர்கள் .அப்படி ஒரு மாட்டு சாணத்தின் வீச்சம் இப்போது உங்கள் நினைவில் இருக்குமெனில் அதற்கு பின்னால் எத்தனையோ மொழியற்ற ஜீவன்களின் பெரும் கதைகளோ வாழ்வோ இருக்ககூடும் .இதோ எனக்கும் நாங்கள் வளர்த்த மாட்டிற்கும் இருக்கும் ஒரு பத்து நாள் வாழ்வைப்போல….
அம்மாவின் நீண்ட நாள் நச்சரிப்போடு எனது ஏழாம் வகுப்பு கோடை விடுமுறைக்காகவும் தாதன்குளம் தங்கராஜ் வாத்தியார் வீட்டிலிருந்து நன்றாக சுடப்பட்ட செங்காமட்டை கலரில் ஒரு மாட்டை பிடித்துக்கொண்டு வந்தார் அப்பா.
மாடு அப்படியிருந்தது அம்மா தடவி தடவி முத்தம் கொடுக்கும் அளவுக்கு ,ஏதோ ஒரு பழைய சினிமா நடிகையை நினைவுபடுத்தக்கூடிய முகம் அதற்கு. எனக்கு அதன் முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை எனது ரெண்டு மாத விடுமுறையை குத்தகைக்கு எடுக்க வந்த சனியன். யாருக்கும் தெரியாமல் சட்டையில் மாட்டியிருந்த சின்ன ஊக்கை எடுத்து அதன் வயிற்றில் குத்தினேன் அதன் வாலால் ஒரு அறை கொடுத்தது ,எல்லாரும் சிரித்தார்கள் .இப்போதுதான் முதன்முதலாக அது என்னை திரும்பி பார்த்தது.நான் வேகமாக தலையை குனிந்து கொண்டபோது வடமலையான் செல்லையா தாத்தா சொன்னார் “இன்னும் மூனு மாதத்துல ஈனிடும்” என்று
முதல்நாள் அம்மா ஆயிரம் அறிவுரைகளோடு என்னோடு அதை மேச்சலுக்கு அனுப்பி வைத்தார். “டேய் மாட்டை பக்கத்துல நின்னு பாத்துக்க, எந்த மாட்டையும் மேலே ஏற விடாத, தூரமா போகிறதுக்கு சோம்பறபட்டு மொட்டைக்காட்டுல மேய்ச்சு கொண்டுவந்திடாத, ரயில் ரோட்டுக்கு அந்தபக்கம் கொண்டுபோய் பச்சை இருக்கிற இடத்துக்கு போ ,எப்பா ராசா எவன் வயல்லயும் இறங்கிடாம இரக்கங்கட்ட பயலுவ செனை மாடுன்னுகூட பார்க்காம கொத்தி கிழிச்சு விட்டுருவானுங்க……அம்மா சொன்னது எல்லாம் நினைவில் இருந்தது.
அந்த ரயில் தண்டவாளத்தை தாண்டும் வரை நாங்கள் ஒருத்தர் முகம் ஒருத்தர் பார்த்துகொள்ளவில்லை. என் கயிற்றுப்பிடியில் அது விரும்பாத மாதிரியே வந்தது .அதுக்கு தங்கராஜா வாத்தியார் மேல கோபம் போல பச்சையில் அதை அவிழ்த்துவிட்டு நான் ஆலமரத்தில் போய் உட்கார்ந்து கொண்டேன்.
எனக்கும் அதற்கும் சம்பந்த்மில்லை யார் வந்து அதை என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை சனியன் சாகட்டும் என்பவனைப் போல தான் இருந்தேன். மேற்கே போகும் அந்த முதல் ரயில் வரும் வரை. சரியாக கிழக்கிலிருந்து கால்வாய் ரயில்வே கேட் அருகேதான் கேட்டது அந்த ரயிலின் சத்தம் கேட்டதும் சடால் என்று தன் தலையை சிலுப்பி சத்தம் வந்த திசையை அது தேடியதும் அப்போது அது நான்கு திசையிலும் பார்த்த பார்வை என்னை பயம் கொள்ளசெய்யக்கூடியதாகவே இருந்தது. அடுத்த சத்தம் கேட்டதும் தான் தாமதம் சத்தம் வந்த திசையை நோக்கி எடுத்தது ஓட்டம் அதன் ஓட்டம் தன் வயிற்றில் வளர்ந்துகொண்டிருந்த குட்டியை பறித்துக்கொண்டு ஓடுபவனை துரத்துவதை போல இருந்தது.
