சுமதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் குக்கிராமம் மல்லிபுதூரைச்சார்ந்தவர். முதல் தலைமுறை பட்டதாரி. இளங்கலை தமிழ், சிவகாசிsfr கல்லூரியிலும், முதுகலை தமிழ் மதுரை அமெரிக்கன்கல்லூரியிலும் இளநிறை ஆய்வை சென்னைக்கிறித்துவக் கல்லூரியிலும் பயின்றவர். தற்போது கோவையில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். இவருடைய கவிதைகள், கட்டுரைகள், காலச்சுவடு,கணையாழி, புதிய பார்வை, நந்தன், தமிழரசி, ஆனந்தவிகடன்,வார்த்தை, வடக்கு வாசல், அமிர்தா,கதைசொல்லி ஆகிய இதழ்களில்பிரசுரமாகி இருக்கின்றன.
அதை தொடர்ந்து ”கோடிட்ட இடங்களை நிரப்புக” என்ற தலைப்பில் காட்சியில் தொடர்கதை வெளிவருகிறது.
பகுதி 2
ஒவ்வொரு வருட விடுமுறையும் மஹாராஷ்ட்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் இருந்த மாகாம் கிராமத்தில்தான் கழித்து வந்தாள். விடுமுறை தொடங்குவதற்கு ஓரிரு நாட்கள் முன்பாகவே தாத்தா கடிதம் எழுதிவிடுவார் அப்பாவுக்கு. அம்மா, கடைசி தங்கையுடன் வந்து அவளை அழைத்துக் கொண்டு போவாள்.
சில சமயம் அம்மா வராத சூழ்நிலையில் தாத்தாதான், மொழி தெரியாவிட்டாலும், அவளை அழைத்துக் கொண்டு போய் விட்டுவிட்டு வருவார். மாகாம் போவதற்குப் பெரும்பாலும் பேருந்து பயணமாகத்தான் அமையும். பதிவு செய்யாமல், கிடைக்கின்ற பேருந்துகளில் ஏறிப்போவார்கள்.
அப்படி போகும்போது விதவிதமான ஊர்கள், நகரங்கள், மனிதர்கள், மரங்கள், வயல்கள், மலைகள் எல்லாம் வேகவேகமாக கடந்து போகும். அந்த பேருந்து பயணம் தான் அவளுக்குப் பிடித்திருந்தது. அங்கு போவதென்னவோ சுற்றுலா போவது போலவே இருக்கும் அவளுக்கு. தேர்வு முடிந்த மறுநாளிலிருந்து ஊருக்குப் போவதைப்பற்றிய கனவுகளில் மூழ்கிவிடுவாள்.
முதன் முதலில் கந்தசாமி சித்தப்பாதான் மஹாராஷ்டிராவிற்கு சாந்தியை அழைத்துச் சென்றார். சாந்தியுடன் சீனிதாத்தாவும் வந்தார். கந்தசாமி சித்தப்பா அப்பொழுது கார்னேசன் அச்சகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். சாந்தியின் அப்பா சுற்று வட்டாரத்தில் இருந்த பேக்கரிகளுக்கான அடையாளச்சீட்டுகள், காகித உறைகள் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களை, அலைந்து திரிந்து சித்தாப்பாவுக்கு வாங்கிக் கொடுத்தார். சித்தப்பா அதை அச்சிட்டுக் கொண்டு, வருடத்திற்கு இரண்டுமுறை கொடுத்துவிட்டு வருவார். அப்படிப்பட்ட ஒரு சமயத்தில் ஆறாம் வகுப்பு போக இருக்கும் தன் மகளையும், தன் மாமனாரையும் கோடை விடுமுறையில் உடன் அழைத்து வரும்படி கூறியிருந்தார் சாந்தியின் அப்பா.
முன்பதிவு செய்யாது, பல்வேறு பேருந்துகளில் 30 மணி நேரத்திற்கு மேலாக பயணம் செய்து போனார்கள். விதவிதமான ஊர்கள். விதவிதமான மனிதர்கள், வாகனங்கள், கட்டிடங்கள் வியப்பில் ஆழ்த்தின. பேருந்தில் ஏறிய அரை மணி நேரம்தான் சாந்தியால் தாக்குப்பிடிக்க முடிந்தது. ஓடிப்போகும் மரங்கள், கட்டிடங்களைப் பார்க்க பார்க்க வாந்தியுடன் தலைவலியும் சேர்ந்து கொள்ளும். சோர்ந்துவிடுவாள். தலைசாய்த்து கண்மூடிக்கிடந்து அப்படியே தூங்கிவிடுவாள்.
