பிரியமான நண்பர்களே..

காட்சி வாசகர்கள் கவனத்திற்கு... காட்சி மறுபடியும் புதிய உத்வேகத்துடன் செயல்பட தீர்மானித்துள்ளது. ஆகவே படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி- காட்சி. kaattchi@gmail.com

March 20, 2010

ஸ்பெயின் ஓவியங்களும் சென்னை வாழ் நானும் - இயக்குநர் ராம்

காயத்ரி காமூஸின் ஒவியங்கள் ஓர் அறிமுகம்
அல்லது அவை தந்த காட்சி
அல்லது திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கிடைக்கப் பெற்றது.

பறவைகள், நதிகள், மரங்கள் வெறுத்து புறக்கணித்த சென்னையில் தான் இன்று போலவே 2006 ஜனவரியிலும் வாழ்ந்து கொண்டிருந்தேன். சதுரமும் செவ்வகங்களும்மாய் ஆன கட்டிடங்களுக்கு நடுவே வட்டமிட இயலாத என் மனம் பொறியில் அகப்பட்ட எலியாய் சதா கீறிச்சிட்டுக்கொண்டே இருந்தது.



காவல்துறையினரின் கேள்விகள் இல்லாமல் இரவில் சுற்றி அலைவதற்கும், நட்சத்திரங்களுக்கு அடியில் அறிமுகம் மற்ற மனிதர்கள் எறும்புகள் நாய்கள் அகீயோரோடு படுத்து உறங்குவதற்கும், சிவனின் வாசஸ்தலம்மெனவும் புனித மலை எனவும் பலவாறு சொல்லப்பட்டு வந்த வருகிற திருவண்ணாமலைக்கு கிளம்பினேன்.

சிறுதலையணையும் சன்னப் போர்வையும் பெட்ரோல் டேங்க் மேல் நெடுஞ்சாலைக் காற்றில் படபடக்க என் இரு சக்கர வாகனம் காற்றில் தளும்பிய வாறு போன போது தெரியாது என் அப்பயணம் என்னைத் திருவண்ணாமலையைத் தாண்டி ஸ்பெயினுக்கு அழைத்துப் போகும் என. காயத்ரி காமூஸ் என்ற ஸ்பெயின் தேசத்து ஒவியரை இப்பயணத்தில் தான் முதன் முதலில் சந்தித்தேன். ஆனந்தா என்ற மலையாளக் கவிஞரைத் திருமணம் செய்து திருவண்ணாமலையில் நிரந்தரம்மாய் தங்கிவிட்ட ஓவியர். திருவண்ணாமலையும் அவரின் ஓவியங்களும் என்னையும் என் மனிதர்களையும் நான் தற்காலிகம்மாய்த் தப்பிப் போன சென்னையையும் நினைவுப்படுத்தி கேள்விகள் எழுப்பிக் கொண்டே இருந்தது.இன்னமும் இருக்கிறது.

1. பொளர்ணமி இரவில் பக்தர்களால் ரொம்பும் திருவண்ணாமலையைச் சுற்றும் தார் சாலையால் ஆன பாதை மற்றொரு சாலை காட்டினுள் மலையத் தொட்டவாறே யாருக்கும் தெரியாமல் ரகசியம்மாய் பல் நூற்றாண்டுக் கற்களோடு இருக்கும். இப்பாதையில் நான் சுற்றிய போது வண்ணத்துப் பூச்சிகள் என் உடலின் உறுப்பைப் போல் வெகு அண்மையில் என்னைச் சுற்றிப் பறந்த வண்ணம் இருந்தன.சென்னையில் கடந்த ஒரு வருடத்தில் ஒரு வண்ணத்துப் பூச்சியும் பறக்கவில்லை. அல்லது பறந்ததை என் மனம் பார்க்கவில்லை. அவற்றிற்கு என்னவாயிற்று? எழில் மிகு சென்னை 2000த்தில் அவற்றிற்கு இடமில்லையா? யார் அதனை அப்புறப்படுத்தினார்கள்? அல்லது எது என் மனதை அதனைப் பார்க்கவிடாமல் தடுத்தது? ஒருவேளை “of the same matter" என்று தலைப்பிடப்பட இவ்வோவியத்தில் இருக்கும் மனிதன் சென்னையில் பறந்த பட்டாம் பூச்சிகளை அவன் அசுர பசிக்கு இரையாக்கினானா? அல்லது பட்டாம்பூச்சிகளை பார்த்த மனதை என் போன்றவர்களிடம் இருந்து கபளீகரம் பண்ணிவிட்டானா? அவன் நாசியில் தொங்குவது கொல்லப்பட்ட பட்டாம்பூச்சிகளின் வாசம்மா அல்லது என் போன்றோர் தொலைத்த மனதின் வண்ணம்மா?