நான் போட்ட கூச்சலில் ஆங்காங்கே நின்றுகொண்டிருந்த சிலர் ஓடி வநதார்கள். அதுக்குள்ளே மாடு தண்டவாளத்தில் ஏறியிருந்தது. கிழக்கிலிருந்து வரும் ரயிலை இது மேற்கிலிருந்து ஓடி முட்ட வேண்டும் என்பதுபோல் நேருக்குநேராக ஓடியது. நான் அழுது கூச்சலிட்டதும் சிலர் கத்திக்கொண்டு மாட்டை பிடிப்பதற்காக ஓடினார்கள் . ரயிலும் மாடும் சந்திக்க இன்னும் கொஞ்ச தூரத்தில் நின்ற ஒரு பெரியவர் மறித்து மாட்டை அதன் மூக்குசரடை பிடித்து இழுத்து தண்டவாளத்தில் இருந்து இறக்க எதுவும் தெரியாதவன் போல கடந்து போனது ரயில்.ரயில் மறையும் வரை அதையே பார்த்த மாட்டை என்னிடம் கொண்டு கொடுத்தார்கள் சிரித்தபடி ஆனால் யாருக்கும் காரணம் தெரியவில்லை.
வீட்டை அதகளப்படுத்தினேன் அழுதுகொண்டே லூசு மாடு என்று. அப்பாதான் சொன்னார் தாதன்குளத்தில் தங்கராசா வாத்தியார் வீடு ரயில்வே ஸ்டேசனுக்கு பக்கத்திலாம் அதுதான் ரயிலை அடயாளமாய் வைத்து அதன் பின்னால் ஓடினால் தாதன்குளம் போய்விடலாம் என்று ஓடுகிறது போக போக சரியாகிடும். என்று நான் அழுதுகொண்டே சொன்னேன் “அப்படின்னா ரயிலுக்கு பின்னாடிலா ஓடனும் எதுக்கு அதுக்கு முன்னாடி ஏன் ஓடனும் “ எல்லாரும் சிரித்தார்கள்.
இரண்டாவது நாளும் மூன்றாவது நாளும் ரயில்கள் வருவதற்கு முன்னரே அம்மா சொன்னதைப் போல மூக்குச்சரடை பிடித்துக்கொள்வேன். ரயில் எங்களை தாண்டிப்போனதும் விடுவேன் பாருங்கள் ஓடும் ரயிலை துரத்திக்கொண்டு அதன் பின்னால் ஓடி கொண்டே இருக்கும் வாய்க்கால் பாலம் வரும்வரை அதன்பிறகு பாலத்தை தாண்டாமல் அங்கு நின்று கத்திக் கூப்பாடு போடும் . பின்னர் சென்று கயித்தை பிடித்து இழுத்து வருவேன்.அப்போது அது என்னை ஒரு பார்வை பார்க்கும் பாருங்கள் எந்த ஜென்மத்திற்கும் நீயும் நானும் நண்பனில்லை, .உன் சிரிப்பு மிருகத்தை கொல்லும் சிரிப்பு அது ஒரு நாளும் எனக்கு பிடிக்காது. உன்னை ஒருநாள் நான் கொலை செய்யக்கூடும் ஜாக்கிரதை என்பதை போல இருக்கும்.
இப்படி ஏழு நாட்களும் அது ரயிலின் பின்னாடி ஓடுவதும் வாய்க்கால் பாலத்தை தாண்டாமல் நின்று கதறுவதையும் ஒரு பட்டாம்பூச்சியை பிடித்து ரசித்துக்கொல்லும் குழந்தையென விரும்ப தொடங்கிவிட்டிருந்தேன் நான்.