ஒவ்வொரு பெரிய நகரத்தையும் சென்றுசேர அதிகமான நேரம் ஆனது. சிவகாசியிலிருந்து மதுரைக்கு அர்த்தராத்திரியில் கிளம்பிப் போவார்கள். 2 மணி நேரத்தில் மதுரை வந்து விடும்.
பேருந்து நிலையத்தில் சாந்தியை உட்கார வைத்துபயணப்பெட்டிகளைப் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு, பெங்களூர் செல்லும் பேருந்து நிற்குமிடத்தைப் பார்த்து வரப்போனார்கள் சித்தப்பாவும் தாத்தாவும். நெத்திலி, உப்புகருவாடு, சின்னவெங்காயம், பூண்டு, 5 கிலோ புழுங்கலரிசி, வெங்காயம், அதிரசம், பால்கோவா, அடங்கிய பயணப்பைகளை பார்த்துக்கொண்டாள். சாந்தியின் அப்பா, இந்த அயிட்டங்களை வாங்கி வரும்படி மாமனாருக்குக் கடிதத்தில் எழுதியிருந்தார்.
மறுநாள் மதியம் பெங்களூர் போய் சேர்ந்தார்கள். அகண்ட நீண்ட சாலைகள், தொடர்ந்து இயங்கும் வாகனங்கள், சுற்றுவட்டாரத்தில் பார்த்திராத உயர்ந்த கட்டிடங்களை பார்த்தாள். தென் தமிழகத்தை கோடை வாட்டி எடுத்தது. ஓசூர் வந்ததும் பசுமை போர்த்திய நிலங்கள் தாண்டி உப்புசத்தைக் குறைத்திருத்தது.
ஆறாம் வகுப்பு சாந்திக்கு பெங்களூரில் தெரிந்திருந்த நபர் ஒருவரே ஒருவர்தான் இருந்தார். அவர் நடிகை சரோஜாதேவி.
ஏதோ ஒரு வாரப்பத்திரிக்கையில் படித்திருக்கிறாள் அவள் பெங்களூரில் இருக்கிறார் என்று. ஒரு பங்களாவைப் பார்த்து இது போன்றதொரு பங்களாவில் தான் வசிப்பாரோ என நினைத்துக்கொண்டாள். சரோஜாதேவியின் கார் நிச்சயமாகத், தான் பயணம் செய்யும் இந்த பெங்களூர் சாலைகளில் பயணம் செய்திருக்கக்கூடும் என்று சந்தோசப்பட்டாள். இனி ஆறாம்வகுப்பு போகும் போது ஜெயந்தியிடமும் ஜெயாவிடமும் பெங்களூரில் இருக்கும் சரோஜாதேவியின் வீட்டை பார்த்துவிட்டதாக கதை சொல்ல வேண்டுமென நினைத்துக் கொண்டாள்.
அவர்கள் ‘பெல்காம்’ செல்வதற்குரிய பேருந்து மதிய நேரத்தில் இல்லை என்றார்கள். இரவு ஒண்பது மணிக்கு மேல்தானாம். மதுரையிலிருந்து பயணம் செய்து வந்த பேருந்தை விட்டு இறங்கியதும் கழிவறையைக் காட்டினார்கள். அவர்கள் போய்விட்டு வந்ததும் கந்தசாமி சித்தப்பா பக்கத்திலிருந்த ஒரு உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அவர் தயக்கமின்றி அழைத்துக்கொண்டு போனார். அவருக்கு அடிக்கடி வந்து போனதால் அவருக்கு பழக்கமாயிருந்தது.