இவ்வோவியத்திற்கு என் தலைப்பு : மரணித்த வண்ணத்துப்பூச்சிகளின் வாசம்


2. காயத்ரியைச் சந்திப்பதற்கு முந்தைய இரவு நட்சத்திரங்கள் கொட்டிய மரத்தினடியில் கழிந்தது மிக அமைதியாக அந்த இரவை போலவே. இரவில் இரவைப் போலவே உறங்கினேன் வெகு நாட்களுக்குப் பிறகு. மறுநாள் ”skin and small stones united by gravity" இவ்வோவியத்தைப் பார்த்த போது புரிந்தது நானும் என் சருமமும் மென்மையானவர்களாகவும் மெருகு கூடியவர்களாகவும் ஆனதின் காரணம். கற்களின் மேல் உறங்கிய போது நானும் கல்லாய் மாறியிருக்கிறேன்.
இவ்வோவியத்திற்கு என் தலைப்பு: இரவைப் போலவே ஆன உறக்கம்.
3. "in a land without trees என்று பெயரிடப்பட்ட இவ்வோவியத்தில் இருக்கும் மனிதன் உலகமயம்மாக்கலுக்கு உட்பட்ட ஒரு நகரத்தில் வாழ்பவனாய் இருக்க வேண்டும். கலை இலக்கியம் பயின்ற ஒருவனாய் இருக்க வேண்டும். நகர வாழ் முறைக்கு போதிய பணம் இல்லாதவனாய் இருக்க வேண்டும். அடுத்தவரின் ஆடம்பரமும் வாழ்வு முறையும் இவனை சதா இம்சிக்கும்மாறு இருக்கும். நைக் சூ விற்காகவோ, ரேபான் கிளாஸ்ஸிற்காகவோ, ஒரு வாய் பிஸ்ஸாவிற்காகவோ கொலை செய்பவனாய் இவன் இருக்கக் கூடும். இவனை இவ்வுலத்தின் நகரங்களில் எல்லாம் பார்க்க முடியும்.
குறிப்பு: கற்றது தமிழ் பிரபாகரனும் இவனும் ஏறக்குறைய ஒன்றே. கற்றது தமிழ் படத்து விளம்பரத்திற்கு பயன் படுத்த நான் விரும்பிய ஒவியம் இது.
இவ்வோவியத்திற்கு என் தலைப்பு: கற்றது தமிழ் “ பிரபாகர்”




4. “when something covers my eyes i can see better inside" என்று தலைப்பிடப்பட்ட இவ்வோவியத்தில் இருக்கும் பெண் என் அம்மா என எனக்கு தோன்றியது. என் நினைவு சரியாக இருக்கும் என்றால் 12 வருடங்களில் நாங்கள் 24 வீடுகள் மாறினோம். ஒவ்வொரு முறையும் 70க்கும் மேற்பட்டத் தொட்டிச் செடிகளும் எங்களோடு இருப்பிடம் மாறும். பீரோ கண்ணாடி உடைந்ததற்கு வருத்தப்படாத அம்மா ஒரு தொட்டி உடைந்ததற்கு வருத்தப்பட்டிருக்கிறாள். ஒவ்வொரு முறையும் வீடும் மாறும் போதும் நான் செடித்தொட்டிகளைச் சுமக்க வைத்ததற்காய் அவளிடம் கோபப்பட்டிருக்கிறேன்.’விடுறா அவ விருப்பம் அது’என அப்பா சமாதானம் சொல்லியிருக்கிறார்.இப்ப அம்மாவிற்கு சொந்த வீடும் சிறுந்தோட்டமும் இருப்பதால் செடித் தொட்டிச் சுமக்கும் அசதி எனக்கில்லை. போன வருடம் தொலைக்காட்சியில் நான் ‘national georgrahic" சேனல் பார்த்துக் கொண்டிருந்த போது அருகில் இருந்த அம்மா சொன்னாள் தான் நிஜம்மான காடை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று.எனக்கு இப்போது புரிகிறது வாழ்வு முழுவதும் என் அம்மா தன்னுடைய பொய்க்காடை 70 தொட்டிகளில் பாதுகாத்திருக்கிறாள் என.
இவ்வோவியத்திற்கான என தலைப்பு: அம்மாக்களின் பொய்க்காடுகள்
5. திருவண்ணாமலையில் சாதுக்கள் மட்டும் இன்றி குரங்குகளும் உண்டு. கல் பெஞ்சில் உறங்கிய ஒரு நல் இரவு. அர்த்த இராத்தரி விழிப்பில் என் கால் மாட்டில் என்னையே பார்த்தவாறு இருந்த குரங்கைக் கண்டேன். சிறிது நேரம் இருவரும் பார்த்துக் கொண்டே இருந்தோம். பின் என்ன நினைத்ததோ ஒரே தாவில் கல் பெஞ்ச் பின்புறம் இருந்த காட்டில் மறைந்தது. எனக்கு உறக்கம் போனது. எனக்கு நல்ல உறக்கம் வாய்ப்பதற்காய் இக்குரங்கு என்னிலிருந்து வெளி வந்ததா? இல்லை நான் உறங்கும் போது குரங்காய் இருந்தேனா? விழித்ததும் என்னிலிருந்து வெளியில் வந்து அமர்ந்ததா?. நான் உறங்கும் போது மனிதனா? விலங்கா? பதில் தெரியவில்லை, உறக்கமும் வந்தபாடில்லை. ஆனால் “gardener and monkey wait for the forest" என்று தலைப்பிட்ட இவ்வோவியம், நல்ல உறக்கம் வாய்க்கப் பெற உறங்கும், போது விலங்காய் இருங்கள் என்று சொல்வதாய் எனக்குத் தோன்றியது.
இவ்வோவியத்திற்கு என் தலைப்பு: உறங்கும் போது விலங்காய் இரு