எட்டாவது நாள் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் பார்ப்பதற்கு வசதியாக வீட்டிலிருந்து நிறைய துண்டு கயிறுகளை எடுத்து வந்திருந்தேன் .ஒரு கம்பை நிலத்தில் அரைந்து கயிறுகளை ஒன்றுடன் ஒன்று முடிச்சி நீளமாக கட்டி மாட்டை கட்டி போட்டுவிட்டு பக்கத்து தெருவுக்குள் கிரிக்கெட் பார்க்க போனேன் நான் போகுவரை அது கொஞ்சமும் புல்லை மேயாமல் என்னையே பார்த்தது எனக்கு சந்தேகம் தான் இருந்தாலும் முதல் ரயில் வருவதற்குள் வந்துவிடலாம் என்று போனேன். போயிருக்ககூடாது நான் .
ஒரு விளம்பர இடைவெளியில் ஆளாளுக்கு பேசிகொண்டிருந்த நேரத்தில் நல்லவேளை கரண்ட்போனது கேட்டதோ அந்த ரயிலின் சத்தம் பதறிகொண்டு ஓடினேன் .நான் தெருவை தாண்டுவதற்குள் ரயில் வாய்க்கால் பாலத்தை தாண்டிவிட்டதை என்னால் யூகிக்க முடிந்தது. இருந்தாலும் ஓடினேன்.
ரயில் தண்டவாளத்தை தாண்டும்போதே எனக்கு தெரிந்துவிட்டது ஆம் எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது .கட்டிபோட்டிருந்த இடத்தில் இப்போது மாட்டை காணவில்லை ரயிலோ தாதன்குளம் ரயில்வே ஸ்டேசனை தாண்டி போவதை என்னால் உணரமுடிந்தது.மறுபடி தண்டவாளத்திற்கு வந்து வாய்க்கால் பாலத்தை பார்த்தேன் பாலத்தில் நான்கைந்து பேர் அங்குமிங்குமாக ஓடி கொண்டுருந்தார்கள். தூரமாக இருந்ததால் சரியாக என்னால் என்ன நடக்கிறது என்பதை சரியாக கணிக்க முடியவில்லை என்றாலும் கொஞ்ச நேரத்திற்கு பிறகு என்னால் சரியாக கணிக்க முடிந்தது நடுபாலத்தில் ஒரு மாடு ரயிலில் அடிப்பட்டு செத்துகிடப்பதை.
நீங்கள் நினைப்பது போல் நான் அழாமல் இல்லை என்னால் அழுகாமல் இருக்க முடியவில்லை அது என்னை தினமும் பார்த்த கோபமன அந்த முறைத்த முகம் என் முன்னால் வந்துவந்து போனது. ஐயோ அது சிதைந்திருக்குமோ என்று நினைத்தப்போது அழுகை இன்னும் பீறிட்டு வந்தது.என்னால் என்னை கட்டுபடுத்த முடியவில்லை தண்டவாளத்தில் உட்கார்ந்தே அழதொடங்கிவிட்டேன். அங்கு போய் அதை பார்ப்பதற்கு சத்தியமாய் என்னுள் துணிச்சல் இல்லை .அதேபோல் இன்னும் ஒரு அரைமணி நேரம் நான் போகாமல் இருப்பேனெனில் மாடு அடிப்பட்ட சுவடே இல்லாமல் ஆக்கிவிடுவார்கள் எங்கள் ஊர் வாலிபர்கள் ஆம் சந்து சந்தாக அறுத்து எடுத்து சென்றுவிடுவார்கள் இதற்காகவே ரயில் தண்டவாளங்களில் காத்திருக்கும் மனித கழுகுகள் அவர்கள்.