அரிசியில் செய்த சாதம் ஒன்றைத்தவிர மற்ற உணவு வகைகள் எல்லாம் புதியதாக இருந்தன சாந்திக்கும், தாத்தாவுக்கும். கிண்ணங்களில் இருந்த எல்லா குழம்பு வகைகளும் பார்ப்பதற்கு இரசம் போலவே இருந்தன. சிறிது காரத்துடனும், சிறிது இனிப்புச் சுவையுடனும் இருந்ததை சாப்பிட்டுவிட்டுத் திரும்பினார்கள். மலங்க, மலங்க பார்த்தபடி (தாத்தாவின்) கைப்பிடித்தபடி, பெரிய சாலைகளைக் கடந்தாள். ஓரிரு நிமிடங்களில், தனித்தனியாக நின்றவர்கள் ஒன்று சேர்ந்து கைகோர்த்து சாலையைக் கடந்து போவதை வேடிக்கை பார்த்தாள். ஒரு ஊரே சாலையைக் கடப்பதுபோல் இருந்தது.
பேருந்தின் வழித்தடங்களுக்கான எண்களை கன்னடம், இந்தி, ஆங்கிலத்தில் சொன்னார்கள். கன்னடம் கொஞ்சமாக புரிந்தது. சாப்பிட்டதற்கும், பயணம் செய்த அலுப்பிற்கும் தூக்கம் தூக்கமாய் வந்தது. கொண்டுவந்த துணிப்பையில் தலைசாய்த்து சாந்தி தூங்கிப்போக தாத்தாவும் சித்தப்பாவும் அவளை பார்த்துக் கொண்டார்கள்.
மாலை 6 மணிக்கு எழுப்பிவிட்டு அதே உணவகத்திற்கு அழைத்துக் கொண்டு போய், தேநீர் வாங்கிக் கொடுத்தார்கள். திண்பண்டங்கள் காட்டி ”வேணுமா?” என்று சித்தப்பா சாந்தியிடம் கேட்டதற்கு வாந்தி வருவதாக சைகை காட்டினாள். குளிக்காமல் இருக்கும் தன் உடம்பின் வியர்வை நாற்றமும், பயணம் செய்யும்போது ஆடைகளில் ஒட்டிக்கொண்ட அழுக்கும், பேருந்தின் வாசமும் தான் தனக்கு இப்படி வாந்திவரக் காரணமாக இருக்கிறது என்று நினைத்துக்கொண்டாள்.
பெல்ஹாமுக்கு ஏறிப்போன பயணத்தின் போது பேருந்தில் உடனிருந்த யாரும் தமிழ் ஆட்கள் இல்லை. கன்னடம், ஹிந்தி பேசினார்கள். உடை, பேச்சு, அடுக்கிய வளையல்கள், கழுத்தில் இருந்த கருப்பு மணி மாலைகள் எல்லாமே வித்தியாசமாக இருந்தன. சாந்தியும், தாத்தாவும் அவர்களைக் கொஞ்ச நேரம் வேடிக்கைப் பார்த்துவிட்டுத் தூங்கிப் போனார்கள். தாத்தாவும் பேத்தியும் மாநிலம் கடந்து வேறு மாநிலத்திற்கு அப்பொழுதுதான் போகிறார்கள். ஊர் பெயர் சொல்லி பயணச்சீட்டு எடுக்குமளவிற்கு சித்தப்பா இந்தியும், கன்னடமும் கற்றுக் கொண்டிருந்தார்.
மறுநாள் காலையில் பெல்ஹாமில் இறங்கியதும் சாந்தி கேட்டாள். “வீட்டுக்கு இப்ப போயிடலாமா சித்தப்பா?” என்று. “மணி ஏழரைதான் ஆகிறது, வீடு போய்ச்சேர மதியம் மணி ஒன்று ஆகிவிடும்” என்றார். சாந்திக்கு மலைப்பாக இருந்தது. பெரிய பெரிய பூரிகளை வாங்கித் தந்தார் காலை சிற்றுண்டிக்கு. அங்கிருந்தவைகளில் ”பூரி” ஒன்று தான் அவளுக்குத் தெரிந்த,சாப்பிட்டு பழகிய சிற்றுண்டியாக இருந்தது. தாத்தாவும் சித்தப்பாவும் அதையே தான் சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்த அரைமணி நேரத்தில் வண்டி கிடைத்து ஏறிவிட்டார்கள்.
பெல்ஹாமிலிருந்து மஹாராஷ்ட்ரா மாநிலம் தொடங்கிவிடுவதாக சித்தப்பா சொன்னார்.
- சுமதிராமசுப்ரமணியம்