6. மூன்று நாட்களுக்குப் பிறகு சென்னை திரும்பினேன். அதே தேசிய நெடுஞ்சாலை.தாங்க வொன்னா அதே ஹாரன் சப்தங்கள், அதே ஆடுகள் நெடுஞ்சாலையைக் கடப்பதற்காய் நின்று கொண்டிருந்தன. ஆடுகள் கடப்பதற்காய் ஒரு ராட்சச வண்டியின் ஓட்டுநர் பிரேக்கை அமுத்தும் வரை அவைகள் காத்திருக்கும் என்ற நினைப்போடு நீண்ட வண்டிகளின் பின்னால் என் இரு சக்கர வாகனம் இயந்திர கதியில் ஓடிக்கொண்டே இருந்தது.

இவ்வோவியத்திற்கான என் தலைப்பு: நெடுஞ்சாலையில் வழியைத் தொலைத்தவர்கள்
காயத்ரி காமூஸ்ஸின் இந்த ஓவியங்கள் மட்டும் இன்றி மற்ற ஒவியங்களும் திருவண்ணாமலையின் அந்த 2006 ஜனவரியின் மூன்று நாட்களும் நான் இயற்கையின் ஒரு பங்கு என எனக்குச் சொன்னது. ஆனால் நான் இந்த நகரத்தில் இருந்து தப்பவும் முடியாது. கற்றது தமிழ் பிரபாகராய் ஆகவும் முடியாது. நான் இங்கு வாழ்ந்தே ஆக வேண்டும். நான் என்ன செய்ய முடியும். என் அம்மாவைப் போல் நானும் பொய்க்காடுகளைக்குறித்து யோசிக்க வேண்டியதுதான். சன்னல் வழி விழும் கடும் சூரியனின் வெம்மையை மறைக்க சன்னலைத் திரையிடுகிறேன். அப்படியும் வெம்மை குறையாமல் இருக்க அருகில் இருந்த புத்தகத்தால் முகத்தை மூடிக் கொள்கிறேன்.
காயத்ரி தன் ஓவியத்திற்கு தலைப்பிட்டது சரிதான் போலும் when something covers my eyes i can see better inside என் கண்களை எதாவது மூடும் பொழுது நான் என் அகத்தை நன்றாக பார்க்க முடிகிறது.
ராம்
காயத்ரியைப் பற்றி
Gayatri gamuz was born in rojales, alicante in 1966.
1985 - 86 studied first and second course in social work in the university of alicante.
1987 - 88 studied first and second course in the art school of alicante.
1988 first contact with india , traveled for th period of 6 months.
1990 - 91 studied first and second course in the escuela de ceramica de manises.
1991 second visit to india for a period of one year. got married to indian english writer ananda surya.
1992 started her professional career as a painter and sculptor with the artistic name of gayatri gamuz






தொடர்பு

படைப்புகள் மற்றும் பின்னூட்டங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kaattchi@gmail.com