என்ன செய்வதென்று தெரியவில்லை. ஐயோ! அது எப்படி கதறியிருக்கும் டேய்! என்னை காப்பாற்றுடா என்று என்னை கூப்பிட்டிருக்குமா, அதன் சின்ன அந்த வயித்தில் இருந்த குட்டியும் செத்திருக்குமா, இனி நாம் வீட்டுக்கு போக முடியாது இப்படியே எங்கவாவது ஓடிபோய்டலாம் சத்தியமாய் தலை வெடித்துவிடுவது போல் இருந்தது. அப்போது பாலத்திலிருந்து ஒரு சைக்கிளில் அறுத்தெடுக்கப்பட்ட செங்காமட்டை கலர் மாட்டு செப்போடு வந்த கண்ணன் அண்ணன் என்னைபார்த்து சொன்னான்.
“டேய் என்ன இங்க உட்கார்ந்திருக்க அங்க பாரு மாடு செத்துகிடக்கிறத இப்படிதான் ஒருநாள் உன் மாட்டுக்கும் சாவு இருக்கும்னு நினைக்கிறேன் போடா போய் மாட்டை பத்திரமாய் பார்த்துகோடா”என்று அவர் சாதரணமாய் சொல்லிவிட்டு போனதை என்னால் நம்பமுடியவில்லை ஆனால் சிரிக்க முடிந்தது. ஓடினேன் மாட்டைத் தேடி.
குத்திக்கிழிக்கும் முள் புதர்களுக்குள் ”ம்பா ம்பா” என்றே சத்த்ம் போட்டுகொண்டே தேடினேன்.இப்போது உங்களிடம் கண்டிப்பாய் ஒன்றை சொல்லியாக வேண்டும் எனக்கு இப்போது அதன்மீது எந்த பரிதாபமோ பாசமோ இல்லை அதெல்லாம் என்னைவிட்டு எப்போது போனதென்றும் தெரியவில்லை . இப்போது முள்கள் கிழிக்க கிழிக்க எனக்கு அதன்மீது ஆத்திரம்தான் வந்தது. நான் நினைத்ததுபோலவே ஒரு பெரிய முள்புதருக்குள் சிக்கி எங்கும் ஓட முடியாமலும் கத்தவும் முடியாமலும் கிடந்தது அது.என்னை பார்த்ததும் வெட்கத்தில் தலையை அது நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அந்த முள் புதருக்குள் இருந்து விடுவிப்பதற்குள் எனக்கு போதும் போதுமென்றாகிவிட்டது. ரெண்டு பெரிய முள்கள் என் சட்டையில்லா முதுகை கிழித்தெடுத்த எரிச்சலும் வலியும் எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்த மறுபடியும் அதை ஒரு முள்மரத்தில் கட்டிப்போட்டு ஒரு பெரிய கம்பை எடுத்து அடிக்கத் தொடங்கிவிட்டேன். அது அலறி துடித்தது வாலால் என்னை அடிக்க நினைத்தது .என் கோபம் தீரும்வரை அடித்துவிட்டு ரெண்டு மாடுகளாய் வீட்டை நோக்கி போனோம் நாங்கள்.
அதன்பிறகு என் முகத்தை பார்ப்பதற்கோ தெரியாமல் என் மீது உரசுவதற்கோ அதற்கு கொஞ்சம் கூட விருப்பம் வரவில்லை .நானாக போய் அதன் வயித்தில் கடித்துக்கொண்டிருக்கும் கொசுக்களை தட்டிவிட்டால் கூட அது என்னை வாலால் வேகமாக அடித்து விரட்டியது. இப்போது ரயில் போனபின்பும் நான் அதை விடுவதில்லை. ரயில் போய் மறையும் வரை நான் அதன் கயிற்றை பிடித்துகொண்டே இருப்பேன் அது என்னை கெஞ்சுவதுபோல் பார்க்கும் தன் கயித்தை இழுக்கும் .ரயில் போனதிலிருந்து சரியாக அது மேயவும் செய்யாது.
அது பத்தாவது நாள் .எங்கள் வீட்டுக்கு அது வந்து, எனக்கும் அதுக்கும் குருட்டுத்தனமான ஏதோ ஒன்று தொடங்கி… கிளாக்குளத்திற்கு கிரிக்கெட் விளையாட அழைத்துப்போக சுந்தரும்,பாண்டியனும் வந்தார்கள்.
