ஃபத்துவாக்களைப் பற்றி அடிக்கடி பத்திரிகைகளில் படிக்கின்றோம். ஈரான் மத குருமார்கள் அவ்வப்பொழுது அறிவிப்பார்கள், இவர் இஸ்லாமியத்தை இழிவுபடுத்தி விட்டார் எனவே இவரை கொல்பவர்களுக்கு இவ்வளவு தொகையென. சல்மான் ருஷ்டிக்கு satanic verses எழுதியதிற்காக அறிவிக்கப்பட்ட பத்துவா உலகப் பிரபலம். தஸ்லிமா நஸ்ரினும் அவருடைய லஜ்ஜா நாவலுக்காக இப்படி நாடு விட்டு நாடு துரத்தப்பட்டார். சமயங்களில் உள்ளூரிலும் சில பத்துவாக்கள் சத்தமில்லாமல் அறிவிக்கப்படுகின்றன.
நாற்பத்தாறு வயதான ஜோ.டி.குருஸ் தமிழின் மிக முக்கிய படைப்பாளிகளில் ஒருவர் .இவருடைய ஆழி சூழ் உலகும் கொற்கையும் தமிழில் காத்திரமான நாவல்கள். இந்த நூற்றாண்டில் பரதவர்களைப் பற்றியான ஆகச் சிறந்த கலையாக்கங்கள்.
தமிழ் சமூகத்திற்கு பரதவர்களைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவர்கள் அறிந்ததெல்லாம் கிலோ கணக்கில் ரோஸ் பவுடர் அப்பிய படகோட்டி எம்.ஜி.ஆர் பரதவரையும், கட்டுமரக்காரனின் 120 கிலோ எடை கொண்ட பிரபு பரதவரையும்,நிலவே வா வின் மெலிந்த விஜய் பரதவரையும் தான். கோடம்பாக்கத்து பரதவர்களையே அவர்கள் அறிவார்கள். அசல் பரதவர்களையும்,அவர்கள் வாழ்க்கையையும்,வலியையும் அறியாதது.
இப்படியான ஒரு தமிழ்ச் சூழலில்தான் ஜோ.டி.குருஸ் எழுத வருகிறார்.ஆழி சூழ் உலகு பரதவர்களின் வலி மிகுந்த வாழ்வையும்,கொற்கை அவர்களின் வீழ்ச்சியையும் முன் வைக்கிறது.கொற்கையைப் பற்றி ஒரு விரிவான அறிமுகத்தை காட்சியில் விரைவில் எழுதவிருக்கிறோம்.
ஒரு பெரும் வணிகக் கப்பல் நிறுவனத்தில் பொது மேலாளராகப் பணிபுரியும் ஜோ.டி.குருஸ் தனது கடுமையான பணிகளுக்கு மத்தியில்தான் இந்த படைப்புகளை உருவாக்கியிருக்கிறார் .கள ஆய்வு, நூல்களில் தரவுகளைத் தேடுவது ,தரை வழி மற்றும் கடல் வழியாக நீண்ட பயணங்கள் என பனிரெண்டு வருட கால உழைப்பு இந்த நூல்களுக்குப் பின் உள்ளன ’’என்ன கப்பல் கவிழ்ந்த மாதிரி உட்கார்ந்திருகிற” என்பது நம் சொல் வழக்கு. நிஜத்தில் தினமும் குரூஸை நம்பி பத்து கப்பல்கள் துறைமுகத்தில் நின்று கொண்டிருக்கின்றன.
தமிழ்ச் சூழலில் படைப்புகளுக்காக மெனக்கெடுபவர்கள்,கடுமையாக உழைப்பவர்கள்,கள ஆய்வு மேற்கொள்பவர்கள் மிகக் குறைவு.
நான் மிக உறுதியாகச் சொன்னேன் குரூஸிடம் ”கொற்கை பரதவர்களின் பைபிள்” என்று. கொற்கையை படித்துவிட்டு வண்ணதாசன் சொன்னாராம் ”உன் புறங்கையை நக்கினாலும் உப்புச் சுவையே இருக்குமென”.
ஆனால் ஆழி சூழ் உலகும்,கொற்கையும் குருஸ்க்கு தனிப்பட்ட முறையில் கொடுத்திருப்பது வேறு.அவரதுசொந்த ஊரான உவரியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வசிக்கும் பரதவர்களில்அதை மேலோட்டமாக அல்லது ஆங்காங்கே படித்தவர்கள்,அல்லது குறித்துக் கொடுத்ததைப் படித்தவர்கள் அதை ஒரு கொச்சையான பாலியல் புத்தகமென குற்றம் சாட்டினார்கள்.பாதிரியார் ஒருவர் நடுப்பூசையில் புத்தகத்தை கையில் எடுத்துக் காட்டி ”இது சாத்தனுடைய ஆபாச புத்தகம் இதை வைத்திருப்பவன் கடவுளுக்கு எதிரானவன்.இந்த புத்தகத்தை எரிப்பதின் மூலமே ஒருவன் தன்னை ஒரு நல்ல கத்தோலிக்கனாக வைத்திருக்க முடியும்” எனவும் அறிவித்தார் .பெண்கள் மத்தியிலும் இவ்வாறே வதந்தி பரப்பப்பட்டுள்ளன. இன்னும் கூடுதலாக ஊருக்கு குருஸ் எப்படி வருகிறான் என பார்த்துவிடுவோம் என்று அறிவித்திருப்பவர்களும் உண்டு. குருஸ் வீட்டிற்குச் சென்று பெரும் தகராறு செய்து விட்டுப் போய் இருக்கிறார்கள்.ஆழி சூழ் உலகு 2004 ஜனவரியில் வெளிவந்ததின் பிறகு குருஸ் உவரி(நெல்லை மாவட்டம்)க்கு போகவே யில்லை.
