காட்சி வாசகர்கள் கவனத்திற்கு..
ஆவணப்பட இயக்குநர், தமிழ்தேசிய ஆர்வலர், இயற்கைவேளாண்மை ஆர்வலர் என பன்முக தன்மை கொண்ட ம. செந்தமிழன் அவர்கள் எழுதிய இராசராசச் சோழர் தமிழிய ஆய்வு என்ற குறுநூல் காட்சியில் தொடராக வருகிறது -காட்சி
பகுதி -6
இராசராசச் சோழர் காலம் - தொடர்ச்சி
பிரமதேயங்களுக்கு இராசராசச் சோழர் நிலம் வழங்கவில்லை. மாறாக, பிரமதேயங்களின் உற்பத்தியில் பிராமணர்களுக்கு ஒரு பங்கு வழங்கப்பட்டது.
சான்றாக,
ஒரு பிரமதேயச் சபைக்கு சில கிராமங்கள் வழங்கப்பட்டுகிறது என்றால், அந்த கிராமங்களின் நில உடைமை வழங்கப்படுவதில்லை. அந்த கிராமங்களின் மொத்த விளைச்சலில் குறிப்பிட்ட அளவுக்கு பங்காக பிரமதேயச் சபை பெற்று வந்த்து. 100 மூட்டைகள் நெல் விளைகிறது என்று வைத்திக் கொண்டால், பிரமதேயச் சபைக்கு 10 விழுக்காடு பங்கென்றால் 10 மூட்டைகள், 5 விழுக்காடு என்றால் 5 மூட்டைகள் அல்லது ஒப்பந்த்தில் உள்ள விழுக்காடு மூட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டன. மீதமுள்ள மூட்டைகள் அந்த கிராமங்களின் பல்வேறு குலத்தவருக்கும் வழங்கப்பட்டன. வண்ணார், தச்சர், நாவிதர், கொல்லர் போன்ற வேளாண்மை சாராத குலத்தவருக்கும் இந்தப் பங்குத் தொகை வழங்கப்பட்ட்து.
இந்த விவரங்களை மிகத் தெளிவாக ஆய்ந்து எழுதியவர் ஆய்வறிஞர் மே.து.இராசுகுமார். அவரது, சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல்’ எனும் நூலில் மேற்கண்ட தகவல்களைக் காணலாம்.
இனி,
இராசராசச் சோழர் காலத்தின் அதிகார மட்டத்தில் உயர் நிலையில் இருந்தோர் வேளாளர் ஆவர். வேளாளர் என்பது இன்று சாதியைக் குறிக்கிறது. ஆனால், அக்காலத்தில் அது சாதி அல்ல. அது ஒரு தொழிற் குலம். உழுவித்து உற்பத்தி செய்வோர் அனைவரும் வேளாளர்தான். ஏற்கனவே கண்டவாறு, பறையர், கம்மாளர் ஆகியோருக்கு தேவதான நிலங்கள் வழங்கப்பட்டமையால், அக்குலத்தவர் எல்லாம் வேளாளர் பிரிவில் இருந்தனர். அதாவது, நிலவுடைமை இருந்தால் பறையரும் வேளாளரே, பள்ளரும் வேளாளரே!
இக்குலத்தவரிலேயே எல்லாருக்கும் நிலம் இருக்கவில்லை. சோழர் காலத்தில் இருந்த இரு வகைப் பறையர்களைக் குறிக்கும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
1. உழு பறையர்
2. புல்லுப் பறையர்
- ஆகியோரே அப்பிரிவினர்.
- இவர்களில் உழு பறையர் என்போர் வேளாளப் பிரிவினர் எனலாம். புல்லுப் பறையர், நில உடைமை அற்றோர். இவர்கள் பறையர் குலத்தவர்தான் எனினும், சமூகத்தின் அடிமட்டத்தவர். இது வர்க்கப் பாகுபாடு. சாதிப் பாகுபாடு அல்ல. எனவேதான், ஒரே குலமான பறையர் குலத்திலேயே இவ்வாறான நேர் எதிர் நிலைகள் இருந்தன.
ஆகவே,
1. இராசராசர் காலம் பிராமணர் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தியது
2. பிரமதேய நிலங்களின் உரிமை பிராமணரிடம் இருந்து பறிக்கப்பட்டு, உற்பத்தியில் பங்கு மட்டுமே வழங்கப்பட்டது.
3. கோயில்களின் நிர்வாகம் தமிழரிடம்தான் இருந்தது.
4. கோயில்களில் தவறிழைத்த பிராமணர்களுக்குத் தண்டம் விதிக்கப்பட்டது.
5. கோயில் வழிபாடுகள் தமிழில்தான் நடத்தப்பட்டன. அரிதாக, சில இடங்களில் சமக்கிருதம் வழிபாட்டு மொழியாக இருந்தது.
6. பறையர், கம்மாளர் உள்ளிட்ட தமிழ்க் குலத்தவருக்கு தேவதான நிலங்கள் வரியில்லாதவையாக வழங்கப்பட்டன.
7. இதன் வழியே, அரசதிகாரத்தில் உயர் நிலை அடைந்திருந்த வேளாளர் பிரிவில் மேற்கண்ட குலத்தவருக்கும் பங்கு கிடைத்தது. அதாவது, இக்குலத்தவர் அரசின் அதிகார மட்டத்தில் இருந்தனர்.
8. மேலும், இராசராசர் காலத்தில் சாதிய ஒடுக்குமுறை நிலவவில்லை. அவ்வாறு கூறுவதற்கான எந்தச் சான்றும் இல்லை. அவ்வாறான சான்றுகள் இருந்தால், திரிபுவாதிகள் முன் வைக்கட்டும்.
9. திராவிடரான களப்பிரர், பல்லவர் ஆகியோரின் 700 ஆண்டுகால பிராமணச் சார்பு வரலாற்றை, இராசராச தன் 29 ஆண்டு கால ஆட்சியில் மாற்றியமைக்க முயன்றார். ஓரளவு வெற்றி கண்டார்.
10. இராசராசச் சோழர் காலத்தில் சாதியத்தின் தொடக்கக் கூறுகள் இருந்தன. அவை சாதிகளின் வளர்ச்சியடைந்த வடிவங்கள் அல்ல. களப்பிரர் – பல்லவர் காலத்தின் விளைவுகள்தான் இவை. பிற்காலச் சோழர் காலத்தில் தோன்றி வளர்ந்தவை அல்ல. தமிழகத்தைக் களப்பிரர் – பல்லவர் ஏறத்தாழ 821 ஆண்டுகள் ஆண்ட பின்னர் தோன்றிய அரசே பிற்காலச் சோழர் அரசு என்பதைக் கவனிக்க வேண்டும்.
தொடரும்....
ம.செந்தமிழன்.