”டேய் நான் வரலடா இந்த மாடு ரயில பார்த்து ஓடிக்கிட்டு இருக்கு எதாவது ஆச்சுனா அப்புறம் நான் வீட்டுக்கே போக முடியாது” என்றேன் . அதற்கு சுந்தர் “ டேய் கயித்துல கட்டிப்போட்டுவிட்டு வாடா” என்றான். “டேய் அது அன்னைக்கு கயித்தை அத்துக்கிட்டு போய்ட்டு நான் வரல நீங்க போங்கடா” என்று நான் சொன்னதற்கு அவசர அவசரமாக பாண்டியன் சொன்னான். “டேய் அந்த செல்லையா கோனார் தோட்டத்துல விட்டுட்டு போவோம் அவருக்கு சனி, ஞாயிறுதான் பேங்க லீவு, யாரும் வரமாட்டாங்க, உள்ளவிட்டு தட்டிக்கதவை பூட்டிட்டு போகலாம் எங்கயும் போகவும் முடியாது, ஓட முடியாது எப்படி “ இது எனக்கு சரியான யோசனையாகபட்டது .அங்கு நல்ல பச்சையும் உண்டு என்ன அங்க நாத்தும் போட்டுருக்காங்க சரி ஒரு நாள் தான பார்த்துகிடலாம் யாருக்கு தெரிய போவது என்று மாட்டை பிடித்துகொண்டு போய் செல்லையா கோனார் தோட்டத்தில் உள்ளே விட்டு அந்த பெரிய கேட்டை பூட்டிவிட்டு நடந்தேன். கொஞ்ச தூரம் சென்று நான் திரும்பிபார்த்தேன் ஆனால் அது என்னை பார்காமல் நன்றாக பச்சையை மேய தொடங்கியிருந்தது.
விளையாடும்போது கேட்ட ரயில் சத்தங்கள் என்னை விளையாடவே விடவில்லை. அந்த நேரங்களில்தான் எனக்கு ரயிலின் சத்தம் என் மாட்டின் அலறல் சத்தமாக மாறிப்போயிருந்தது. விளையாட்டு முடிந்தும் முடியாமலும் ஓடிவந்தேன். ஒருவேளை கேட்டை தாண்டியிருக்குமோ இல்லை அவ்வளவு பெரிய கேட்டை தாண்டியிருக்க முடியாது. ஆனால் அந்த வேலியை தாண்டியிருந்தால் வேகவேகமாக ஓடினேன். வேகமாய் ஓடிப்போய் கேட்டை திறந்து பெரும்மூச்சு சத்ததோடு நின்ற என்னை அமைதியாக திரும்பிபார்த்தது என் மாடு. முதன்முதலாய் அதுக்கு என்னை பிடித்திருக்கிறது என்பதுபோல் இருந்தது அந்த பார்வை. பார்த்து கொண்டேயிருந்தது.
நான் சிரித்தேன் அதுவும் என்னை பார்த்து சிரிப்பதுபோல் இருந்தது அந்த நொடியில் எனக்கும் அதுக்குமான ஒரு வழுவான நட்பு தொடங்கியிருந்ததை என்னால் ஒரு வித பரவசத்தோடு உணரமுடிந்தது. இன்று அது நன்றாக மேய்திருந்தது போலும் வயிறு கும்மென்றிருந்தது நல்ல அசைபோட்டு மேய்ந்திருக்கும் போல . முதன்முதலாக நல்ல நண்பர்களைப்போல வீட்டை நோக்கி புறப்பட்டோம்.