என்ன நடக்கிறது நம் தமிழ் சமூகத்தில்?ஒரு காத்திரமான படைப்பாளனுக்கு ஏன் இந்த எதிர் வினைகள்?அப்படி என்ன செய்து விட்டார் குருஸ்?.தேவாலய பாதிரியார்களாலும், சர்ச்சுகளாலும், பரதவர்கள் எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறார்கள் என்பதைச் சொன்னார். அதை மட்டும் அல்ல வேறு நிறையவும் சொல்லியிருக்கிறார்..நல்ல பாதிரியார்கள் பற்றியும் சொல்லியிருக்கிறார். பரதவர்களின் மேன்மைகளையும் கீழ்மைகளையும் சொல்லியிருக்கிறார்.இப்படியெல்லாம் சொன்னதினால் தனது சொந்த ஊருக்குப் போக முடியாமல் இருக்கிறார். குருஸின் ஆதங்கமெல்லாம் ஒரு பரதவர் கூட சரியாக தனது படைப்பை உள்வாங்கி வாசிக்கவில்லையே என்பதுதான். தமிழ் படைப்புலகம் குருஸைக் கொண்டாடியது. ஆழி சூழ் உலகு வெளிவந்தவுடன் சென்னை மலையாள சமாஜம் அதற்கு பாராட்டு விழா நடத்தியது.கொற்கையில் இருக்கும் தோணிகளைப் பற்றியான தரவுகளையே இந்தியக் கப்பல் கழகம் தனது ஆதாரமாக எடுத்துக் கொண்டது
.ஒரு படைப்பாளிக்கு முள் வேலியிடும் சுதந்திரத்தை யார் அவர்களுக்குக் கொடுத்தது. ஒரு வேளை ஈரானிலிருக்கும் அலாத்துலா கோமேனிகள் கடல் வழி மார்க்கமாக உவரிகளிலும் இறங்கிவிட்டார்கள் போலும். போன வாரம் குருஸின் ஊரிலிருந்து பனங்கிழங்கு அனுப்பியிருந்தார்களாம். குருஸ் அந்த பனங்கிழங்கை எடுத்து முகர்ந்து பார்த்ததின் வழி தன் ஊர் மனத்தை நூகர்ந்தேன் என்றார்.தன் மகனையும் ஊர் மணத்தை நுகரச் சொன்னேன் என்றார்.இந்த கோடை விடுமுறைக்கு குருஸின் தந்தை தன் பேரப் பிள்ளைகளை ஊருக்கு அனுப்பச் சொல்லியிருக்கின்றார். குருஸ் ஊருக்கு வரக்கூடாது என்ற ஒரே நிபந்தனையோடு.
குருஸ் எனது இந்தக் கட்டுரை அவரை அவரது ஊருக்கு கொண்டு சேர்க்குமா என்று கேட்டார்.என்னிடம் அதற்கு பதில் இல்லை.
ராயபுரத்தில் மழை பெய்யும் விடுமுறை தினத்தில் நிச்சயம் குருஸ் தன் மகனுக்கு, மகளுக்கு காகிதக் கப்பல் செய்து கொடுத்திருப்பார். கொடுப்பார். ஒரு வேளை அந்தக் காகிதக் கப்பலின் வழிதான் குருஸ் உவரிக் கடற்கரைக்குப் போய் இறங்க முடியுமோ என்னவோ…
குருஸின் ஆத்மாவான ஆழிசூழ்உலகையும் கொற்கையின் ஆயிரக்ககனக்கான பக்கங்களையும் படித்து உணராத படிக்க விரும்பாத பரதவர்கள் எனது இந்த ஒரு பக்கத்தையேனும் படிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு…….
சாம்ராஜ்.
ஜோ.டி.குரூஸின் நாவல்கள்1.ஆழி சூழ் உலகு –முத்ற்பதிப்பு ஜனவரி2004.விலை ரூ 280. பதிப்பகம்: தமிழினி. 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை,சென்னை -600 014. பேசி:98841 96552. www.tamizhini.com
2.கொற்கை-, முதற்பதிப்பு டிசம்பர் 2009.விலை ரூ 800. 669, பதிப்பகம்: காலச்சுவடு, 669,கே.பி.சாலை, நாகர் கோவில் – 1. பேச:04652-278 525. kalachuvadu@sancharnet.in