மாட்டை தொழுகில் விட்டுவிட்டு நான் வீட்டிற்குள் போய் ஒரு தக்காளியை வாயில் வைத்து கடிக்கும்போதுதான் அம்மாவின் அலறல் சத்தம் கேட்டது. ”ஐயோ படுபாவி குடிய கெடுத்தானே” என்றதும் எல்லாரும் தொழுவை நோக்கி ஓடினார்கள் நானும்தான். அங்கு என்னால் நம்பவே முடியவில்லை என் மாடு கீழே விழுந்து கிடந்தது அதன் வாயில் வெள்ளை நுரை தள்ளிகொண்டிருந்தது. அம்மா என்னை அடி அடி என்று அடிக்கத்தொடங்கியிருந்தாள் எல்லாரும் வந்து பிடித்தார்கள் எனக்கு என்ன நடக்கிறது புரியவில்லை அப்பாதான் என்னை அம்மாவிடமிருந்து மீட்டார். வடமலையான் செல்லையா தாத்தாவை கூட்டிவந்தார்கள். அவர் வந்து மாட்டை பார்த்துவிட்டு என்னைபார்த்து கேட்டார் “டேய் மாடு எங்கியும் வயக்குள்ள எறங்கிச்சா.” என்றதற்கு நான் பதில் சொல்லாமல் அழுதுகொண்டே இருந்தேன் அம்மா அதட்டினாள் மறுபடியும் செல்லையா தாத்தாவே சொன்னார் “வயக்குள்ள இறங்கிருக்கு பழம் சாப்பிட்டுருக்கு படுபாவிக இப்படியெல்லாமா பண்ணுவானுங்க இரக்கிமில்லாம எப்படிதான் பழம் போட மனசு வருதோ இன்னும் கொஞ்ச நேரம் கூட தாங்காது தூக்கிட்டுப்போய் தண்டவாளத்திற்கு அந்தபக்கம் உள்ள கிடங்குகிள்ள போட்டுட்டு வாங்க நிறை பசு வீடல் செத்தா குடும்பத்துக்கு ஆகாதப்பா” என்றார். (பழம் போடுதல் என்பது பயிரை மேய வரும் ஆடு மாடுகளை கொல்ல வாழைபழத்தில் குருனா என்கிற விஷமருந்தை வைத்து ஆங்காங்கே வயலை சுற்றி போடுவார்கள்)
அம்மா இன்னும் அழுதுகொண்டும் என்னை திட்டிக்கொண்டும் இருந்தாள். நான்கு வாலிபர்கள் வந்து மாட்டுவண்டியில் மாட்டை தூக்கிவைத்தார்கள். என்னால் மாடு சாகப்போகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆனாலும் அழுதுகொண்டேயிருந்தேன் .அம்மா சொன்னாள் என்னைபார்த்து “போய்டு அப்படியே வீட்டுக்குள்ள வந்திராத சண்டாளபாவி” என்று நான் அழுதுகொண்டே மாட்டுவண்டியில் போன மாட்டை பின் தொடர்ந்தேன்.
அதன் முகத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று எக்கிப்பார்த்தேன் அது தன் உயிர் போய்கொண்டிருக்கும் கண்களால் என்னை பார்த்த பார்வையை என்னால் தாங்கிகொள்ளவே முடியவில்லை சத்தமாய் பீறிட்டு அழுதேன் வாலிபர்கள் அதட்டினார்கள் என்னை.
சரியாக மாட்டுவண்டி தண்டாவத்திற்கு அருகே வரும்போதுதான் கடைசி வண்டியின் சத்தம் காலவாய் ரயில்வே கேட் அருகே கேட்டது . எல்லாரும் ரயில் போகட்டும் என்று தண்டவாளத்தை கடக்காமல் காத்திருந்தார்கள். எனக்கு ரயிலின் சத்தம் அதிகரிக்க அதிகரிக்க மாடு எழுந்துவிடும் என்ற நம்பிக்கையில் அழுவதை நிறுத்திவிட்டு மாட்டையே உன்னிப்பாய் பார்த்துகொண்டிருந்தேன். ரயில் மிக அருகில் வந்தபோது அதன் வாலையும் கொஞ்சம் வயித்தையும் மட்டுமே தூக்கியது. எதுவும் தெரியாமல் அந்த ரயில் அதே சத்தத்தோடு கடந்துப்போக உயிரற்ற பிண்மாய் என் மாடும் உயிருள்ள பிணமாய் நானும் அந்த தண்டவாளத்தை கடந்தோம்…..
மாரிசெல்வராஜ்.

